05:30 | Author: அன்னைபூமி
            ஒரு சிறிய கதை - கேள்விபட்டிருக்கலாம், இருந்தாலும்... ஒருவன் தவளையை நிற்க வைப்பது பற்றி ஆராய்ச்சி செய்த கதைதான். முதலில் தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு "நில்" என்றானாம். மூன்று கால்களில் தவளை நின்றது. பிறகு இரண்டாவது காலையும் இழந்து " நில் " கேட்டு மீதி இரு கால்களில் நின்றது. அப்படியே மூன்றாவது காலையும் இழந்து ஒரு காலில் நின்றது. நான்காவது காலும் போனபின் நிற்க இயலாமல் தவளை அப்படியே கிடக்க , ஆராய்ச்சியின் முடிவை எழுதினான். நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் தவளைக்கு காது கேட்பதில்லை என்று.

         இது கொஞ்சம் பழைய விசயம்.   இதற்காக  
ஒரு    பக்கத்தை ஒதுக்கி  பதிவு செய்யவேண்டியிருக்கிறது. டார்வினின் கோட்பாட்டின்படி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நாம் நிமிர்ந்து மனிதனாய் நடக்க ஆரம்பித்ததே ஆராச்சியின் விளைவுதான். நம்முடைய ஐந்து புலன்களும் தெரிவிக்கின்ற சேதியை   அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் மறைந்துள்ள அர்த்தத்தையும் கண்டுணர வேண்டும். பழந்தமிழகத்தில் முன்பிருந்து மூத்தகுடியினர் இதில் தேர்ச்சி பெற்றிருந்ததால்தான் அரிய விசயங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. போகர், அகத்தியர்,  புலிபாணி போன்றவர்களின் பதிவுகள் இதனை பெரிதும் நிருப்பிக்கின்றன. அந்த திறமை தொப்புள் கொடி அன்பளிப்பாக வழிவழியே வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து விட்டது போல தோன்றுகிறது.

               கல்விமுறையின் கற்பித்தலின் முறைமாறி புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது, எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காணாமல் ஒப்பிப்பது
போன்றவை யோசிக்கும் ஆற்றலையே சிதைத்து விடுகின்றன. வாழ்க்கையிலும்    இதே கடைபிடிக்கப்படுகிறது. பெற்றோரோ ஆசிரியரோ கண்டித்தால், அவர்கள்  முற்றிலுமாக வெறுத்து விட்டதாகக்     கருதி தற்கொலை முயற்சி   மேற்கொள்வது  போன்ற மடமை உள்ளது. சமீபத்தில் காதலி இரண்டு நாட்களாக அலைப்பேசியில் பேசவில்லை என்று இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். ஒரு செயலோ சொல்லோ அதன் உட்கருத்தினை புரிந்துகொள்ளவேண்டும். இது போன்று ஆராய முற்படும்போது பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கதையை போல அன்றி உண்மை பொருளை கண்டு கருத்தில் கொள்ள வேண்டும். மகாகவி சொன்ன   "நுனியளவு செல்" என்பதன் இன்றைய பொருளும் இதுதான்.
 

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: