06:07 | Author: சாகம்பரி
 வெறுமனே மண்ணாகவே இருந்திருக்கலாம்....
விளைநிலமாகி பசி தீர்த்து மகிழ்ந்திருப்பேன்.
அட, களிமண்ணாக இருந்திருந்தாலும்கூட,
கடவுள் சிலையாகி பல வரமளித்திருப்பேன்!

விண்ணில் நீர்த்துளியாக இருந்திருக்கலாம்...
மழையாக  உள்தாகம் தீர்த்து குளிர்ந்திருப்பேன்.
சிறிய வெண் மேகமாக இருந்திருந்தாலும்கூட,
சூரியனை மறைத்து குடையாகி காட்டியிருப்பேன்1

பச்சை மரமாக கிளைத்து இருந்திருக்கலாம்...
நிழலுக்கு புகலிடம் தந்து உயிர் காத்திருப்பேன்.
காற்று ஒடித்த குச்சிகளாக இருந்திருந்தால்கூட,
நெருப்பில் கங்குகளாக இருள் அகற்றியிருப்பேன்!

துகள் தூசாகி சிப்பியில் முத்தாகியிருக்கலாம்...
புல்லாகி பனி சேர்த்து பூப்பூக்க வைத்திருக்கலாம்,
இன்னும் வேறு ஏதாவதாககூட இருந்திருக்கலாம்,
உருப்படியாக அர்த்தம் புரிந்து வாழ்ந்திருப்பேன்!


எங்கேயோ கிடைத்த சிந்தனை வரம் கொண்டு,
வேதியியலும் உயிரியலும் சேர்ந்த கலவை நான்,
இயற்கையை அழித்து காற்றிலும் ஊழிக்காற்றாகி,
பூமியை சுற்றிய உயிர் மூச்சை உறிஞ்சிவிட்டேன்!

கால யந்திரத்தில் அழிவின் திசையில் பயணித்து,
பிரணவம் குடித்து நச்சு நொடிகளை குறிக்கும்
இறுதியை காட்டும் நாழிகை வட்டமாகிவிட்டேன்.
என்னிடமிருந்து பூமியை காத்திடுங்கள் தெய்வங்களே.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 29, 2011 at 8:32 PM , அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான வார்த்தை கோர்வை

 
On August 30, 2011 at 5:02 PM , Ravi said...

கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி மேடம்.