20:19 | Author: Ravi
வந்ததே  சொந்த வீடு


அணில் கீச்சிட்டு குதித்தோடும்

ஒரு ம
த்தியான வேளையிலோ...
உரிமையாளரின் கடிந்த குரலில்
உறக்கம் வரா பொழுதினிலோ...
எப்போதோ கைவிட்டுப் போன
காரைக் கட்டிடத்தின் வனப்பும்
கனவிலே வந்தே கலைத்தது...!
கல்லெறிந்த நீர் வளையங்கள்
துடுப்பிழந்த படகாய் ஆட்டிட,
மண்ணை உரிமை காணும்
ஆவல் உள்ளே கிளைத்தது.


கையிருப்பில் கட்டாந்தரையும்,
கடன் பெற்றே செங்கல் சுவரும்,
கழுத்து தங்கத்தை வைத்தாலும்
முழுமை பெறாமல் தவிர்த்தது.
வாரயிறுதி கறிச்சோறு விலக்கி
மதிய வேளையில் தேநீர் பருகி
காலை மாலையில் சிக்கனமாக
கீரையுடன் அரிசிக்கஞ்சி குடித்து,
குல தெய்வத் திருவிழா முடித்து,
ஒரு காசு வேண்டுதல் முடிச்சுடன்
பொங்கல் விழா புத்தாடை மறந்து
மழைக்கான கடவுளை வேண்டி...
பூமியிலிருந்து முளைத்து வந்தது
வெண்ணிறத்து தேவதையாகவே.


கடன் தீர, வைத்தது மீட்டெடுக்க
இன்னும் பல வருடம் விரதமே!
ஆனாலும்...
சன்னலோர மரத்தின்  காற்றில்
தவிட்டுக் குருவிகளும் கீச்சிட

வாயிலோரத்து மல்லிகை மணம்
குட்டித் தம்பியின் மழலைமொழி
அக்காவின் வெள்ளி கொலுசொலி
சின்னச் சின்ன சண்டைகளுடன்
துள்ளிக் குதித்தாடிய வெற்றிகள்
தற்காலிக தோல்வியின் அழுகை
அடுப்படியில் அம்மாவின் மணம்
அலமாரியில் அப்பாவின் உடை
இன்னும் எத்தனையோ....
அடிச்சுவடுகள் அரிச்சுவடிகளாய்
நினைவு பொதிந்த பெட்டகமாக
வாழ்ந்த கதை கூறும் தோழியாக
இனிய சுமையாகும் காதலிபோல்
வந்ததே எங்கள் சொந்த வீடு.!

                                     - சாகம்பரி


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On October 14, 2011 at 2:23 PM , நம்பிக்கைபாண்டியன் said...

சொந்தவீட்டின் மகிச்சியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்,சொந்த வீட்டிற்காக படும் சிரமங்கள் இனிய சுமையே என்பது 100% உண்மை.