06:00 |
Author: Ravi
ஈதல் இசைபட வாழ்தல் தமிழர் பண்பாடு . உண்மைதான் அலைபேசியில் அழைக்கப்படுவதற்கும் அழைப்பதற்கும் இசைதான்- சந்தர்ப்பம் தெரியாமல் தேசிய கீதமும், திருப்பள்ளி எழுச்சியும் அழைத்து நம்மை திருதிரு திருவாளர் ஆக்கிவிடும். ஆனால் பணம் கரைவது மனதிற்குள் வசைதான். வாகனம்கூட முன்னேயோ பின்னேயோ இசைத்து போகிறது. சமயத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் வாகனங்களின் நராசமான கூவல் காதை குடையும் இசைதான்..... இதே கூவல்தான் தொலைகாட்சியிலும் வானொலியிலும், அவ்வப்போது தொகுப்பாளரின் விருப்பமாக நேயர்களின் வசன இசைகளும் - "நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க". ஒரொரு சமயத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளபோது மட்டும் ஏற்படும் அமைதி மட்டும் மனதிற்கு உகந்த மெல்லிசை.
மற்றபடி தலைப்பின் உண்மையான தகவல் என்னவென்றால், பிறருக்கு தர்மம் செய்து நல்ல பெயருடன் மற்றவர் போற்ற வாழ்வதுதான் இசைபட வாழ்தல் என்று தமிழாசிரியர் சொன்னார். எளியோரின் துயர் தீர்ந்த மனம் பாடும் வாழ்த்துதான் உண்மையான இசை. பாலும் தேனும் ஓடிய காலத்தின் தமிழர் பண்பாடு என்று கேலி பேசாமல், முடிந்தவரை மற்றவறுக்கு உதவி செய்து தமிழனாக வாழப்பார்ப்போம்.... நெஞ்சுரம், நேர்மை திறம், புறமுதுகிடா வீரம், வாக்கு தவறாமை... என திருக்குறள், புறநானூறு போன்றவை போட்டி போட்டு தரும் பட்டியலில் இது மட்டுமே தமிழர் பண்பாட்டிலேயே மிக எளிதாக பின்பற்றக்கூடியது .
Category:
தமிழர் பண்பாடு
|
0 comments: