12:20 | Author: சாகம்பரி

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு
                                                                                                              -மகாகவி

        நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு தலைவிரித்தாடும் ஊழலும், லஞ்சமும் பாரத மண்ணில் விளைந்தவை அல்ல. அந்நியர் விதைத்துவிட்டுப் போனது. அதனை தூக்கி எறிவது நம்மிடம்தான் உள்ளது. உரத்து பேசுவதாலோ, சினம் கொண்டு எழுதுவதாலோ இவற்றை துரத்த முடியாது. சட்டங்களோ அவற்றிற்கான தண்டனைகளோ இவற்றை வேரறுக்க முடியாது. நல்லதை விதைப்பதும் பேணி வளர்ப்பதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இவற்றை கடைபிடித்தாலே போதும். நம் தேசத்தை எத்தனை கேலி பேசினாலும் அழுத்தமாக மறுக்கமுடியாத ஒரு உண்மை உலக அளவில் பயமுறுத்துகிறது. என்றைக்காவது இந்தியா வல்லமை மிக்க தேசமாக மாறும் என்பதே அது.

       இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்.

       ஒரு இளைஞன் பட்டி மன்றத்தில் பேசுகிறான் "வெறும் பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு கால் காசு பெருமானம் கூட தாராது. வெள்ளையர்கள் நம்மை ஆண்டார்கள். ஆமாம், அதனால்தான் சிறப்புமிக்க இருப்புப்பாதை கிட்டியுள்ளது. நிறைய பாலங்கள் அவர்கள் கட்டியவைதான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருந்தால் இன்னும் முன்னேற்றம் கண்டிருப்போம்.... " இதற்கு கை தட்டல் வேறு கிட்டியது. அது அவனுடைய சிந்தனையில் உதித்தல்ல. பாலம், அணைக்கட்டு, இருப்புப்பாதை போன்றவற்றை ஆங்கிலேயர்கள் கட்டிய காலத்தின் நிலமையை இளையவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க தவறி விட்டோம். 80 சதவிகித வரி விதிப்பில் இந்தியர்களை பரதேசிகளாக்கிவிட்டு அவர்கள் கொண்டு சென்ற வரலாறு மறக்கப்பட்டு விட்டனவே.

      நம்முடைய வரலாற்று நாயகர்கள் ஜாதிய ரீதியில் அடையாளம் காணப்பட்டு உருமாற்றம் அடைந்து விட்டனர். உண்மையில் இது போன்று ஒரு புதிய கோலம் பெறப்போகிறோம் என்று அவர்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய அன்றைய சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்திருந்த தாய் மண்ணின் பெருமையும் அதனை காக்கும் கடமையுணர்வும் மறக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதம், இனம் ஏற்கனவே இங்கு இருந்ததுதான். அதெல்லாம் ஒருபோதும் ஒற்றுமையை குலைத்தது இல்லை. வேறு வழியில் வெற்றி கொள்ள முடியாத அன்னிய சூழ்ச்சிக்காரர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் இதைத்தான் ஆயுதமாக்கினர்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
      அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
      சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? . 
என்ற பாரதியின் வார்த்தைகள் உண்மையின் உறைவிடமாக நின்று ஒன்றுபட்டு நாட்டின் விடுதலை கீதமாக ரீங்கரித்தது. விடுதலையையும் பெற்றோம்.

     இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.                                          
    
    அடுத்த பகுதி ஆதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பழம் பெருமை பேசுவோம் .

பாரத தேசமென்று பெயர் -2
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On September 13, 2011 at 3:37 PM , Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.

 
On September 14, 2011 at 9:53 PM , stalin wesley said...

அருமை ...........

 
On September 14, 2011 at 9:54 PM , stalin wesley said...

நன்றி

 
On September 15, 2011 at 2:33 PM , சாகம்பரி said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்ரி சார்.

 
On September 15, 2011 at 2:34 PM , சாகம்பரி said...

வணைக்கம் திரு,.ஸ்டாலின் பாராட்டிற்கு நன்றி.

 
On November 2, 2011 at 2:30 AM , காட்டான் said...

வணக்கம் 
நல்லதோர் பதிவு யப்பான்காரர்களை எந்த வெள்ளைக்காரர்களும் ஆளவில்லை அங்கு அவர்கள் முன்னேற்றம் எப்படி வந்தது.??. எங்களை விற்பதற்கு ஒரு கூட்டம் எங்களிடையே இருக்கின்றது..?? அருமையான பதிவு ரெவரி போட்ட ஒரு லிங்மூலம் வந்தேன் இங்கு... 

வாழ்த்துக்கள்..