13:01 |
Author: அன்னைபூமி
கற்கால முடிவில் தோன்றிய புதிய கற்காலம் விவசாயத்திற்கு வித்திட்டது. உழவு, குழும வாழ்க்கையென தோன்றி நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவசாயம் தலைத்தோங்கியது நாகரீகம் தோன்றியது. அது தான் பொற்காலம். அன்று ஆக்க சக்தியாக, ஒளியும், நெருப்பும், சக்கரமும் இந்த உலகத்தை ஆண்ட காலம் அது. மக்கள் மிகவும் சந்தோசமாக இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்ந்தனர் என்றால் அது மிகையில்லை. இன்று 21ஆம் நூற்றாண்டு விண்ணைத்தொடும் கட்டிடங்களும், வண்ண விலக்குகளும், கணினிகளும் கால் பதித்து நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இன்று நம் பூமித்தாயின் இதயத்தை இயந்திரங்கள் தூர்வாரிக்கொண்டிருக்கின்றன. நாடோடி வழ்க்கை மறுபடியும் தொடங்கிவிட்டது, மக்கள் இடம் பெயர தொடங்கிவிட்டனர். பண்பாட்டின் பழம்பெறும் பகுப்புகள் மக்கள் மனதில் மெல்ல கரையத்தொடங்கி மறையும் நிலைக்கு வந்துவிட்டது. அன்று வாழ்ந்த அனைவரும் விவசாயிகள். இன்று சிலர் கோடிகளில், நம்மில் பலர் தெருக்கோடிகளில். ஏற்றத்தாழ்வு வந்ததற்கு விவசாயம் மறக்கடிக்கப் பட்டதே காரணம்.
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
மக்கள் பிற தொழில்களைச் சுழன்று சுழன்று செய்தாலும், அவையெல்லாம் உழவுத் தொழிலுக்குப் பிற்பட்டனவே; ஆகவே, துன்பங்கள் நிரைந்தாலும் உழவுத்தொழிலே தலை சிறந்த தொழிலாகும்.
"உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"
பிற தொழில் செய்வாரை எல்லாம் தாங்குபவர்கள் உழவர்களே; ஆகவே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள்.
Category:
தமிழர் பண்பாடு
|
0 comments: