10:21 |
Author: சாகம்பரி
ஐம்பது வயதை நெருங்கும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பு உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. உடல் நலம் மிக நன்றாகவே உள்ளது. என்னுடைய பெரியப்பாவின் ஐம்பதாவது வயதில் அவரது ஆறாவது விரலாக ஒரு சிறிய பெட்டி முளைத்துவிட்டது. அதில் ஜிகுஜிகுக்கும் உரைகளில் அழகிய வண்ணங்களுடன் மாத்திரைக் குடும்பங்கள் குடியேறியிருந்தன. என் அப்பா எப்படி என்கிறீர்களா? அவருக்கு ஜிப் வைத்த பேக். அப்படிப் பார்க்கும்போது என் வாழ்க்கை மிக சமர்த்தாகவே இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளில் "வயதாகிவிட்டதால் அதை மறந்துவிட்டேன்? எனக்கு செலக்ட்டிவ் அம்னீசியா" என்று திகார்வாசிகள் பேட்டி கொடுப்பதை படித்தபின் ஒரு பயம் தோன்றிவிட்டது. எனக்கும் மறதி வந்துவிடுமோ? மறந்தால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? என்று நினைப்பீர்கள். சரிதான், நான் ஐன்ஸ்டைன் போன்ற ஆராய்ச்சியாளனாக இல்லையென்பதாலும் என் மறதியால் உலகம் சுழல்வது நின்று போகாது என்றாலும் என்றைக்காவது தெருவில் செல்லும்போது எதிரில் வரும் என் மகனைப் பார்த்து "யார் வீட்டுப் பிள்ளையோ? என்னை மாதியே இருக்கிறான்." என்று நினைத்து அவனிடம் "உங்கம்மா யாருடா?" என்று கேட்கக் கூடிய அபாயம் நிகழலாம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க, மருத்துவரிடம் சென்றேன்.
மருத்துவர், என்னை பல கேள்விகள் கேட்டு ஞாபக மறதி இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டபின் ஒரு ஆலோசனை கூறினார். மறதி வராமலிருக்க தனித்திருக்கும் சமயங்களில் சிறிய வயது சம்பவங்கள், வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கச் சொன்னார். "டாக்டர், அதெல்லாம் சரியாகத்தான் உள்ளது. என்னுடைய திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தாலே அன்றைக்கு வைத்த உருளைக் கிழங்கு வறுவலின் வாசம்கூட நினைவு வருகிறது" என்றேன். "சம்பவங்களைத்தான் நினைவுகூற சொன்னேன், தண்டனைகளையல்ல" என்று பெரிதாக சிரித்துக் கொண்டார். பாவம், அங்கேயும் என்னவோ நடந்திருக்கிறது!
இப்போது நடப்பிற்கு வருவோம். தலைப்பிலிருந்தே நான் நினைத்துப் பார்க்கப் போகும் சம்பவம் எது என்று புரிந்திருக்கும். பவானி சாகர் அணை உடைந்த விசயம்தான். எப்போது உடைந்தது என்று யோசிக்கிறீர்கள்தானே. அதுதான் சொல்லுவோம்ல.
அது கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நாற்பதைக் கடந்த திருச்சிவாசிகள் எளிதாக நினைவுகூறமுடியும். ஐப்பசி மாதம் அடைமழை என்ற பழமொழி 'வரலாறு காணாத மழை'யை பெய்வித்து அப்போது வேலை செய்து கொண்டுதான் இருந்தது. சரியாக தீபாவளியுடன் வரும் மழை எங்களை வெடிவெடிக்க விடாமல் தடுத்து என் தந்தையின் பணப்பையினை பாதுகாத்துவிடும் -"மழைல வெடிபோட முடியாது. அடுத்த வருசம் வாங்கலாம்" என்று தப்பித்துவிடுவார்.
எங்களுடைய திட்டும், தந்தைமார்களின் வாழ்த்தும் போட்டிபோட ஒரு வருடம் மழைக்கு வெகு உற்சாகம் கிளம்பி விட்டது. தீபாவளியன்று தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து காவிரியில் வெள்ளத்தை வரவழைத்தது. சாப்பிட முடியாது மீந்து போனதை பிச்சைக்காரனுக்கு தாராளமாக இடுவது போல் காவிரியின் அளப்பரிய காட்டாற்று வெள்ளம் கிளை வாய்க்கால்களுக்கு வாரி வழங்கப்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்தது.
பார்வதி பரமேஸ்வரன் திருமணத்தின்போது தாழ்ந்துபோன பூமிபோல திருச்சிக்கே உறையூர்தான் தாழ்வான பகுதி. வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் காகிதக் கப்பல்விடும் மகிழ்வை தந்தாலும் அதில் நீச்சல் இட்டு செல்லும் ஊர்வன வகைகள் திகில் கிளப்பும். ஒரு சமயம் வான்வழியே உணவுப் பொட்டலம் வழங்கியதும் நடந்தேறியது. இப்படி எங்களுடைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் வருடாவருடம் குறையில்லாமல் நடந்தது.
அந்த வருடமும் மழையையும், வெள்ளத்தையும் விருந்திற்கு வந்த மாப்பிள்ளையை சமாளிப்பதுபோல் சமாளிக்க முயற்சித்தோம். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் நிலமை மோசமானது. ஒரு மதிய வேளையில், எங்கள் சினேகிதன் 'அறிவு' எனப்படும் அறிவழகன் கலவரமிக்க பார்வையுடன் ஓடி வந்தான். "டேய், பவானி அணக்கட்டு உடைஞ்சிடுத்தாம்டா. இரண்டு பனமர அளவுக்கு தண்ணி வருமாம்டா. இங்கிருந்து வேற எங்கியாவது போப்போறோம்டா"
தொடரும்.
சஸ்பென்ஸ் வைப்பது, திடுக்கிடும் திருப்பங்கள் இவற்றில் செய்யும் திறமை எனக்கு இல்லை என்று நான் நம்புகின்ற காரணத்தால் அடுத்த பகுதியை உடனடியாக தொடர இந்த இணைப்பை கிளிக்கவும்.
பவானி சாகர் உடைந்த கதை part-2
சஸ்பென்ஸ் வைப்பது, திடுக்கிடும் திருப்பங்கள் இவற்றில் செய்யும் திறமை எனக்கு இல்லை என்று நான் நம்புகின்ற காரணத்தால் அடுத்த பகுதியை உடனடியாக தொடர இந்த இணைப்பை கிளிக்கவும்.
பவானி சாகர் உடைந்த கதை part-2
இது அந்த அணை அல்ல. இதைவிட பெரியதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். |
Category:
சிறுகதை
|
0 comments: