19:52 | Author: சாகம்பரி

ஆரோக்கியமான உடல் சீரான சிந்தனை தெளிவான முடிவுகளை எடுக்க வைக்கும்… வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும்.

அதெப்படி?

நம்முடைய மூளையின் வேலை சிந்திப்பது மட்டுமல்ல, நமக்கு தேவையான விவரங்களை எடுத்து தருவதும் ஆகும். இது முன்பே பதியப்பட்டு இருக்கும். அனுபவ அறிவு அல்லது கற்ற அறிவு இந்த விவரங்களை மூளையின் நியூரான்களுக்கு தந்திருக்கும். அதை தேவையான  நேரத்தில் தேடித் தருவது முக்கியமல்லவா?

“அந்த சமயத்தில் பதட்டமாக இருந்ததா…  நினைவிற்கு வரவில்லை”
“என்ன செய்வது கோபமாக இருக்கும்போது மூளை வேலை செய்ய மாட்டேங்குதே”
“திங்க் பண்ண ஆரம்பித்தாலே தலைவலிக்க ஆரம்பித்து விடுகிறது”

இதுபோன்ற வார்த்தைகளை நீங்களும் பேசியிருப்பீர்கள் அல்லவா?
இப்போது அறிவியல்படி பார்த்தால் ஒரு சூழலில் நம்மை இயக்குவது மூளையாகும்… என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அது ஏற்கனவே பதிவிட்டிருக்கும் மெமரியிலிருந்து எடுத்து தருகிறது. அமைதியாகவோ பதட்டமாகவோ கோபமாகவோ எப்படி இருந்தாலும் நம்முடைய மூளை மேற்சொன்ன வேலையை செய்துதானே ஆக வேண்டும்… அது வெறும் அறிவியலுக்கு கட்டுப்பட்டிருந்தால்…! ஆனால் அப்படி நடப்பது இல்லையே….

எனவே அறிவியல் செயலாக்கத்திற்கும் மேல் நமக்கு ஒரு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அந்த ஒத்துழைப்பை தருவது மனம் என்று சொல்லாமா? அது சக்தி வாய்த்ததாக இருக்க வேண்டும் அல்லவா? மனம் அமைதியாக இருந்தால் எண்ணம் செயலாகும்…. செயல் கைகூடும். கொஞ்சம் குழம்பி போனாலும் தோல்விதான். சரிதானே!

மனோசக்தியை வைத்து ஆகாயத்தில் பறப்பது… ஒரு பொருளை கை கொள்வது.. விரும்பியதை அடைவது… ஆன்மாவுடன் பேசுவது… நீர் மேல் நடப்பது, ஒருவரை நம் விருப்பப்படி செயல்பட வைப்பது என்று பல அதிசயங்கள் நடத்த முடியும். அவ்வாறு செய்து காட்டியும் இருக்கிறார்கள்.
அதற்காக மனோசக்தியை பலப்படுத்தும் பல பயிற்சிகள்கூட வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மூச்சு பயிற்சி, மூலாதாரம் தொடங்கி சகஸ்ரதளம் வரையிலான சக்கரங்களை இயக்குவது… ஆராவை பலப்படுத்துவது,  மெடிடேசன் செய்வது… இன்னும் சில பயிற்சிகள் போன்றவையெல்லாம் இருக்கட்டும். இவை அனைத்துமே ப்ராண சக்தியை சேர்த்து  மனதின் சக்தியை அதிகரிக்கவே உள்ளன. இதையெல்லாம் செய்து அதிசய சக்திகளை பெறலாமே என்று ஒரு பக்கம் தோன்றினாலும்,  நம்முடைய வாழ்க்கைக்கு இவையெல்லாம் எந்த முறையில் பயன்படக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த மனோசக்தியை கை கொண்டால்…

நம்முடைய நித்திய வாழ்க்கையின் சிக்கல்கள் தீருமா?
குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்ற பொருளாதாரம் பற்றிய கவலை, உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, வியாபாரி என்றால் அன்றைய வியாபாரம் பற்றிய கவலை, உத்தியோகம் செய்பவர் என்றால் டார்கெட்.. அசெஸ்மெண்ட் கவலை என்று ஆயிரம் கவலைகள் உள்ளன.

காலையில் எழுந்து குளித்து கிளம்பி அலுவலகம் சென்று அல்லல்பட்டு வேலை முடித்து வீடு திரும்புவது… (அதற்குள் உசுருக்கு உத்தரவாதம் இல்லாத நகர வாழ்க்கை)- வரை மனதை குழப்பும்  நிகழ்வுகள் எத்தனை… எத்தனை…?

இதில் எப்படி ப்ராணாயாமம் செய்வது… அமைதியாக மெடிடேசன் செய்வது… மனோசக்தியை ஆக்டிவேட் செய்வது என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இன்றைய பரபரப்பான உலகத்தில் கோவிலுக்கு சென்று அமைதியாக இறைவனிடம் வேண்டுதல் வைக்கவே முடியவில்லை… மனம் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே?
அப்புறம் நமக்கு வேறு சிந்தனை வரும்… குடும்பம்… அதன் தேவைகள்… சம்பாதியத்திற்கான அலைச்சல்கள், இத்துடன் சிறிய 
பிரச்சினைக்கெல்லாம் திடுமென ஆரம்பிக்கும் குடும்ப சண்டைகள் போஸ்ட்கார்ட் அளவில் ஆரம்பித்து போஸ்டர் அளவிற்கு விரிவாகும் அபாயத்தை கொண்டுள்ள வாய் தகராறுகள்…

இதையெல்லாம் தீர்த்தால்தான் மனதை அமைதிபடுத்த முடியும்… மனோசக்தியை பெற முடியும் என்று முடித்து வைத்து… அதெல்லாம் சாமியாரானால்தான் வரும் என்று மனோசக்தி என்ற வார்த்தையையே மறந்து விடுவோம்.

ஆனால்  மனோசக்தி என்ற வார்த்தை நமக்கு புதிதல்ல… நம் முன்னோர்கள் (அப்பா… தாத்தா… கொள்ளு தாத்தா..) பயனடைந்த சக்திதான்.. அவர்கள் எல்லாம் துறவறம் அல்லது பயிற்சிகள் மேற்கொண்டுதான் இதை பயன்படுத்தினார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய தாத்தா ஒருவர் இருந்தார், வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே சொல்லி விடுவார். கனவில் வந்தது என்றும்… திடீரென மனதிற்கு பட்டது என்றும் சொல்லுவார். ஆனால் அது எங்களுடைய குடும்பம் சம்பந்தபட்ட குறிப்புகளாகத்தான் இருக்கும். வெளியாட்கள் தொடர்புடையது அல்ல. (அதையெல்லாம் சாமியாடிகள்தான் செய்வார்கள்)

அதேபோல குடும்பத்தினர் யாருக்காவது பிரச்சினை என்றால் உடனேயே கோவிலுக்கு செல்வது, சிறப்பு வேண்டுதல்கள் செய்வது, குலதெய்வ பூஜை செய்வது… வீட்டில் அன்னதானம் செய்வது… என்று பரிகாரங்களையும் சொல்லுவார். அந்த பிரச்சினை தீர்ந்து விடும் அல்லது தீர்ப்பதற்கான வழி கிடைத்து விடும்.

அவர் இருந்தவரை எங்களுக்கு பிரச்சினைகள் பற்றிய கவலையே இல்லை. அவற்றை தடுக்கும் சக்தியும் மீட்கும் சக்தியும் தாத்தாவிடம் இருந்ததே! அந்த நம்பிக்கைதான் எங்களுக்கும் பாதுகாப்பாக இருந்த்து. ஆனால் அவர் மூச்சு பயிற்சி செய்ததில்லை, தியானம் செய்ததில்லை, அமைதி அமைதி என்று தேடியதில்லை. பூஜையறையில்கூட சில நிமிடங்கள்தான் அமர்வார். வேண்டுகோள் நிறைவேறினால் தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களை செய்திருக்கிறார். எந்த கட்டாயமும் இல்லாத நாட்களில் இவற்றை செய்வாரா என்று கேட்டால், அதற்கான மனஉறுதி இல்லையேப்பா என்றுதான் சொல்லுவார்.  ஏன் இப்படி?


ரகசியம் என்னவெனில் மனோசக்தியை அவருக்கு எளிதாக கையாளத் தெரிந்திருந்தது. தேவையான சமயத்தில் அதை பிரயோகிக்கவும் அவருக்கு தெரிந்திருந்தது. இது போதுமே! மற்றவர்களுக்காக அருள்வாக்கு சொல்வது, அவர்களை வியக்க வைக்கும் அதிசயங்களை செய்வது போன்றவை புகழுக்காகத்தான்… அது நமக்குத் தேவையில்லையே…

நம் வாழ்க்கையை  நல்லபடியாக வாழத்தேவையான பலம் கிடைத்தால் போதுமல்லவா? அதைக் கொண்டு ரொம்பவும் எளிமையாக அமைதியான வாழ்க்கை வாழ முயற்சிக்கலாமே!
அமைதியான வாழ்க்கைக்கு என்ன தேவை? அமைதியை குலைப்பது எது? பணத்தேவை… அன்பிலாத சூழல்… தனித்த வாழ்க்கை… உடல் நலமின்மை.. தோல்வியின் பயம்… இவைதானே. இவற்றை மனோசக்தியால் சரி செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்.   
மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On October 11, 2018 at 10:34 AM , siva said...

Very good article for today's life. Please continue asap. Awaiting for the next post.

 
On October 16, 2018 at 5:38 PM , சாகம்பரி said...

Thank You siva...