19:11 | Author: அன்னைபூமி
    கீதை பல நல்ல தத்துவங்களை சொல்கிறது. கீதோபதேசத்தின் முக்கிய சாரம் பெருபாலானோருக்குத் தெரியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது. போர்களத்தில் அர்சுனனுக்கு உபதேசித்தது . ஏன் அர்சுனன்?

      பகவத் கீதைக்கு முந்தைய உபதேச நூல்கள் எல்லாம் வேத ரிஷிகள் தங்களுடைய சீடர்களுக்கு சொன்னதாக வரும். ஆனால் கீதை மட்டும்தான், ஒரு சத்திரியனுக்கு உபதேசிக்கப் பட்டது, சாமானியர்களுக்கும் நீதி சொன்ன நூல். இது சாமானியர்களை சென்றடைய வேண்டும் என்றால், உபதேசிக்கப்படுபவன் அதே ரகமாக இருக்க வேண்டும். அப்போதுதான், உலகத்தின் பார்வையை கொண்ட கேள்விகள் கிட்டும். மேலும் மேலும் கேள்விகள் கேட்பதானால் விரிவான, தெளிவான பதில்கள் கிட்டும்.

      தருமர் இது பற்றித் தெரிந்தவர், தெரிந்தவரிடம் கேள்வி எழாது. பீமன் செயல் வீரன் - கண்ணன் சொன்னதை செய்வான்,கேள்வி எழாது. நகுலன், சகாதேவன சகல் சாஸ்திரமும் தேர்ச்சி பெற்றவர்கள், சந்தேகமே எழாது. ஆனால், அர்சுனன், தன் செயல்களில் நம்பிக்கை வைத்திருப்பவன். அவன் மனம் ஒப்பினால்தான் செயலில் முழு மனதோடு இறங்குவான். நிறைய இடங்களில் தர்மர் அவனுக்கு விளக்கம் சொல்லியிருப்பார். எப்போதுமே கேள்வி கேட்டு பதில்களால் சமாதானம் ஆகிறவன். அதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வத்தன்மையை உணர்ந்தவன் என்பதால், சரியான கேள்விகள் கேட்கப்படும். ஒரு மாணவன் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக அர்சுனனை சொல்வார்கள். ஆசிரியரிடம் மரியாதையும், பாடத்தை புரிந்து கொள்வதில் தர்க்க ரீதியான அணுகுமுறையும் இருக்க வேண்டும்
. 
19:17 | Author: Ravi

பட்டதெல்லாம் கஷ்டமாக
பாத்ததெல்லம் கானலாக
பாடாதி உலகத்துல
பகல்கூட இருட்டாக. . .

வல்லரசா ஆக்குறோமுன்னு
வரிஞ்சுகட்டி நிக்கிராக
குடிசையெல்லாம் கோபுரமாக்க
மல்லுகட்டி மருவுராக. . .

கூழக்குடிக்கும் சனங்களுக்கு
குடிசைகூட இங்கில்ல
வரிஞ்சுகட்டி நிப்பவரெல்லாம்
எதைத்தான் கோபுரமாக்க. . .

குலசாமி கோயிலுக்கு
குடும்பத்தோட புறப்பட்டு
ஒருநாள் கஞ்சிய காசாக்கி - ஏழைக
ஊருதாண்டி போராக. . .

சாப்பாடு கறிசமச்சு - சாமிக்கு
சந்தனமும் பொட்டுவச்சு
தருவாறு சந்தோசமுன்னு
தரிசனம் செஞ்சுவாறாக. . .

கண்தொறப்பார் சாமின்னு
காத்துக்குகிடக்கும் ஏழைக்கு
உடுத்திக்கிற கந்தைகூட
உருப்படியா ஒன்னும் இல்லை. . .

துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .

தேடிவந்த ஏழைக்கெல்லாம்
சோறுபோட மறந்துபோய்
அவர்மட்டும் தினம்தினம்
அபிசேகத்தில் குளிக்கிறாரு . . .

எத்தனையோ ஜென்மமாக
ஏழைக்கு வாழ்வில்ல
கண்ணாமுச்சி உலகத்தில
கஷ்டம் மட்டும் சாகவில்ல. . .

என்னதான் நடந்தாலும்
எல்லாத்தையும் பாத்துகிட்டே
சாமிமட்டும் நிக்குதிங்க
ஒத்தையில கல்லாக. . .


இது ஒரு மீள் பதிவு...
22:32 | Author: அன்னைபூமி

என்னை புழுதியில் புரட்டி
ஊரில் இருக்கும் அழுக்குகளை
உடல் மேல் பூசிக்கொண்டு
உருண்டு புரள்கிறேன் - இருந்தும்
உருவம் மாறவில்லை
எனக்கு. . .

இரக்கத்தை மறந்த இதயத்துடிப்புகள்
இரத்தத்தின் சூடால் சுட்டுவிட்ட
சுயநலமான சுரங்கப்பாதைகள்
சுகங்களை மறந்த நாடித்துடிப்புகள்
அர்ச்சனைகள் ஆசிர்வாதங்கள்
அன்பளிப்புகள் என அத்தனையும்
மறந்துவிட்ட மரத்துப்போன கைகள்
மறந்தும் கூட நன்நெறி
பாதை பக்கம் நகர்ந்துவிடாத
கால்கள். . .
சிரிப்பை மறந்து சிறகொடிந்த
உதடுகள். . .
மறந்தும் கூட மற்றவருக்கு
உதவாத மனம். . .
என்னேரமும் வெறுப்பையும் கோபத்தையும்
தாங்கிய முகம். . .

நான் வாழ்வதற்காக இத்தனை
கோரமுகங்களா. . .?
நிலையாமை நிதர்சனம்! புரிந்துகொண்டபின்
புத்திசுவாதினம் அற்றுப்போனேன். . .
எவருக்கும் இந்த நிலைதான்
என்ற பின்
எதற்காக இத்தனை முகங்கள். . .?


என்னை புழுதியில் புரட்டி
ஊரில் இருக்கும் அழுக்குகளை
உடல் மேல் பூசிக்கொண்டு
உருண்டு புரள்கிறேன் - இருந்தும் 
உருவம் மாறவில்லை
எனக்கு. . .

பயணங்கள் முடிவதில்லை
என் பயணம் இதோ முடிவடைகின்றது. . .


15:14 | Author: அன்னைபூமி
ரொம்ப தாகம் எடுக்குதே!
வழக்கமா இந்த வாய்காலில் தான்
தண்ணீர் வரும்
இப்படி கொஞ்சம் கூட
எனக்கு மிச்சம் வைக்காம
இந்த பூமி உரிஞ்சுடுச்சே. . .

கிணத்துக்குள்ள பறந்து குடிச்சுடலாம்னா
உள்ள உக்காந்து குடிக்க
வசதியா இடம் இல்லை. . .

என்ன பண்ணூரது
இந்த சித்திர மாசத்துல
கள்ளழகருக்கே தண்ணீர் இல்லை
எனக்கு மட்டும்
மகேசன் மடையவா திறக்கப்போராரு. . .

மணி 3 ஆச்சே!
மின்சாரம் வந்துருக்கணுமே!
மகேசா நீ மடைய
தொறக்குரையோ இல்லையோ
தயவு செய்து இந்த
பம்பு செட்டவாவது போட்டுவிடு
நான் வாய்க்கால் ஓரம்
வர்ற தண்ணிய
வயிரார குடிச்சுகிறேன். . .
22:04 | Author: அன்னைபூமி

கதிர்வீச்சு சீவாட் என்ற கணக்கில் அளக்கப்படுகின்றது. ஒரு சீவாட் என்பது 1000 மில்லி சீவாட் ஆகும். தொலைக்காட்ச்சி பார்ப்பது, எக்ஸ்ரே எடுத்துக்கொள்வது போன்றவை மூலம் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன.

ஒரு சீவாட் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் வாந்தி, மயக்கம் ஏற்ப்படும் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. 5 சீவாட் கதிர்வீச்சு தாக்கம் என்றால் ஒரு மாதத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றும் பலவாக பிரிந்து அதிகரிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பிட்ட காலத்தில் அந்த செல்கள் தாங்களாக இறந்துவிடுகின்றன. ஆனால் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் அந்த செல்கள் அழியும் தன்மை நீங்கி புற்று கட்டியாக மாறிவிடுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 100மில்லி சீவாட் கதிர்வீச்சு தாக்கினால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.  
20:10 | Author: அன்னைபூமி

இவ்வளவு பெரிய
ஆத்து தண்ணில
எப்படி குதிக்கறது?
என்ன சிரிப்பு !
குட்டி ஆறு! குட்டி நான்!
இப்ப குளிச்சாதான்
பாதி உடம்பாவது
தண்ணில நனையும்.
மடை மாறிப்போச்சுனா...
உருண்டு புரளணும்
சிவப்பு சகதியில...!
குளிக்கலைனா....
புது சட்டை கிடையாது
எனக்கு பொறந்த நாள்
அதான்......
பொறந்த மாதியே நிக்கேன்
ரொம்ப பயமா இருக்கு
யாராச்சும் வந்தா
குதிச்சிடலாம்

அதோ அண்ணே வந்தாச்சு
இப்ப தண்ணில குதிக்கலாம்
போடலாம் குளியலை

 அண்ணனுக்கும்
சட்ட தருவாங்களா?





21:00 | Author: அன்னைபூமி
சந்தையில் களை கட்டுது
கேட்கப்பட்ட விதத்தில்
தங்கமமும் வெள்ளியும்
தகரம் பித்தளை ஆனது

கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம்
காத்தாடியின் நூலில்.
கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே....

அடிமை வியாபாரத்தில்
வெற்றுக்கை வீச பயந்து
காற்றுக்கு மட்டும் விலைபேசி
பனித் துளியுடன் ஒப்பந்தம்
முடிவில் என்னவோ....
விழித்தெழுந்த காலையில்
மறைந்து போக....
மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.
                                      
                                                        -சாகம்பரி, மதுரை
18:01 | Author: அன்னைபூமி

இது பரீட்சை முடிந்த காலம். எதிர்காலத் திட்டங்களை எடுத்து இருப்பீர்கள். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மனதில் இருக்கும். உங்கள் திட்டமிடலில் பெற்றோரின் கருத்துக்களையும் சேர்த்து சிந்தியுங்கள். எந்த திட்டமிடலும் இல்லை என்பவர்களுக்கு சில யோசனைகள்.

உங்கள் பெற்றோரின் கருத்திற்கு முக்கிய இடம் இருக்கட்டும். உங்களுடைய குண நலங்கள் தெரிந்தவர்கள் அவர்கள்.

நண்பர்களின் திட்டத்தை உங்களுக்குள் கொண்டு போகாதீர்கள். உங்கள் தகுதி திறமையை எடை போடுங்கள்.

நல்ல கல்லூரியில் எந்த பிரிவானாலும் சேர முயற்சியுங்கள். அனுபவம்மிக்க ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவில் சேர வேண்டுமென்று சுமாரான கல்லூரியில் சேராதீர்கள்.உங்களுடைய எதிர்காலத்தை கல்லூரியில்தான் தேடப்போகிறீர்கள், அதற்கு உறுதுணையான ஆசிரியர்கள் குழுமம் இருக்கும் கல்லூரியில் சேருங்கள்.

எங்கிருந்தாலும் படிக்கிறவன் ஜெயிப்பான் என்று சுமாரான கல்லூரியை தேடாதீர்கள். நல்ல மாணவர்கள் இருக்கும் கல்லூரியில் மாணவர் போராட்டம், ஸ்டிரைக் என்று இல்லாமல் சரிவர பாடத்திட்டம் நடத்தப்படும். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்தபின் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், அவர்களின் கோதரர்கள், உறவினர்கள் ஆகியோரை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி (mentor)ஆக கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது உதவும்.கல்லூரி வாழ்க்கையை புரிந்து கொண்டால், உங்கள் எதிர்காலம் உங்கள் வசப்படும்.