23:31 | Author: அன்னைபூமி
ஈழத்து தெருவோரம்
இரண்டு பட்டாம்பூச்சிகள்
காதுகிழிக்கும் குண்டுச்சத்தம். . .
கண்களில் மிரட்சித்திரை. . .
தெருநெடுக குருதிச்சகதி. . .
ஒருமைப்பாடாய் ஒப்பாரி. . .

இப்படியான சூழ்நிலைக் கொடுமைகளுடன்
இரண்டு பட்டாம் பூச்சிகளும்
வீதியுலா செல்கின்றன. . .அது
வீதியுலா அல்ல
பீதியுலா என்று
யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. . .

காற்றுவழிப் பயணத்திலும் - அடர்ந்த
காட்டுவழிப் பயணம்போல் பயம்
விழியினுள் நுலையும்
காட்சிகள் யாவும் சோக மயம். . .

குருதிச் சகதிக்குள்
மனிதப் பிரேதங்கள் விதைகளாய். . .
அவர்கள் மீண்டும் முளைத்திடார்களென
அய்யோ அங்கே மூலையின் ஓரம்
மூச்சுவிடக் கூட மறந்து
வீறிட்டு அழும் பச்சிளம் குழந்தையிடம்
யார் சொல்வது ? என
பட்டாம் பூச்சிகள் முனங்குவதை
யாரும் கேட்க வாய்ப்பில்லை. . .

அழும் குழந்தைக்கு அகோர பசி
குழந்தையின் ஒருபக்கம்
கஞ்சித்தட்டு அட்சயப்பாத்திரமாய்
மறுபக்கம் பெற்றோர்கள்
அனாதைப் பிணங்களாய். . .

கஞ்சித்தட்டை கைதொட்டு இழுத்து
சிணுங்கிக் கொண்டே - கீழே
சிந்திக்கொண்டே - குழந்தை
பருக்கைகளைச் சுவைக்கிறது
குருதிவாடையுடன். . .

வாயில்புகும் பருக்கைகள்
வளர்மொட்டுக்கு ஆகாரமாய். . .
கீழேவிழும் பருக்கைகள் - அதன்
பெற்றோர்களுக்கோ வாய்க்கரசியாய். . .

பூக்கள்கூட நெஞ்சில் குண்டுபாய்ந்து
கீழே சாய்ந்து இதழ்களில் இரத்தக்கரையுடன்
மாண்டு கிடக்கின்றன. . .

தாக்குதலுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள்
படகுகளில் கட்டுமரங்களில். . .ஊசலாடி
ஊசலாடும் உயிர்காக்க விரைகின்றனர். . .
அவர்களுடனே பட்டாம் பூச்சிகளும் பயணத்தில். . .

தூரத்தில் பெரிய படகு
துப்பாக்கிகளுடன் ஆட்கள்
ஆட்களா இல்லை
இல்லை அரக்கர்கள். . .
உயிருக்கு பயந்து கடலுக்கு
உள்ளே குதிக்கின்றனர் பாதிபேர்
உடலில் குண்டு பாய்ந்து
உயிரற்று விழுகின்றனர் மீதிபேர்
மூலை சிதறி. . .
உள்ளே குதித்தவர்கள்
மூச்சுத்திணறி. . .
கடல் அன்னையின் மடியில் தகனமாகின்றனர். . .
அவளும் தம் மக்களை அனைத்துக்கொள்கிறாள். . .
படகிடுக்கில் பதுங்கிக்கொண்டே
பட்டாம்பூச்சிகள் மட்டும் உயிருடன். . .
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
யாருமில்லை உயிருடன். . .

பட்டாம் பூச்சிகள் மட்டும்
பறந்து கொண்டிருகின்றன. . .இன்னமும்
பயணித்துக் கொண்டிருக்கின்றன. . .

எங்கோ குண்டடிபட்டு
இறக்கை முழுதும் கருகி
அரைகுறை உயிருடன்
அரைகுறை உடலுடன் - அவைகள்
மரணந்தேடி பயணிப்பதை
யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. . .



You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On August 24, 2011 at 9:51 AM , Ravi said...

பட்டாம்பூச்சிகள் பிழைத்துக் கொள்ள வேண்டும்.