12:05 | Author: அன்னைபூமி
காதல் வரைந்த கோலங்களில்
கடைசியாய் விடப்பட்ட
கரும்புள்ளி நான். . .

காவியத்திற்கும் ஓவியத்திற்கும்
இடையில் விடப்பட்ட வரைபட
கிறுக்கள் நான். . .

அழகான ரோஜா தோட்டத்தில்
முட்களால் வடிவமைக்கப்பட்ட
இதழ்களைக் கொண்டவன். . .

                                               காதலென சேர்ந்த கயவர்களால்
                                               கைவிடப்பட்ட மிச்சங்களில்
                                               நானும் ஒரு எச்சம். . .

                                              காதலுடன் முடிந்திருக்க கூடதா
                                              உங்கள் வாழ்க்கை. . .
                                              உங்கள் கணவுகளையும் எரித்துவிட்டு
                                              என்னையும் இந்த நரகத்திற்குள்
                                              தள்ளியதேன். . .

                                             உயிர்களால் படைக்கப்பட்ட
                                             ஜீவன் என்றில்லாமல்
                                             உடல்களால் படைக்கப்பட்ட
                                             பிண்டமாகி விட்டேனே. . .
                                             புரிதலின்றி சேர்ந்துபிரிந்த உங்களால்
                                             விதையிலேயே கருகிவிட்டேனே. . .

                                             இளந்தென்றல் போல் இனிமையாய்
                                             எல்லோர் மனதிலும்
                                             வந்து போகும் காதல்
                                             எனக்கு மட்டும் நரகமாகிவிட்டது
                                             நீங்கள் தந்த காதல்பரிசால். . .

                                             வாழ்க்கையை ஆரம்பத்திலேயே
                                             முடித்துக் கொண்டீர்கள்
                                              என் வாழ்க்கையையும்
                                             ஆரம்பத்திலேயே முடித்து
                                              வைத்துவிட்டீர்கள். . .

                                              அய்யனும் அம்மையும் இருந்தும்
                                              அனாதையாக்கப்பட்டேனே. . .
                                              இதன் பிறகு சேரும்
                                              இன்னொருவரிடமிருந்து மேனும்
                                              பிரிந்து விடாதீர்கள். . .

                                              என்னைப்போல் ஓர் அனாதையை
                                              இனி இந்த உலகில்
                                              பார்க்க விருப்பமில்லை எனக்கு. . .


22:12 | Author: Ravi

  
மதுரையில் இருந்து தொடங்குகின்றது எங்கள் பயணம். ஒரு நாள் பயணம் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் பயணம் தொடங்குகின்றது. இரவு நேர பயணம் என்பதால் மதுரை – தேனி இடையேயான 75கிலோ மீட்டர் பயண தூரத்தை இரண்டே மணி நேரத்தில் கடக்கின்றது பேருந்து. தேனியை வந்தடைந்த நாங்கள் மலைப்பேருந்து வருவதற்குள் நாளைய பயணத்திற்கு தேவையான பொருட்களை பேருந்து நிலையத்தில் வாங்கிக்கொண்டோம். தேனியில் இருந்து 73கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேகமலை. 

மேகமலை பகுதியை வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு 2009 ஜூனில் அறிவித்தது.குமுளி ரோடு - சின்னமனூர்; கண்டமனூர் - எழுமலை வரை 26 ஆயிரத்து 910 எக்டேர் வனப்பகுதி சரணாலயமாக உள்ளது. தற்போது, 16.36 லட்ச ரூபாயை வனத்துறை ஒதுக்கியுள்ளது


     தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாக வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை நீர் வீழ்ச்சி, மேகமலை, வெள்ளிமலை மற்றும் போடி மெட்டு ஆகிய இடங்கள் உள்ளன.

மேகமலை செல்லும் மலைப்பேருந்து சரியாக அதிகாலை 3.30 மணிக்கு தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக பேருந்து சின்னமனூரை வந்தடைந்தது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த திருக்கோவில் ஆகும். இதன் அருகே முல்லைப்பெரியாறு ஆறு அழகாக இந்தக்கோவிலை கடந்து செல்கின்றது. தேனி கம்பம் நெடுஞ்சாலையில், சின்னமனூரில் இருந்து இடதுகைப்பக்கமாக செல்கின்றது மேகமலை செல்லும் பாதை.


  மேகமலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மேகமலை, கேரள பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. மலைப்பாதை தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு வனச்சரகம் சார்பில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இதைக்கடந்து சென்றால் முருகன் கோவில் வழியே மலைப்பயணம் ஆரம்பம் ஆகின்றது. மலையேற்றம் 20 கிலோ மீட்டர் தான் என்றாலும் மீதம்முள்ள 32 கிலோ மீட்டர் மலைக்குன்றுகளுக்கு இடையேயும் தேயிலைத்தோட்ங்களுக்கு இடையேயும் கழிகின்றது.

மலைப்பாதையில் முதல் நிறுத்தம் கர்டானா எஸ்டேட், தேயிலைத் தோட்டங்களும், ஏலக்காய் தோட்டங்களும் இங்கிருந்தே ஆரம்பம் ஆகின்றது. இந்த நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக சிறிய தேவாலையம் ஒன்று உள்ளது. இதற்கடுத்து உள்ள ஊர்தான் மேகமலை. இதமான குளிர் காற்று, பனிமூட்டம் வழியாக பேருந்து பயணிக்கின்றது. இதன் பின் ஹைவேவிஸ  என்ற நிறுத்தம் உள்ளது, இங்கே தான் மஞ்சள் ஆறு அணை உள்ளது. இங்கும், மகாராஜா மெட்டு மற்றும் இரவங்களாறு என்ற இடங்களில் மட்டுமே சிற்றுண்டி சாலைகள் உள்ளன.

சரியாக அதிகாலை 7 மணியளவில் மகாராஜா மெட்டு என்ற எல்லைப்பகுதியை வந்தடைந்தது பேருந்து, அடர்ந்த பனி மூட்டமும், இருக்கமான குளிர் காற்றும், எங்களை இனிதே வரவேற்றன. அங்குள்ள சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்தினோம், சற்று வித்தியாசமாகவே இருந்தது. மதிய உணவு வேண்டுமெனில் முன்னதாகவே இங்கு சொல்லிவைத்துவிட வேண்டும். இங்குள்ள மலைப் பகுதியின் உச்சியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கை நாம் பார்க்கலாம். அதிகாலைப் பொழுதில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானைக்கூட்டங்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம், மகாராஜ மெட்டு மலை உச்சியில் சிறிய காளி கோவில் ஒன்று உள்ளது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. சாலையோரம் ஈரப்பதம் மிகுந்த புல்வெளிகள் அதிகம், சற்றே தார் சாலையை விட்டு காட்டுப்பகுதிக்குள் கால் வைத்தால் பற்றிக்கொள்கிறது அட்டை, காலி கடிப்பதும் தெரியாது நம் இரத்தத்தை உறிஞ்சுவதும் தெரியாது, இதற்காக நாம் அதிகம் பயம் கொள்ள தேவையில்லை.இரவு நேரங்களில் இங்கே தங்குவது சற்றே கடினம், தங்கும் வசதியுள்ள அறைகள் மிகக்குறைவு, குளிரும் மிக அதிகம்.

வன விலங்குகளான சிறுத்தை, சிங்கவால் குரங்கு, மலை அணில், கேளை ஆடு , புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா,  புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி, மஞ்சள் ஆறு அணை, வென்னியாறு அணை, இரவங்களாறு அணை, தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை எழில்களை ரசித்தபின் 4.30மணிக்கு இரவங்களாறு பேருந்தின் மூலம் தேனிக்கு மீண்டும் பயணம் தொடர்கின்றது. . .....
10:19 | Author: Ravi













புற்கள் இல்லாத புல்வெளி
வெறும் கட்டாந்தரையாகிட,
மேய்ச்சல் காணாத ஆநிரை
கூட்டத்தில் இருந்து விலகி
பால் வற்றிய மடியுடன்
பயனில்லாத உயிராய்
காகிதக் கழுதையாகும்
நகரத்து பகல்வேளைகள்
சற்றே கண்ணயரும் மரத்தடி
பேசும் மொழி புரியாவிடினும்
வழிப்போக்கனின் துணையில்
கரைந்து உணரும் இன்பம்...
ஏதோ கேட்டு பேசி சிரித்தாலும்
இரவில் இதுவும் இல்லாத
தெருவோரத்து சிந்தனைகளில்
அடிமாடாகப் போகும் அவலம்
இங்கேயும்கூட,
பணி ஓய்வு மரணப் போராட்டம்.
                                    
-                                                                                                                 
-      Sagampari
17:40 | Author: அன்னைபூமி

   இது அன்னை பூமியின் ஆரம்பச் சுவடு, பதிவுகள் தொடங்கி இன்று இதன் 100 வது பதிவு. ஈர மண்ணில் தன் நினைவுகளுடன் இக்குழந்தை தன் முதல் தடத்தை பதித்திருக்கின்றது. இனிவரும் நாட்களில் இக்குழந்தையை சீர்தூக்கி செம்மை பட்டுத்த வேண்டிய கடமை முகவர்களாகிய உங்களையே சார்ந்தது.
   
    இணையத்தில் தமிழை ஏற்றினோம், தமிழனின் எண்ணங்களை உலகம் அறியச்செய்தோம். இதற்கு வண்ணம் சேர்த்த பதிவுலகிற்கு நன்றி
  
      எங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் உடன் இருந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். எங்களின் பதிவிற்கு தங்களின் மேலான கருத்துக்களை தந்து எங்களை மென்மேலும் வளரச்செய்த ரமணி சார்அவர்களுக்கும், இராஜராஜேஸ்வரி மேடம்    அவர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கின்றோம். மேலும் தமிழ்வாசி திரு பிரகாஷ், திரு.எல்.கே சார் , சந்திரகௌரி மேடம், செந்தில்குமார், பிரியமுடன் வசந்த், ராஜா, முரளி நாராயணன், கண்ணா, மற்றும் தோழி பிரஷா அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

     எங்களின் நண்பர்கள் சகா சண்முகம் , கோபி, சிவா, மற்றும் சேகர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
   
         எங்களின் காலடிச்சுவடுகள், காலச்சுவடுகளாக மாற இனிவரும் எங்கள் படைப்புகளுக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம். மேலும் இப்பதிவு நல்லாதரவு தரும் உங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் அமைந்ததை என்னியும் பெருமிதம் கொள்கின்றோம். . . நன்றி
19:03 | Author: Ravi
 

     முடியாது என்று சொல்வது அவசியமா? தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் 'நோ' சொல்லத் தெரிய வேண்டும். பிடிக்காதவர்களிடம், பழக்கமில்லாதவர்களிடம் எளிதாக சொல்லக் கூடிய இந்த வார்த்தையை உறவினர், நண்பர் போன்றவர்களிடம் சொல்லமுடிவதில்லை. ஆனால் இந்த தடுமாற்றம்தான் பின்னர் பெரும் சிக்கலில் ஆழ்த்தும். எளிதில் வெளிவர முடியாத ஒரு சிக்காலான வலைக்குள் தெரிந்தே சிக்கிக் கொண்டு யாரிடம் மறுக்க முடியாமல் தவித்தோமோ அவர்களிடமே முரண்பாடாகி நிற்போம். இதுபோல சொல்லத் தெரிந்தவர்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும் ஆளுமைத் தன்மை மிக்கவர்களாகவும் இருப்பதாக மனோதத்துவம் சொல்கிறது. 

  பெரும்பாலும் முடியாது என்று சொல்ல முடியாமல் போனவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சூழ்நிலை நம்மை சிக்கலில் கொண்டு சேர்க்கும் காரணிகளிடம் மறுப்பது மட்டுமே சிரமம். சரியான முறையில் மறுப்பு தெரிவித்துவிட்டோமென்றால், நம்முடைய கட்டுப்பாட்டுவிசை நம்மிடம்தான் உள்ளது என்று பொருள். முடியாது என்று மறுப்பதால், நம்முடைய எல்லைகளை புரிய வைக்கின்றோம். மற்றவர்களால் வெறுக்கப்பட்டவர்களாக மாட்டோம். சொல்லப் போனால் நம்முடைய எல்லைகளை வரையறுப்பதால் நம்மிடம் எளிதாக மற்றவர்களால் பழக முடியும். தவிர்க்கமுடியாமல் ஒப்புக் கொண்டுவிட்டு பிறகு துன்பப்பட்டு மற்றவர்களால்தான் இந்த நிலை என்று பழி போடுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உனக்கென்று சுய சிந்தனை இல்லையா என்று கேட்பார்கள்.

மற்றவர்கள் மனம் நோகாமல் மறுப்பது எப்படி?
நேரிடையாக வார்த்தைகளால் 'முடியாது ' என்று கடினமாக சொல்ல முடியாவிடினும் " எனக்கு வேறு முக்கிய வேலை உள்ளது, தயவு செய்து புரிந்து கொள்", '"இப்போது என்னால் இயலாது. நாளை மறு நாள் முயற்சிக்கலாமா?" , " என்னுடைய நிலையில் இதெல்லாம் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்", "வேறு ஏதாவது மாற்று யோசனை சொல்லுங்கள்" போன்ற வார்த்தைகளை புன்சிரிப்புடன் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த முறை உங்களால் செய்யக் கூடிய உதவிகளை செய்யுங்கள். நீங்கள் மறுப்பது குறிப்பிட்ட விசயத்தை மட்டும்தான் என்பதை உணர்த்துங்கள்.