09:23 | Author: சாகம்பரி
    பொருளீட்டும் முயற்சியில் மும்பை, பெங்களூர், பூனே என்று வெவ்வேறு திசைக்கு பிரிந்து தொலை தூரத்தில் இருந்தாலும் , வருடம் ஒரு முறை ஒன்றாக சகோதர சகோதரிகள் சில நாட்கள் சேர்வது வழக்கம். இது மூத்தவர்களுக்கு சிறிய வயதின் நினைவுகளின் மறுபதிப்பாக இருந்தாலும், அதே பிணைப்பு இளையவர்களுக்கிடையிலும் இருக்கவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கொருமுறையாவது கண்டிப்பாக சந்திப்போம். வழக்கமான விருப்பம் கொடைக்கானல்தான். ஆனால் சென்றமுறை  விடுமுறைக்கு அங்கு சென்று தங்குமிடம், உணவிற்காக சிரமப்பட்டது நினைவிற்கு வந்ததால் இந்த முறை எங்கள் விருப்பம் முன்னார் எனப்படும் மூணார் ஆனது.

சுற்றுலா திட்டமிடும்போது ரொம்பவும் திட்டமிட மாட்டோம். எங்களுடைய  பயண அமைப்பாளர் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவருடைய நண்பர் மூணாறில் தங்கும் விடுதி வைத்திருப்பதாக தெரியவுமே கிளம்பிவிட்டோம். மலையாள உச்சரிப்புடன் பேசிய நண்பரின் குரலில் ஏதோ தயக்கம். தங்கும் விடுதியின் வாடகை அதிகமிருக்குமோ என்றுகூட தோன்றியது. அதன் உண்மையான காரணம் பிறகுதான் புரிந்தது. இரண்டு சுமோவை கேட்டவர்களை மறுத்து ரைனோவை தருவித்ததில் எங்களுக்கு சற்று வருத்தம்தான். சுமோவில் இருக்கும் சுதந்திரம் ரைனோவில் இல்லை. சுமோவின் பின்பக்கம் குட்டீஸ்கள் ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.  கட்டிவைக்கப்பட்ட உணர்வுடன் மலை ஏறிய பின்னர்தான் புரிந்தது. மிகவும் நெருக்கடியான மலைவளைவுகள் (கொடைக்கானலைவிட அதிகம்) ஒரு படகைப்போல எங்கள் வாகனத்தை ஆட்டியெடுக்க உள்ளேயே குலுங்கிக்கொண்டதோடு சிரமம் முடிந்துவிட்டது. சுமோ எனில் எண்ணிலடங்கா வண்ணம் வாகனத்திற்குள்ளேயே உருண்டிருப்போம். கடவுளுக்கு நன்றி!

போடி தாண்டியதுமே, மலையேற்றம் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் மலையேறியதுமே சில்லிட்ட காற்று நெற்றியில் இரத்தத்தை உறைய வைத்தது. மூனாரில் சாரல் மழையாம். இப்போது புரிகிறதா மலையாள நண்பரின் தயக்கத்தின் காரணம். பச்சை போர்வை விரித்ததுபோல ஆரம்பித்த மலைச்சாலையை பார்த்து  இளையவர்கள் ( 5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள்) போட்ட கூச்சலில் எங்களுக்கு முகம் மலர்ந்தது.   " ஹேய் , இது ஏலக்காய் செடி." " இதிலேருந்துதான் டீ தாயாரிக்கிறார்களாம்" என்று கண்ணில் பட்ட செடிகளை சுட்டியபடி உற்சாகக்குரல்கள். ஏலக்காய் செடியில் இப்போது காய் எதுவும் விட்டிருக்கவில்லை. ஒரு முறை மேகமலை சென்றபோது பார்த்த நினைவு வந்தது. இன்னும் சில பழ மரங்கள். அந்த மண்ணிற்கே உரியது. பாதி மலையேறவுமே  வாகனத்தை நிறுத்தி சோதனை. கேரள எல்லையாம். எங்கள் அலைப்பேசியில் வரவேற்பு செய்திகள் வர ஆரம்பித்தன. ரோமிங் கட்டணத்தை நினைவுபடுத்துகிறார்களாம். மலை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள். கலைந்த போர்வை போல தோற்றமளித்து எடுத்து உதறி மீண்டும் சரியாக போர்த்தத் தூண்டுகிறது.

மீதிருந்த மலை வளைவுகளில் குலுங்கி குலுங்கி - 24 என்று பார்த்த நினைவு- வழியில் தென்பட்ட கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டங்களை கடந்து மூணாறை அடைந்தோம். பழைய மூணார் , புது மூணார் என்று பிரிக்கின்றார்கள். நிறைய உணவுவிடுதிகள் பழைய மூணாரில்தான் உள்ளன. நாங்கள் புது மூணாரில் தங்கினோம். நிறைய பேர் தங்கும் வசதியுடன் ரிசார்ட்ஸ் கிடைக்கின்றது. நாங்கள் தங்கியது உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி. சிறிய குழந்தைகள் இருக்கும்போது இதைத்தான் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சமயத்தில் பசிக்கும்.  ஆனாலும், மிக அழகாக உடுத்திக் கொண்டு கிளம்புவதில் சமர்த்தர்கள். சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலே இருந்தது. எங்களுக்கிருந்த விடுமுறையை கணக்கிட்டு சிலவற்றை நாங்கள் தேர்வு செய்ய, மழையால் திகில் கிளப்பிய வனாந்தரப்பகுதிகள் எங்களை சில இடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.
   
  எரவிக்குளம் தேசிய பூங்கா- சிறப்பு மிக்க வரையாடுகள் பார்க்கலாம். நாங்கள் சென்றபோது மழையினால் மண் சரிவு ஏற்பட்டு பூங்கா மூடப்பட்டுவிட்டது. 

   
  மாட்டுபட்டி அணை - பெரிய நீர் தேக்கம். சுற்றுலா பயணிகள்  ஷாப்பிங்               
                          இடமாகவும் இருக்கிறது.   
ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி - மலையேறுபவர்களுக்கு சொர்க்கம். எங்களைப் போன்றவர்களுக்கு வழுக்குப் பாறைகள் நிறைந்த திகில் பூமி.

 எக்கோ பாயிண்ட் - மலை முகடு. மூணாறைவிட அதிக உயரத்தில் உள்ள இடம். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகரித்து காது அடைத்துக் கொண்டு பேசுவது புரியாமல் தவித்தோம். சூடான தேநீர் மட்டுமே அதிக விருப்பமாக இருந்தது. 

 ஹைடெல் பார்க் - பூக்களின் தோட்டம். புகைப்பட பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

 குறிஞ்சி பூங்கா - இது போடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. . குதிரை சவாரி அருமை.



சுற்றிப்பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளன. கொடைக்கானல் போல கூட்டம் இல்லை. நமக்கே நமக்கான குளுமை. சமயத்தில் தலை வலித்தால் இருக்கவே இருக்கிறது மசாலா தேநீர். காடை முட்டை, வேக வைத்த சோளக்கதிர், சீமை இலந்தை போன்றவை கிட்டுகின்றன.  ஒரு உற்சாகமான மன நிலையில் இவற்றை அனைத்து தரப்பினரும் உண்ணுகிறார்கள்.

அதிக பட்ச குளுமையை தந்த காட்டுப்பகுதிகள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் உள்ள தேயிலைத் தோட்டங்கள். பெரும்பாலும் வட இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகள். இட்லிக்காக இரவில் பழைய மூணாரை தேடி யாத்திரை. இரவின் அமைதியில் இன்னும் கூடிப்போன உறைய வைக்கும் குளிர் - சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமோ?. மழையுடன் மலைப்பாதையில் திகிலூட்டும் பயணம் - காரோட்டி கடவுளாக தோன்றினார்.. விலை மலிவாக கிட்டிய நல்ல தரமான மசாலா பொருட்கள், டாடாவின் தேயிலை விற்பனை அங்காடிகள். இவைதான் எங்கள் பயணத்தின் கொசுறுச்செய்திகள்.

என்னுடைய அறிவுரை: சரியான நேரம் பார்த்து மூனார் செல்லுங்கள். மூனார் குளிரை அலட்சியமாக நினைக்காமல் கம்பளி உடைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது.  கொடைக்கானல் போல் இல்லாமல் சில சுற்றுலா இடங்கள் தனியார் ஏற்படுத்தியதாக உள்ளன. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கிடு கிடு பள்ளங்கள், தொலைவில் தெரியும் மலை முகடுகள், பச்சை பசேலென்ற காட்சிகள், அழகாக பூத்துக் கொலுங்கும் மலர்கள்- நீங்கள் இயற்கை விரும்பிகள் எனில் மூனார் ஒரு சொர்க்கம்தான்.

மலை இறங்கி குளிரிடம் விடைபெற்று போடியின் வெயிலை  உணர்ந்தபோது,  வந்த பாதையை திரும்பிப் பார்த்தபடி குட்டிம்மா கூறியது " ஹம் ஃபிர் சே ஆயேகா" - ( திரும்பவும் வரலாமா?)  அதுதான் எங்களின் விருப்பமும்.

06:07 | Author: சாகம்பரி
 வெறுமனே மண்ணாகவே இருந்திருக்கலாம்....
விளைநிலமாகி பசி தீர்த்து மகிழ்ந்திருப்பேன்.
அட, களிமண்ணாக இருந்திருந்தாலும்கூட,
கடவுள் சிலையாகி பல வரமளித்திருப்பேன்!

விண்ணில் நீர்த்துளியாக இருந்திருக்கலாம்...
மழையாக  உள்தாகம் தீர்த்து குளிர்ந்திருப்பேன்.
சிறிய வெண் மேகமாக இருந்திருந்தாலும்கூட,
சூரியனை மறைத்து குடையாகி காட்டியிருப்பேன்1

பச்சை மரமாக கிளைத்து இருந்திருக்கலாம்...
நிழலுக்கு புகலிடம் தந்து உயிர் காத்திருப்பேன்.
காற்று ஒடித்த குச்சிகளாக இருந்திருந்தால்கூட,
நெருப்பில் கங்குகளாக இருள் அகற்றியிருப்பேன்!

துகள் தூசாகி சிப்பியில் முத்தாகியிருக்கலாம்...
புல்லாகி பனி சேர்த்து பூப்பூக்க வைத்திருக்கலாம்,
இன்னும் வேறு ஏதாவதாககூட இருந்திருக்கலாம்,
உருப்படியாக அர்த்தம் புரிந்து வாழ்ந்திருப்பேன்!


எங்கேயோ கிடைத்த சிந்தனை வரம் கொண்டு,
வேதியியலும் உயிரியலும் சேர்ந்த கலவை நான்,
இயற்கையை அழித்து காற்றிலும் ஊழிக்காற்றாகி,
பூமியை சுற்றிய உயிர் மூச்சை உறிஞ்சிவிட்டேன்!

கால யந்திரத்தில் அழிவின் திசையில் பயணித்து,
பிரணவம் குடித்து நச்சு நொடிகளை குறிக்கும்
இறுதியை காட்டும் நாழிகை வட்டமாகிவிட்டேன்.
என்னிடமிருந்து பூமியை காத்திடுங்கள் தெய்வங்களே.

20:19 | Author: Ravi
வந்ததே  சொந்த வீடு


அணில் கீச்சிட்டு குதித்தோடும்

ஒரு ம
த்தியான வேளையிலோ...
உரிமையாளரின் கடிந்த குரலில்
உறக்கம் வரா பொழுதினிலோ...
எப்போதோ கைவிட்டுப் போன
காரைக் கட்டிடத்தின் வனப்பும்
கனவிலே வந்தே கலைத்தது...!
கல்லெறிந்த நீர் வளையங்கள்
துடுப்பிழந்த படகாய் ஆட்டிட,
மண்ணை உரிமை காணும்
ஆவல் உள்ளே கிளைத்தது.


கையிருப்பில் கட்டாந்தரையும்,
கடன் பெற்றே செங்கல் சுவரும்,
கழுத்து தங்கத்தை வைத்தாலும்
முழுமை பெறாமல் தவிர்த்தது.
வாரயிறுதி கறிச்சோறு விலக்கி
மதிய வேளையில் தேநீர் பருகி
காலை மாலையில் சிக்கனமாக
கீரையுடன் அரிசிக்கஞ்சி குடித்து,
குல தெய்வத் திருவிழா முடித்து,
ஒரு காசு வேண்டுதல் முடிச்சுடன்
பொங்கல் விழா புத்தாடை மறந்து
மழைக்கான கடவுளை வேண்டி...
பூமியிலிருந்து முளைத்து வந்தது
வெண்ணிறத்து தேவதையாகவே.


கடன் தீர, வைத்தது மீட்டெடுக்க
இன்னும் பல வருடம் விரதமே!
ஆனாலும்...
சன்னலோர மரத்தின்  காற்றில்
தவிட்டுக் குருவிகளும் கீச்சிட

வாயிலோரத்து மல்லிகை மணம்
குட்டித் தம்பியின் மழலைமொழி
அக்காவின் வெள்ளி கொலுசொலி
சின்னச் சின்ன சண்டைகளுடன்
துள்ளிக் குதித்தாடிய வெற்றிகள்
தற்காலிக தோல்வியின் அழுகை
அடுப்படியில் அம்மாவின் மணம்
அலமாரியில் அப்பாவின் உடை
இன்னும் எத்தனையோ....
அடிச்சுவடுகள் அரிச்சுவடிகளாய்
நினைவு பொதிந்த பெட்டகமாக
வாழ்ந்த கதை கூறும் தோழியாக
இனிய சுமையாகும் காதலிபோல்
வந்ததே எங்கள் சொந்த வீடு.!

                                     - சாகம்பரி


23:31 | Author: அன்னைபூமி
ஈழத்து தெருவோரம்
இரண்டு பட்டாம்பூச்சிகள்
காதுகிழிக்கும் குண்டுச்சத்தம். . .
கண்களில் மிரட்சித்திரை. . .
தெருநெடுக குருதிச்சகதி. . .
ஒருமைப்பாடாய் ஒப்பாரி. . .

இப்படியான சூழ்நிலைக் கொடுமைகளுடன்
இரண்டு பட்டாம் பூச்சிகளும்
வீதியுலா செல்கின்றன. . .அது
வீதியுலா அல்ல
பீதியுலா என்று
யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. . .

காற்றுவழிப் பயணத்திலும் - அடர்ந்த
காட்டுவழிப் பயணம்போல் பயம்
விழியினுள் நுலையும்
காட்சிகள் யாவும் சோக மயம். . .

குருதிச் சகதிக்குள்
மனிதப் பிரேதங்கள் விதைகளாய். . .
அவர்கள் மீண்டும் முளைத்திடார்களென
அய்யோ அங்கே மூலையின் ஓரம்
மூச்சுவிடக் கூட மறந்து
வீறிட்டு அழும் பச்சிளம் குழந்தையிடம்
யார் சொல்வது ? என
பட்டாம் பூச்சிகள் முனங்குவதை
யாரும் கேட்க வாய்ப்பில்லை. . .

அழும் குழந்தைக்கு அகோர பசி
குழந்தையின் ஒருபக்கம்
கஞ்சித்தட்டு அட்சயப்பாத்திரமாய்
மறுபக்கம் பெற்றோர்கள்
அனாதைப் பிணங்களாய். . .

கஞ்சித்தட்டை கைதொட்டு இழுத்து
சிணுங்கிக் கொண்டே - கீழே
சிந்திக்கொண்டே - குழந்தை
பருக்கைகளைச் சுவைக்கிறது
குருதிவாடையுடன். . .

வாயில்புகும் பருக்கைகள்
வளர்மொட்டுக்கு ஆகாரமாய். . .
கீழேவிழும் பருக்கைகள் - அதன்
பெற்றோர்களுக்கோ வாய்க்கரசியாய். . .

பூக்கள்கூட நெஞ்சில் குண்டுபாய்ந்து
கீழே சாய்ந்து இதழ்களில் இரத்தக்கரையுடன்
மாண்டு கிடக்கின்றன. . .

தாக்குதலுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள்
படகுகளில் கட்டுமரங்களில். . .ஊசலாடி
ஊசலாடும் உயிர்காக்க விரைகின்றனர். . .
அவர்களுடனே பட்டாம் பூச்சிகளும் பயணத்தில். . .

தூரத்தில் பெரிய படகு
துப்பாக்கிகளுடன் ஆட்கள்
ஆட்களா இல்லை
இல்லை அரக்கர்கள். . .
உயிருக்கு பயந்து கடலுக்கு
உள்ளே குதிக்கின்றனர் பாதிபேர்
உடலில் குண்டு பாய்ந்து
உயிரற்று விழுகின்றனர் மீதிபேர்
மூலை சிதறி. . .
உள்ளே குதித்தவர்கள்
மூச்சுத்திணறி. . .
கடல் அன்னையின் மடியில் தகனமாகின்றனர். . .
அவளும் தம் மக்களை அனைத்துக்கொள்கிறாள். . .
படகிடுக்கில் பதுங்கிக்கொண்டே
பட்டாம்பூச்சிகள் மட்டும் உயிருடன். . .
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
யாருமில்லை உயிருடன். . .

பட்டாம் பூச்சிகள் மட்டும்
பறந்து கொண்டிருகின்றன. . .இன்னமும்
பயணித்துக் கொண்டிருக்கின்றன. . .

எங்கோ குண்டடிபட்டு
இறக்கை முழுதும் கருகி
அரைகுறை உயிருடன்
அரைகுறை உடலுடன் - அவைகள்
மரணந்தேடி பயணிப்பதை
யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. . .



16:58 | Author: பிரணவன்
வீர மன்னர்கள்
வள்ளல் சிகரங்கள்
வாழவைத்த தெய்வங்கள் என
எண்ணில் அடங்கா
இயற்கைப் புனைப்பெயர்கள்
இந்தியர்களுக்கு. . .

அர்த்த சாஸ்த்திரம்
வான சாஸ்த்திரம்
என அடுக்கடுக்காய்
சாஸ்த்திரங்கள் பல
படைத்த இந்தியர்கள்
அடிமையாக்கப்படுவதா
ஆங்கிலேயர்களால். . .

வீரத்திற்கே விதையாய்
இருந்த நம்மவர்கள்
வீழ்ந்துகிடப்பதா
அன்னியன் காலடியில். . .

எத்தனையோ சடலங்கள்
எண்ணற்ற போர்க்கலங்கள்
ஏமாற்றங்கள் பல கண்டும்
எழுச்சி பெற்றது இந்தியா. . .

அகிம்சை அறங்கள்
ஆயுத போராட்டங்கள் என
அடுக்கடுக்காய் தொடர்ந்தன
அச்சுருத்தல்கள் பல
ஆங்கிலேயர் மேல். . .

அறமும் வீரமும் சேர்ந்தது
அகிம்சையும் ஆயுதமும் சூழ்ந்தது
விற்க வந்தவர்கள் வேட்டையாடுவதா?
விரட்டி அடிக்கப்பட்டனர். . .

வீன்போகவில்லை போராட்டங்கள்
சிந்திய ரத்தமும்
போர்க்கல புழுதியும்
எடுத்து திலகமாய் இட்டுக்கொள்ள
பெறப்பட்டது சுதந்திரம். . .
வென்றது இந்திய தேசிய ஒற்றுமை
வந்தே மாதரம். . .வந்தே மாதரம். . .
23:19 | Author: பிரணவன்
தேசியக்கவி பாரதியின் படைப்புகளை அவ்வளவாக படித்து முடித்திடாதவன் என்ற மன அழுத்தம் எனக்குள் இருந்தாலும், இப்படைப்பின் மூலம் அவருடைய குருமார்கள் மற்றும் நன்பர்கள், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் பற்றி நான் அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சிகொள்கின்றேன். இப்படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமிதம் அடைகின்றேன்.

பாரதியின் குருமார்களும், நண்பர்களும். இந் நூலின் ஆசிரியர் ஆர்.சி.சம்பத், இந் நூலை பதிப்பு செய்தவர்கள் தாமரை பப்ளிகேஷன்(பி)லிட். சென்னை. மேலும் இவர் குருவியும் நாரியும், புண்ணியம் தேடி, சிறுவர்களுக்கு லெனின் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியின் ஆன்மீக குருமார் நிவேதிதை தேவி, இவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை ஆவார். இவர்களுக்கு இடையிலான முதல் அறிமுகம், நிவேதிதை அறிமுகத்திற்கு பிறகு பெண் அடிமைத்தனத்தை அறவே அழிக்க பாரதியார் எழுதிய கவிதைகள் அதன் காரணங்கள், நிவேதிதை பற்றிய பாரதியாரின் கவிதை, போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.

குள்ளச்சாமி பாரதியாரின் ஞான குரு, இவரைப் பற்றி பாரதியார் தனது  படைப்புகளான சும்மா, சிதம்பரம், கோபந்தா போன்றவற்றில் எழுதியுள்ளார்,
பாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இடையேயான குருத்துப்பரிமாற்றம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு போன்றவற்றை எழுதியுள்ளார் ஆசிரியர்.

கோவிந்தசாமி பாரதியாரின் ஞானகுருக்களில் மிகவும் முக்கியமானவர், பாரதியாருக்கு தன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரண பயத்தை நீக்கியவர்.

யாழ்பாணத்துச்சாமி இவரும் பாரதியாரின் ஞானகுருக்களில் ஒருவர்.

பாரதியாரின் அரசியல் குரு பாலகங்காதர திலகர், இவர்களுக்கு இடையேயான அறிமுகம், நடந்த விசயங்கள் போன்றவற்றை அழகாய் சொல்லியிருக்கின்றார் இப்பதிப்பில் ஆசிரியர்.

மேலும் இவரது நண்பர்கள் 29 பேர் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பாரதியின் வாழ்க்கையில் குருமார்களும், நண்பர்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கும்.

இப்பதிப்பை எழுத காரணமாய் அமைந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
05:20 | Author: Ravi














வானுலக தேவதைகள்

வாயிற்படி தெய்வங்கள்

வண்ண வண்ண

பட்டாம் பூச்சிகள்

வாசம் மாறா

மலர்கள். . .

விண்வெளிப் பெண்கள்

வீராங்கனைகள் என

பெண்மையின் பரிமாணங்கள்

ஆதிகாலம் தொட்டு

நிகழ்காலம் வரை

பக்குவமாய் கிளை

விரித்துவிட்டன. . .



நிலம் நீர்

ஆகாயம் என

இந்திய இயற்கைத்தாயின்

அத்துனை படைப்புகளிலும்

பெண்மையின் அடையாளம்தான். . .



இருந்தும் சிவமில்லாத

சக்திக்கு  இங்கே

சரீர மதிப்பு

மட்டுமே. . .



கணவனை இழந்துவிட்ட

கைம்பெண் மீது

எத்துனை சமூதாயச்

சாயங்கள். . .



இரண்டே வர்ணத்தைக் கொண்டுள்ள

மனித பிறப்பில்

அர்த்த நாதீஸ்வரரைத் தவிர

வேறு எவருக்குத் தான்

சமபார்வை.?

பெண்மையின் மேல். . . 
        
    மூன்றாம் கோணம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை 
                                                  
                                               ........பிரணவன்
 


00:41 | Author: அன்னைபூமி

இதமான அதிகாலைப்பொழுது, அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து செல்கையில் ஈரத்தினுடன் இணைந்த அந்த வாசனை, எந்த வெளியில் நடந்தாலும் அந்த வழிப்பாதையும் அதன் வாசமும் நான் எங்கும் சூவாசித்தறியேன். நம் பார்வைக்கு அப்பார்பட்டு பல விசயங்களில் நாம் நம்மை மறந்து அனுபவித்த விசயங்க்களில் வாசனை நுகர்தலும் நம்மை அறியா நம் மனதுக்குள் நுலைந்த ஒரு அழகிய விசயமாகும். உண்ணும் உணவுகளில் இருந்து உடுத்தும் உடைவரை இந்த வாசமும் அதன் தனித்தன்மையும் மாறாதது. 
          சுவாசம் நம் உயிர் வாழ்வதற்கான விசயம் எனில், வாசம் நம் உணர்வுகளுக்கான விசயங்களில் ஒன்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு முறை நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் அந்த இடங்களின் காட்சிகள் மட்டும் மனதில் பதிவதில்லை அந்த மண்ணின் வாசமும் நம் நினைவுகளில் பதியப்படுத்தப்பட்டு விடுகின்றன. 
           நம் பள்ளிப் பருவ நாட்களாகட்டும், கல்லூரி நாட்க்களாகட்டும், பணி செய்த இடமாகட்டும், அதன் வாசனைகளும் நினைவுகளும் நம் நினைவைவிட்டு என்றும் நீங்கியதில்லை. மாலைப்பொழுதில் சாலையோர தேனீர் கடையில் அருந்திய தேனீரின் வாசம், நாம் எந்த பகுதியில் தேனீர் அருந்தினாலும் நம் நினைவுக்கு சட்டென்று வந்துவிடும்.
         நமக்கு பிடித்த விசயங்களையும் அதன் அத்தனை பரிணாமங்களையும் நாம் அதிகம் உள்வாங்கிவிடுகின்றோம். அம்மாவின் கைப்பக்குவ சாதம், ரயில் நிலைய சிற்றுண்டிச் சாலை, கோயில் திருணீறு, திருவிழாக்கால மிட்டாய் கடைகள், தேர்வு நேர வினாத்தாள், வயல் வெளிகளின் பசுமை வாசம் என பல விசயங்கள் நம்மையும் அறியாமல் நம் மனதில் பதிந்தவையாகும்.
         பழகிய, நாம் பழக்கப்படுத்திவிட்ட பல விசயங்கள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன. எல்லாவற்றிர்க்கும் பதிலாக நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மில் உரைந்துவிட்ட அந்த வாசம் என்றும் நம் நினைவில் இருந்து நீங்குவதில்லை. தனிமையில் கண்ணில் நிறைந்த காட்சிகளுக்கு உயிர் கொடுபதும் கூட இந்த வாசனை நினைவுகள் தான்.
          வாசனை ஒன்றேவும் பல நினைவுகளையும் நம் ஞாபகத்திற்கு கொண்டுவந்து விடுகின்றன. வாசம் மாறாது பலவிசங்களையும் நம் நினைவில் வைத்திருக்கும் என்னற்ற நினைவுகள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன, இருந்த போதும் அதன் வாசம் மட்டும் என்றும் மாறுபடுவதே இல்லை. . .