22:12 | Author: Ravi

  
மதுரையில் இருந்து தொடங்குகின்றது எங்கள் பயணம். ஒரு நாள் பயணம் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் பயணம் தொடங்குகின்றது. இரவு நேர பயணம் என்பதால் மதுரை – தேனி இடையேயான 75கிலோ மீட்டர் பயண தூரத்தை இரண்டே மணி நேரத்தில் கடக்கின்றது பேருந்து. தேனியை வந்தடைந்த நாங்கள் மலைப்பேருந்து வருவதற்குள் நாளைய பயணத்திற்கு தேவையான பொருட்களை பேருந்து நிலையத்தில் வாங்கிக்கொண்டோம். தேனியில் இருந்து 73கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேகமலை. 

மேகமலை பகுதியை வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு 2009 ஜூனில் அறிவித்தது.குமுளி ரோடு - சின்னமனூர்; கண்டமனூர் - எழுமலை வரை 26 ஆயிரத்து 910 எக்டேர் வனப்பகுதி சரணாலயமாக உள்ளது. தற்போது, 16.36 லட்ச ரூபாயை வனத்துறை ஒதுக்கியுள்ளது


     தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாக வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை நீர் வீழ்ச்சி, மேகமலை, வெள்ளிமலை மற்றும் போடி மெட்டு ஆகிய இடங்கள் உள்ளன.

மேகமலை செல்லும் மலைப்பேருந்து சரியாக அதிகாலை 3.30 மணிக்கு தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக பேருந்து சின்னமனூரை வந்தடைந்தது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த திருக்கோவில் ஆகும். இதன் அருகே முல்லைப்பெரியாறு ஆறு அழகாக இந்தக்கோவிலை கடந்து செல்கின்றது. தேனி கம்பம் நெடுஞ்சாலையில், சின்னமனூரில் இருந்து இடதுகைப்பக்கமாக செல்கின்றது மேகமலை செல்லும் பாதை.


  மேகமலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மேகமலை, கேரள பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. மலைப்பாதை தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு வனச்சரகம் சார்பில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இதைக்கடந்து சென்றால் முருகன் கோவில் வழியே மலைப்பயணம் ஆரம்பம் ஆகின்றது. மலையேற்றம் 20 கிலோ மீட்டர் தான் என்றாலும் மீதம்முள்ள 32 கிலோ மீட்டர் மலைக்குன்றுகளுக்கு இடையேயும் தேயிலைத்தோட்ங்களுக்கு இடையேயும் கழிகின்றது.

மலைப்பாதையில் முதல் நிறுத்தம் கர்டானா எஸ்டேட், தேயிலைத் தோட்டங்களும், ஏலக்காய் தோட்டங்களும் இங்கிருந்தே ஆரம்பம் ஆகின்றது. இந்த நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக சிறிய தேவாலையம் ஒன்று உள்ளது. இதற்கடுத்து உள்ள ஊர்தான் மேகமலை. இதமான குளிர் காற்று, பனிமூட்டம் வழியாக பேருந்து பயணிக்கின்றது. இதன் பின் ஹைவேவிஸ  என்ற நிறுத்தம் உள்ளது, இங்கே தான் மஞ்சள் ஆறு அணை உள்ளது. இங்கும், மகாராஜா மெட்டு மற்றும் இரவங்களாறு என்ற இடங்களில் மட்டுமே சிற்றுண்டி சாலைகள் உள்ளன.

சரியாக அதிகாலை 7 மணியளவில் மகாராஜா மெட்டு என்ற எல்லைப்பகுதியை வந்தடைந்தது பேருந்து, அடர்ந்த பனி மூட்டமும், இருக்கமான குளிர் காற்றும், எங்களை இனிதே வரவேற்றன. அங்குள்ள சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்தினோம், சற்று வித்தியாசமாகவே இருந்தது. மதிய உணவு வேண்டுமெனில் முன்னதாகவே இங்கு சொல்லிவைத்துவிட வேண்டும். இங்குள்ள மலைப் பகுதியின் உச்சியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கை நாம் பார்க்கலாம். அதிகாலைப் பொழுதில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானைக்கூட்டங்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம், மகாராஜ மெட்டு மலை உச்சியில் சிறிய காளி கோவில் ஒன்று உள்ளது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. சாலையோரம் ஈரப்பதம் மிகுந்த புல்வெளிகள் அதிகம், சற்றே தார் சாலையை விட்டு காட்டுப்பகுதிக்குள் கால் வைத்தால் பற்றிக்கொள்கிறது அட்டை, காலி கடிப்பதும் தெரியாது நம் இரத்தத்தை உறிஞ்சுவதும் தெரியாது, இதற்காக நாம் அதிகம் பயம் கொள்ள தேவையில்லை.இரவு நேரங்களில் இங்கே தங்குவது சற்றே கடினம், தங்கும் வசதியுள்ள அறைகள் மிகக்குறைவு, குளிரும் மிக அதிகம்.

வன விலங்குகளான சிறுத்தை, சிங்கவால் குரங்கு, மலை அணில், கேளை ஆடு , புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா,  புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி, மஞ்சள் ஆறு அணை, வென்னியாறு அணை, இரவங்களாறு அணை, தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை எழில்களை ரசித்தபின் 4.30மணிக்கு இரவங்களாறு பேருந்தின் மூலம் தேனிக்கு மீண்டும் பயணம் தொடர்கின்றது. . .....
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On July 23, 2011 at 10:21 PM , இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

 
On July 23, 2011 at 11:27 PM , kowsy said...

பயணக்கட்டுரை மிக சுவாரஸ்யமாகப் போகின்றது. வாழ்த்துகள்.

 
On July 23, 2011 at 11:29 PM , அன்னைபூமி said...

நன்றி ராஜி அக்கா. . .

 
On July 23, 2011 at 11:30 PM , அன்னைபூமி said...

வாழ்த்துரைக்கு நன்றி கௌரி mam. . .

 
On July 24, 2011 at 10:59 AM , Yaathoramani.blogspot.com said...

பயணக்கட்டுரை அருமை
எழுத்தின் வடிவம் படிக்க
கொஞ்சம் சிரமப்படுத்தியது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

 
On July 25, 2011 at 6:39 PM , கவிதை வீதி... // சௌந்தர் // said...

பயணக்கட்டுரை...
வாசித்தேன்.....

 
On July 26, 2011 at 10:09 PM , அன்னைபூமி said...

சற்று பெரிய கட்டுரை என்பதனால் வடிவம் சிறிதாகிவிட்டது. . .சிரமத்திற்கு மன்னிக்கவும்.

 
On July 26, 2011 at 10:10 PM , அன்னைபூமி said...

நன்றி சகா. . .

 
On April 24, 2017 at 9:54 PM , Rayilpayanam said...

மேகமலையின் தற்போதய விவரம் அரிய https://rayilpayanam.blogspot.in/2017/04/1.html