10:22 |
Author: சாகம்பரி
"வெள்ளமா? வாசலையும் தாண்டி உள்ளே வந்துவிடுமோ?". வெள்ளப்பகுதிகளை பத்திரிக்கைகளில் பார்த்த நினைவு வர, நானும் என் சகோதரியும் கலவரமானோம். வீட்டினுள்ளே ஓடி சென்று அம்மாவிடம் பதறலும் உதறலுமாக சொல்ல, அம்மாவோ ஆபாத்பாந்தவனாக அப்பாவைத் தேடினார். எங்கேயோ சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் (புல்லட்டாக்கும்...) வந்திறங்கிய அவருக்கு கடும் பசிபோலும். "சாப்பாட்டை எடுத்து வை" என்றுவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டார்.
திருவள்ளுவரின் வாசுகிக்கு பிறகு கணவர் சொல்லுக்கு மறுச்சொல் பேசாத புண்ணியவதியாக (சில சமயங்களில் வார்த்தைகளையே பயன்படுத்தாமல், அப்பாவை 'விசையுறு பந்தே''ன துரத்திய வல்லமை மிக்கவர் அவர் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்.) உணவு பரிமாறினார். தெருவில் 'அறிவி'ன் புண்ணியத்தால் குதிரை வண்டிகளும் ஆட்டோக்களுக்கும் பறக்கும் ஓசை எங்கள் வயிற்றை கலக்கியது. உணவு முடிக்கும் தருவாயை எதிர்பார்த்து காத்திருக்க, "வத்த குழம்பு பிரமாதம். இன்னும் கொஞ்சம் போடு" என்ற தந்தையின் புகழாரம் அம்மாவை மகிழ்ச்சியுற வைக்கவில்லை. தயிர் சாதத்தில் தந்தையின் கைகள் விளையாடிய சமயம் அம்மா விசயத்தை ஆரம்பித்தார். (அம்மாடியோ, தாய்க்குலம் வாழ்க!)
"வெள்ளம் வராத இடமென்றால் காஜாமலைக்கு சென்றுவிடலாம். உயரமான பகுதி என்பதால் வெள்ளம் வராது. அங்குதான் சிவாண்ணா வீடு இருக்கே" என்று பதறாமல் திட்டமிட்டு வயிற்றில் இருந்த புளியை பாலாக மாற்றினார். அவர் தொடர்ந்து "ஆனால்..." என (கவனிக்க, இந்த இடத்தில் மறுபடியும் பால் புளியானது) "விசயம் உண்மையா என அரசு செய்தி நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டு வருகிறேன்" என்று விட்டு அருகிலிருந்த தபால் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போதெல்லாம், தபால் அலுவலகத்தில் மட்டும்தான் தொலைப்பேசி வசதியிருக்கும்.
தசாவதாரம் படத்தில் வரும், கரைகாணா வெள்ளத்தை எதிர்பார்த்து, பெருமாள் வாய்க்குள் போய்விடுவோமோ என்ற பயத்தில் பத்து வயது பாலகனாக நான் நின்றபோது, தீபாவளிக்கு வாங்கிய புது பட்டுபாவாடையை அணிந்து கொண்டு அசைந்தாடி வந்தாள் என் அக்கா. "எல்லாத்தையும் வெள்ளம் அடிச்சிட்டுப் போனலும் புது டிரஸ்ல போலாம்ல?" என்றாள். என்னுடைய மாம்பழக் கலர் கோ-ஆப்டெக்ஸ் புது கால்சட்டை நினைவிற்கு வந்து - பட்டுபாவாடை தைத்த டெய்லரை சபித்தது.
ஒரு வழியாக அப்பா வந்து "அதெல்லாம் பொய்" எனவும், நாங்கள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டோம். "இருந்தாலும், உங்கள் நிம்மதிக்காக நாம் பெரியப்பா வீட்டிற்கு செல்லலாம். ஆட்டோவிற்கு சொல்லிவிட்டேன்" என்று முடிக்கும் முன் ஆட்டோ வந்துவிட்டது. வெளியில் இருந்த மயான அமைதி பயமுறுத்த, எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக வெளியேறினோம். அப்பா வீட்டை பூட்டிவிட்டு சற்று பொறுத்து வருவதாக கூறி விட்டார். தயக்கமாக பார்த்த அம்மாவிடம் "முன்னே போம்மா, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு வரேன். கண்டிப்பா வந்திடுவேன்" என்று போர்க்கள வீரன் போல கூறினார். எனவே நாங்கள் மட்டும் ஆட்டோவில் ஏறினோம்.
செல்லும் வழியெல்லாம், ஆட்டோக்காரரும் அனைவரையும் காஜாமலைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்தியர் சென்று சமன் செய்ததுபோல மொத்த திருச்சியும் அங்கு குடிபெயர்ந்தால் , அது தாழ்வுப்பகுதியாகிவிடாதா? என்ற கவலை எங்களுக்கு வந்துவிட்டது.
வழியில் பாலக்கரை மேம்பாலத்தை கடந்தபோது, ரமேஷ் அண்ணா சைக்கிளில் பாலம் ஏறிக் கொண்டிருந்தான். காஜாமலை பெரியப்பாவின் மகன், எங்களுக்கு அண்ணன். மெதுவாக அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்ததை பார்க்கவும், மிதமிஞ்சிய கலவரத்தில் "ரமேஷண்ணா ஓடி வா. ஓடி வா. வெள்ளம் வருது " என்று நாங்கள் கூப்பாடு போட, மொத்த சக்தியையும் கூட்டி சைக்கிளை மேலும் வேகமாக மிதித்துக் கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டி வந்தான். அவன் பின்னோடேயே வெள்ளம் வந்துவிட்டதாக நினைத்து பயந்து விட்டானாம். சைக்கிளை போட்டு விட்டு ஓடி விடும் உத்தேசத்தை பெரியப்பாவின் இடுப்பு பெல்ட் மறக்க வைத்துவிட்டதாம்.
ஒரு வழியாக பெரியப்பா வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தபோது, "அடக்கடவுளே யாரையும் காணாமே" அம்மாவின் குரல் பதறியது. வீடே காலி செய்யப்பட்டு இருந்தது. இதைவிட உயரமான இடத்திற்கு சென்று விட்டார்களோ என்று சந்தேகம் முளைத்தது. அவர்கள் சென்ற உயரமான இடத்திலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. வீட்டின் மேல் மாடிதான் அது. "எல்லோரும் மேலே வாங்க"
மொட்டை மாடிக்கு விரைந்தோம். ஒரு பெரிய அளவு லாரியில் மொத்த வீட்டின் பொருட்களையும் ஏற்றி விட்டது போல மாடி காட்சியளித்தது. மழைக்காக ஒரு குடையையும் பிடித்தபடி ஒரு மரப்பெட்டியின் மேல் அமர்ந்திருந்தார் எங்கள் பெரியம்மா.( பெரியம்மாவின் திறமையே தனிதான்). வேறு குடையில்லாத காரணத்தால் பெரிய தாம்பாளங்களை தலைக்கு மேல் பிடித்தபடி வெள்ளத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அது வந்ததாக தகவல் ஏதும் வரவில்லை.
அப்பாவை மட்டும் காணவில்லை. அம்மாவின் பாசம் கெட்டவார்த்தைகளாக உருவேற ஆரம்பித்த மாலை வேளையில் டப் டப் என்று புல்லட் ஒலிக்க அப்பா வந்தார். "நான் சொன்னேன்ல ரேடியோல செய்தி சொல்றாங்க கேளு" என்று டிரான்ஸிஸ்டரை காட்டினார். ஏதோ ஒரு கரகரப்பான குரல் - சரோஜ் நாராயணசுவாமி?- பவானி சாகர் உடையவில்லை என்பதை உறுதிபடுத்தியது. பிறகென்ன பெரியம்மா வீட்டில் விருந்தாடிவிட்டு, இரவு வீடு திரும்பினோம்.
மறு நாள் காலையும் மழைவிட்டபாடில்லை அறிவு வந்தான். 'மேட்டூர் அண ஒடைஞ்சிடுத்தாம். டோட்டல் தமிழ்நாடே வாஷ் அவுட் ஆகப் போகுதாம்" என்றான். உண்மையில் வாஷ்-அவுட் ஆனது யார் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதே போல் என்னுடைய மறதி வியாதியும் மனோ வியாதிதான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்குமே.
-முற்றும்.
Category:
சிறுகதை
|
6 comments:
அருமை அருமை
நான் அந்தச் சூழலில் திருச்சியில் தென்னூரில்தான் இருந்தேன்
நீங்கள் சொல்லிச் செல்லும் விதத்தைக் கேட்கக் கேட்கக்
எனக்கும் அந்த நாள் ஞாபகம் கொஞ்சம் வர வர
எனக்கும் குளிரில் உடல் நடுங்குவதுபோல் படுகிறது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 1
நேரில் அனுபவித்த உணர்வு!வாழ்த்துக்கள்!
நான் உறையூரேதான் சார். ஒரு நாடகம் போடுவதற்காக, குட்டீஸ் நகைச்சுவை கதை கேட்டதற்காக எழுதினேன். நன்றி ரமணி சார்.
வணக்கம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.ஸ்ரீதர்
நல்ல பதிவு.