17:49 | Author: சாகம்பரி

இப்போது மனோசக்தியை வலிமை செய்யும் எளிமையான வழிமுறையை பார்க்கலாம்.
கொஞ்சம் பாஸிடிவ் எண்ணங்களை மனதில் பதிந்து கொண்டால் நமக்குத் தேவையானதை அடையும் மனஉறுதி நம்மிடம் இருக்கும். வயிற்று பகுதி பயிற்சி எளிதில் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில் நாம் அவசரப்பட்டு தவறுகளை செய்ய மாட்டோம். மூளைக்கு செலுத்தப்படும் இரத்தம் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். இதனால்  நல்ல விசயங்கள் பதியப்படும். நம்மைபற்றிய ஹை-எஸ்டீம் (உயர்வான இமேஜ்) நம்முள் உருவாக்கப்படும். இதயத்தின் சுவாசம் மனஉறுதியை அதிகரிக்கும். அதில் தூய்மையான எண்ணங்கள் கலக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும். அன்-ஷேக்கபல் என்று சொல்வார்களே அதுபோன்ற தளராத மனம் கிடைக்கும்.
இத்தனை ப்ராஸஸ்களும் செய்வது ஒன்றைத்தான். எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை பதிய வைப்பது. இந்த எண்ணங்கள்தான் நமக்கு தேவையான மனோசக்தியை தரும். உடலுக்கு சக்தி தரும் ஊட்டசத்துக்கள்போல, இந்த ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு  நாம் தரும் விட்டமின் ஆகும். நாம் ஒரு பிரச்சினையை கவனப்படுத்தவும், தீர்வுகளை தேடித்தரவும், செய்யும் செயல்கள் வெற்றியடையவும் இது உதவும். (இது ரொம்பவும் அடிப்படையான பாடம்தான். இதை வைத்து ஹெலிகாப்டரை பறக்க விடுவது, நோக்கு வர்மம் செய்வது என்பதெல்லாம் முடியாது.)
செய்யும் செயல்கள் வெற்றியடைய தளராத முயற்சி வேண்டும். வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்முடைய மனதினை பொருத்ததுதான். நான் நல்லதுதானே நினைக்கின்றேன்… நான் எந்த தவறும் செய்யவில்லையே… நியாயமாக எனக்கு வேண்டியதை பெற விழைகிறேன்… கண்டிப்பாக இதற்கு ஒரு வழி இருக்கும். என்ற உறுதியை தந்து தேடலின் பாதையில் பயணிக்க வைக்கும். இதற்குதான் நம்மை பற்றிய ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
இப்போது விசயத்திற்கு வரலாமா? இத்தனை பயிற்சி எடுத்துதான் மனோசக்தியை செயல்பட வைக்க முடியும் என்றில்லை. எளிதான வழிதான். நம்மை பற்றி ஹை-எஸ்டீமை நம் மனதிற்குள் பதிய வைக்க வேண்டும்.        
இதனை ரிவர்ஸ் பார்முலா என்று சொல்லலாம். நம்ம மனசு ரொம்ப சுத்தம் என்ற வார்த்தையை பதிய வைக்க மூச்சு பயிற்சிதான் அவசியம் என்று இல்லை.  நம்மை பற்றிய  பாஸிட்டிவ்  இமேஜை மனதிற்குள் உருவாக்க நல்ல விசயங்களை பதிய வைக்க வேண்டும். நம்மை நாமே சபாஷ் என்று சொல்லி பாராட்டும் செயல்களை செய்ய வேண்டும்.
பரிட்சையில் முதலிடம் வருவது, ஹெச்ஆரிடம் நல்ல ரிமார்க் வாங்குவது… பாங்க் பாலண்ஸ் வைத்திருப்பது, சொந்தமாக வீடு வைத்திருப்பது, ம்… அழகான படித்த மனைவி… இதெல்லாம் சபாஷ் போட வைக்காது. மனிதாபிமானம் மிக்க செயல்கள் செய்யும்போது நம் மனம் நம்மை வாழ்த்தும். பாஸிட்டீவ் நோட்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளும்
பரிட்சையில் தோல்வியுற்றாலும் தளர்வடைய வைக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கும். வேலைபறி போனாலும் நம்மை பொறுப்புடன் சிந்திக்க வைத்து வருமானத்திற்கான வழியை தேட வைக்கும். குடும்பத்தினருடன் சண்டையிட வைத்து நம்மை பிரித்து வைக்காது.
மனிதாபிமானம் மிக்க செயல்கள் என்ன செய்யலாம்?
Caring and nurturing இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். இதுதான் நம்மைபற்றிய ஹை-எஸ்டீமை நமக்குள் பதிய வைக்கும்.  இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று நான் சொல்வதைவிட நீங்களே ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்களேன். அன்னதானம் செய்வது… இறைவனுக்கு பூஜை… அநாதை இல்லைத்திற்கு நன்கொடை… கும்பலாக சேர்ந்து கொண்டு தண்ணீர் பந்தல் வைப்பது… இதெல்லாம் இல்லை. இவையெல்லாம் வேல்யு கூட்டுவது மட்டுமே. தவிர இவற்றை எப்போதாவதுதான் செய்வோம்.
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும்   நம் ஆழ்மனம் நம்மை பாராட்டிக் கொள்ளும் செயல்களை செய்ய வேண்டும். சின்ன சின்ன செயல்கள்… உங்கள் பார்வையிலேயே படும்…
மனிதாபிமானம்… மனித அபிமானம்… சகமனிதர்களை   நேசிப்பது மட்டும் அல்ல. நம்மை நாமே மனிதனாக உணர்வது. இதுதான் மிக உயர்வானது. இந்த நிலையை சில செயல்கள் மட்டுமே பெற்று தரும்.  உதாரணமாக,
பேருந்தில் பயணிக்கிறோம். ஒரு வயதான பெரியவர் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வருகிறார். தடுமாறியபடி அவர் நிற்கும்போது மனம் பதைக்கிறது (மனம் பதைத்தால் நல்லது… உங்களுக்குள் ஒரு நல்ல மனம் இருக்கிறது என்று பொருள்). நாமும் நின்று கொண்டே செல்வதால் அவர்க்கு உதவ முடியாத நிலை. அந்த சமயத்தில்  யாராவது இருக்கையை விட்டு எழுந்து நின்று அவருக்கு இடம் தந்தால்… நமக்குள் ஒரு நிம்மதி வரும் பாருங்கள்… அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் லிஸ்டில் இடம் பெற வேண்டும்.
எந்த செயலை செய்தால் இரவு உறங்கும்முன் நினைவிற்கு வந்து நிம்மதியை தருகிறதோ… போற்றத்தக்க நல்ல செயல்களை செய்வது மட்டுமல்ல…  தவறு என்று மனம் நினைக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதுகூட நல்லதுதான். அது எல்லாமே ஹை-எஸ்டீம் லிஸ்ட்தான். எப்படி உடலுக்கு ஊட்ட சத்து மிக்க உணவுகள் தேவையோ அதுபோல, இதுதான் மனதிற்கு நாம் தரும் உணவு. நட்ட விதை முளைத்து பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும்போது, மனதிற்குள் இருக்கும் குப்பைகள் நாளடைவில் மக்கிப் போய்விடும்.
ஒரு இக்கட்டில் நாம் மாட்டும்போது ‘மாட்டிகிட்டாயா?’ என்று எக்காளமிட்டு குத்தி காட்டி நம்மை சாய்க்கும் வேலையை செய்யாது. ஒரு தவறும் நாம் செய்யவில்லை… இதுவும் கடந்து போகும் என்று தேற்றும். வழிகள் சொல்லி தரும். வெற்றி பெறுவோம் அழுத்தமாக எண்ண வைக்கும்.
எளிதாக சொல்லப் போனால்  நிறைய நல்ல விசயங்களை செய்யுங்கள், அது  நேர்மறை ஆற்றலை உங்கள் மனதிற்கு தரும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து போகும்.

இதுதான் அந்த காலத்து ரகசியம். இலகுவாக இருக்கும் மனம் சக்தி மிக்கதாக இருக்கும்!. அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையை எப்போதும் மனதிற்குள் கிளப்பும் இந்த காலகட்டத்தில் மனதை தொலைத்து விட்டு சிறிய விசயங்களைக்கூட சிக்கலாக்கி கொள்வோம்.  தேற்றுவாரும் போற்றுவாரும் இல்லை என்ற நிலையிலும் மனோசக்தி நமக்கு உதவும்.  சரியாக இதனை பயன்படுத்தி நம் வாழ்க்கையை கை கொள்ளுவோம்.!
நன்றி  
(முற்றும்)
Category: | Leave a comment
17:37 | Author: சாகம்பரி

மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி? உண்மை என்னவெனில் நம் அனைவரிடமும் மனோசக்தி இருக்கிறது. ஒரு பொக்கிஷம்போல்… ஆனால் தூசு படிந்து இருக்கிறது. அதை தூய்மைபடுத்தி விட்டால் இந்த சக்தி நமக்கு பயன்படும்.

மனோசக்தியை ஆக்டிவேட் செய்யத் தேவையானதாக சொல்லப்படுவது மூச்சு பயிற்சி.  ஆழ்ந்த மூச்சை இழுத்து விடும்போது நமக்குள் என்ன நடக்கிறது?

உடலின் உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் பாய்ச்சப்படுகிறது. ஆக்ஸிஜன் சக்தி செலுத்தப்படுகிறது. அட, சுவாசித்தல் என்பது நுரையீரல் மட்டும் தொடர்புடைய விசயம் அல்லவா? ஆனால், உள்ளுறுப்புகள் எவ்வளவோ இருக்கின்றனவே… அதையெல்லாம் மூச்சுப்பயிற்சி ஆக்டிவேட் செய்யுமா என்று கேட்க தோன்றும்.

செய்யும் என்பதுதான் உண்மை. மூச்சை இழுத்து விடும்போது வயிற்று பகுதிக்கு இரத்த சுழற்சி ஏற்படும்… இதயத்திற்கு இரத்தம் செலுத்தப்படும்… மூளைக்கு இரத்தம் செலுத்தப்படும். அந்தந்த இடத்தில் கவனம் வைக்கும்போது நாம் உணர முடியும்.

பிரணயாமம் செய்யும்போது மூக்கில் ஏற்படும் காற்றின் சுழற்சி மூளைக்கு இரத்தம் செல்லுவதை உணர வைக்கும்.  நெற்றி பொட்டில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையும்.

மார்புகூடு விரிவடையும் வண்ணம் ஆழ்ந்த மூச்சை  இழுக்கும் போது இருதயத்திற்கு இரத்தம் செல்கிறது.

அதேபோல வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிடும்போது வயிற்று பகுதிக்குள் குளுமை பரவுவதை உணர முடியும்.

இவைதான் நான் முதலில் தெரிவித்திருந்த மனோசக்தியை ஆளுமை செய்யும் மையங்கள்! இவைதான் மனோசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள நான் சொல்வதை முயற்சித்து பாருங்கள். மந்திரமாக நினைத்து சொன்னாலும் சரி… அழுத்தமான வார்த்தைகளாக சொல்லிப் பார்த்தாலும் சரி.

ஓம் என்று அழுத்தமாக உச்சரியுங்கள்… நெற்றிபொட்டில் மாற்றம் தெரியும். இது மூளைக்கான ஆக்டிவிட்டி!  நமசிவாய என்று சொல்லிப் பாருங்கள்  நெஞ்சுகூடு விரியும். வயிற்றில் கை வைத்துக் கொண்டு சம்போ என்று சொல்லிப்பாருங்கள் ‘ச’ உள்ளிழுக்கப்படும் காற்று ‘போ’ உச்சரிக்கும்போது வாய் வழியாக வெளியேறும். அது வெப்பமான காற்றாக இருக்கும்.

என்ன மந்திர பயிற்சி சொல்லித் தருகிறீர்களா என்று கேட்க வேண்டாம். வார்த்தைகள்தானே மந்திரம். இந்த உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளை எத்தனையோ வார்த்தைகள் செய்கின்றன. அவற்றில் சில மந்திரங்களாக இருக்கின்றன அவ்வளவுதான்.

சரி, இப்போது நாம் ஒரு விசயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். மூளை இருக்கும் தலைபகுதி, இதயம் இருக்கும் மார்பு பகுதி, வயிற்று பகுதி இவற்றில் ஏற்படும் மாறுதல்கள்தான் மனதை பாதிக்கின்றன. சரி, மூச்சு பயிற்சியின் மூலம்… நம்மால் இந்த பகுதிகளை தனித்தனியே ஆக்டிவேட் செய்ய முடியும் என்பது புரிகிறது அல்லவா?

மேலோட்டமான உணர்வுகளுக்கு வயிற்று பகுதி… திட்டமிடுதல்,  நினைவுகளை கையாளுதல் இவற்றிற்கு மூளை பகுதி… உறுதியான எண்ணங்களுக்கு இதயப்பகுதி என்று பிரிந்து செயல்படுகிறது.
இப்போது நாம் மூச்சு பயிற்சியை தொடங்குவோமா? முதலில் கையை வயிற்றில் வைத்து சம்போ என்று உச்சரித்து இரத்த ஓட்டத்தை  வயிற்று தசைக்கு மாற்றுங்கள். வாய் வழியே குளிர்ந்த காற்று உள்ளே செல்லும். சூடான காற்று வாய் வழியே வெளியேறும். வயிற்றின் வெப்பம் குறையும். இதை நீங்கள் எளிதாக செய்ய முடியும். பத்து நிமிடங்கள் இதை செய்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். டென்சன் குறைந்திருக்கும். சந்தேகம், பய உணர்வுகள் இருக்காது. கவலைகள் குறைந்து இயல்பாக சிரிக்கவும் முடியும்.

அடுத்து கண்களை மூடிக் கொண்டு மூக்கின் வழியே சுவாசித்து பாருங்கள். மூளைக்கு இரத்த ஓட்டம் பாயும் பயிற்சி.  புருவங்களுக்கு மத்தியில் கவனம் வையுங்கள். ஒரு நிமிடம்கூட தொடர்ந்து இதை செய்ய முடியாது. ஏனெனில்  இதை செய்யும்போது நமக்குள் இருக்கும் நினைவுகள் தூண்டப்படும். நம்மைபற்றிய நல்லது கெட்டது எல்லாம் நினைவிற்கு வரும். மனம் அமைதியாக இருக்காது. சுவாசிப்பதில் இருந்து கவனம் சிதறிவிடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கல்தான்! 

உண்மையில் நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை இங்கேதான் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால், நம்முடைய எண்ணம் பலிதமாக தேவையான செயல்பாட்டு முறைகள் வடிவு பெறும் .உதாரணமாக, நமக்கு ஒரு வேலை தேவை… அதற்கான அடிப்படை தகுதிகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை… தகுதிகள் இருந்தும் வேறு ஏதும் தடை உள்ளதா… அட்டிட்யூட் பிராப்ளம் போன்றவை… இதையெல்லாம் நம்மால் ஆய்வு செய்ய முடியும்.  நம்மை நாம் அறியும் இடமும்  நேரமும் இதுதான்!

அடுத்து இதயப்பகுதி சுவாசத்தை கவனியுங்கள். இதுதான் மனோசக்தியை வெளிக்கொணரும் முக்கியமான இடம்.  நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நீங்கள் கண்ணைமூடி சுவாசிக்கும்போது பழைய சம்பவங்கள், வெற்றி தோல்விகள், கடந்த காலத்தில் செய்த தவறுகள், ஒரு காலத்தில் நம்மிடம் இருந்த போற்றத் தக்க குணங்கள், கொள்கைகள், இனிமையான உறவுகளின் நினைவுகள் அடிமனதிலிருந்து வெளிக் கொணரப்படும்.இதுவரை இழந்தது பெற்றது அத்தனையும் நினைவிற்கு வரும். இங்கேயும் மூச்சை கவனிப்பதை விட்டுவிடுவோம். 

அடிமனதிலிருந்து எழும் நினைவுகளால் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அது தவறுகளை கரைக்கும் விதமாகவும் இருக்கும். நம்மைபற்றிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் கண்ணீராகவும் இருக்கும். நமக்கு முன் யாரோ இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டால் கொஞ்சம் புலம்பவும் செய்யலாம். இந்த உணர்வு  நம்மை தேற்றும்.

இதெல்லாம் ஆரம்ப கட்டம்தான். இந்த விசயத்தை செய்ய செய்ய, நம்மை நன்றாக புரிந்து கொண்டு விடுவோம். நமக்கு முன் அமர்ந்து இருக்கும் நீதிபதி நம் குறைகளை கேட்க ஆரம்பித்து விடுவார், அதற்கான நியாயத்தையும் தருவார். அந்த நீதிபதிதான் நம்முடைய ஆழ்மனம். அடிமனதில் இருக்கும் தங்கியிருந்த எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி விடும். ஆழ்மனம் தெளிவாக இருக்கும். குற்றமற்ற நெஞ்சம்தான் மனோசக்தியின் அடிப்படை தேவையாகும்.
மற்றவை அடுத்த வரும் கடைசி பகுதியில்.


Category: | Leave a comment
13:28 | Author: Ravi
மருத்துவமனையின் நாற்காலிகள்
அழுகையையோ சிரிப்பையோ
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
காத்திருக்கும் அவதிகளை…
பயணிகளின் இருக்கைகளும்
பாடங்களை பள்ளிக்கூட
இருக்கைகளும் பதிந்திருக்கும்
மயானத்து இருக்கைகள்
பழைய கதைகளை சொல்லும்
வாசலோரத்து இருக்கைகள்
வந்துபோன கதையினை சொல்லும்.
அழுகையோ அவதியோ
பாடமோ பழையகதையோ
இவை அத்தனையும் பதித்து
காத்திருத்தல்களின் சாயல்களை
ரகசியமாக மறைத்திருக்கும்
பூங்காவின் தனித்த இருக்கைகள்
Category: | Leave a comment
19:52 | Author: சாகம்பரி

ஆரோக்கியமான உடல் சீரான சிந்தனை தெளிவான முடிவுகளை எடுக்க வைக்கும்… வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும்.

அதெப்படி?

நம்முடைய மூளையின் வேலை சிந்திப்பது மட்டுமல்ல, நமக்கு தேவையான விவரங்களை எடுத்து தருவதும் ஆகும். இது முன்பே பதியப்பட்டு இருக்கும். அனுபவ அறிவு அல்லது கற்ற அறிவு இந்த விவரங்களை மூளையின் நியூரான்களுக்கு தந்திருக்கும். அதை தேவையான  நேரத்தில் தேடித் தருவது முக்கியமல்லவா?

“அந்த சமயத்தில் பதட்டமாக இருந்ததா…  நினைவிற்கு வரவில்லை”
“என்ன செய்வது கோபமாக இருக்கும்போது மூளை வேலை செய்ய மாட்டேங்குதே”
“திங்க் பண்ண ஆரம்பித்தாலே தலைவலிக்க ஆரம்பித்து விடுகிறது”

இதுபோன்ற வார்த்தைகளை நீங்களும் பேசியிருப்பீர்கள் அல்லவா?
இப்போது அறிவியல்படி பார்த்தால் ஒரு சூழலில் நம்மை இயக்குவது மூளையாகும்… என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அது ஏற்கனவே பதிவிட்டிருக்கும் மெமரியிலிருந்து எடுத்து தருகிறது. அமைதியாகவோ பதட்டமாகவோ கோபமாகவோ எப்படி இருந்தாலும் நம்முடைய மூளை மேற்சொன்ன வேலையை செய்துதானே ஆக வேண்டும்… அது வெறும் அறிவியலுக்கு கட்டுப்பட்டிருந்தால்…! ஆனால் அப்படி நடப்பது இல்லையே….

எனவே அறிவியல் செயலாக்கத்திற்கும் மேல் நமக்கு ஒரு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அந்த ஒத்துழைப்பை தருவது மனம் என்று சொல்லாமா? அது சக்தி வாய்த்ததாக இருக்க வேண்டும் அல்லவா? மனம் அமைதியாக இருந்தால் எண்ணம் செயலாகும்…. செயல் கைகூடும். கொஞ்சம் குழம்பி போனாலும் தோல்விதான். சரிதானே!

மனோசக்தியை வைத்து ஆகாயத்தில் பறப்பது… ஒரு பொருளை கை கொள்வது.. விரும்பியதை அடைவது… ஆன்மாவுடன் பேசுவது… நீர் மேல் நடப்பது, ஒருவரை நம் விருப்பப்படி செயல்பட வைப்பது என்று பல அதிசயங்கள் நடத்த முடியும். அவ்வாறு செய்து காட்டியும் இருக்கிறார்கள்.
அதற்காக மனோசக்தியை பலப்படுத்தும் பல பயிற்சிகள்கூட வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மூச்சு பயிற்சி, மூலாதாரம் தொடங்கி சகஸ்ரதளம் வரையிலான சக்கரங்களை இயக்குவது… ஆராவை பலப்படுத்துவது,  மெடிடேசன் செய்வது… இன்னும் சில பயிற்சிகள் போன்றவையெல்லாம் இருக்கட்டும். இவை அனைத்துமே ப்ராண சக்தியை சேர்த்து  மனதின் சக்தியை அதிகரிக்கவே உள்ளன. இதையெல்லாம் செய்து அதிசய சக்திகளை பெறலாமே என்று ஒரு பக்கம் தோன்றினாலும்,  நம்முடைய வாழ்க்கைக்கு இவையெல்லாம் எந்த முறையில் பயன்படக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த மனோசக்தியை கை கொண்டால்…

நம்முடைய நித்திய வாழ்க்கையின் சிக்கல்கள் தீருமா?
குடும்பத்தின் தேவைகள் நிறைவேற்ற பொருளாதாரம் பற்றிய கவலை, உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை, குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, வியாபாரி என்றால் அன்றைய வியாபாரம் பற்றிய கவலை, உத்தியோகம் செய்பவர் என்றால் டார்கெட்.. அசெஸ்மெண்ட் கவலை என்று ஆயிரம் கவலைகள் உள்ளன.

காலையில் எழுந்து குளித்து கிளம்பி அலுவலகம் சென்று அல்லல்பட்டு வேலை முடித்து வீடு திரும்புவது… (அதற்குள் உசுருக்கு உத்தரவாதம் இல்லாத நகர வாழ்க்கை)- வரை மனதை குழப்பும்  நிகழ்வுகள் எத்தனை… எத்தனை…?

இதில் எப்படி ப்ராணாயாமம் செய்வது… அமைதியாக மெடிடேசன் செய்வது… மனோசக்தியை ஆக்டிவேட் செய்வது என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இன்றைய பரபரப்பான உலகத்தில் கோவிலுக்கு சென்று அமைதியாக இறைவனிடம் வேண்டுதல் வைக்கவே முடியவில்லை… மனம் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே?
அப்புறம் நமக்கு வேறு சிந்தனை வரும்… குடும்பம்… அதன் தேவைகள்… சம்பாதியத்திற்கான அலைச்சல்கள், இத்துடன் சிறிய 
பிரச்சினைக்கெல்லாம் திடுமென ஆரம்பிக்கும் குடும்ப சண்டைகள் போஸ்ட்கார்ட் அளவில் ஆரம்பித்து போஸ்டர் அளவிற்கு விரிவாகும் அபாயத்தை கொண்டுள்ள வாய் தகராறுகள்…

இதையெல்லாம் தீர்த்தால்தான் மனதை அமைதிபடுத்த முடியும்… மனோசக்தியை பெற முடியும் என்று முடித்து வைத்து… அதெல்லாம் சாமியாரானால்தான் வரும் என்று மனோசக்தி என்ற வார்த்தையையே மறந்து விடுவோம்.

ஆனால்  மனோசக்தி என்ற வார்த்தை நமக்கு புதிதல்ல… நம் முன்னோர்கள் (அப்பா… தாத்தா… கொள்ளு தாத்தா..) பயனடைந்த சக்திதான்.. அவர்கள் எல்லாம் துறவறம் அல்லது பயிற்சிகள் மேற்கொண்டுதான் இதை பயன்படுத்தினார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னுடைய தாத்தா ஒருவர் இருந்தார், வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே சொல்லி விடுவார். கனவில் வந்தது என்றும்… திடீரென மனதிற்கு பட்டது என்றும் சொல்லுவார். ஆனால் அது எங்களுடைய குடும்பம் சம்பந்தபட்ட குறிப்புகளாகத்தான் இருக்கும். வெளியாட்கள் தொடர்புடையது அல்ல. (அதையெல்லாம் சாமியாடிகள்தான் செய்வார்கள்)

அதேபோல குடும்பத்தினர் யாருக்காவது பிரச்சினை என்றால் உடனேயே கோவிலுக்கு செல்வது, சிறப்பு வேண்டுதல்கள் செய்வது, குலதெய்வ பூஜை செய்வது… வீட்டில் அன்னதானம் செய்வது… என்று பரிகாரங்களையும் சொல்லுவார். அந்த பிரச்சினை தீர்ந்து விடும் அல்லது தீர்ப்பதற்கான வழி கிடைத்து விடும்.

அவர் இருந்தவரை எங்களுக்கு பிரச்சினைகள் பற்றிய கவலையே இல்லை. அவற்றை தடுக்கும் சக்தியும் மீட்கும் சக்தியும் தாத்தாவிடம் இருந்ததே! அந்த நம்பிக்கைதான் எங்களுக்கும் பாதுகாப்பாக இருந்த்து. ஆனால் அவர் மூச்சு பயிற்சி செய்ததில்லை, தியானம் செய்ததில்லை, அமைதி அமைதி என்று தேடியதில்லை. பூஜையறையில்கூட சில நிமிடங்கள்தான் அமர்வார். வேண்டுகோள் நிறைவேறினால் தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களை செய்திருக்கிறார். எந்த கட்டாயமும் இல்லாத நாட்களில் இவற்றை செய்வாரா என்று கேட்டால், அதற்கான மனஉறுதி இல்லையேப்பா என்றுதான் சொல்லுவார்.  ஏன் இப்படி?


ரகசியம் என்னவெனில் மனோசக்தியை அவருக்கு எளிதாக கையாளத் தெரிந்திருந்தது. தேவையான சமயத்தில் அதை பிரயோகிக்கவும் அவருக்கு தெரிந்திருந்தது. இது போதுமே! மற்றவர்களுக்காக அருள்வாக்கு சொல்வது, அவர்களை வியக்க வைக்கும் அதிசயங்களை செய்வது போன்றவை புகழுக்காகத்தான்… அது நமக்குத் தேவையில்லையே…

நம் வாழ்க்கையை  நல்லபடியாக வாழத்தேவையான பலம் கிடைத்தால் போதுமல்லவா? அதைக் கொண்டு ரொம்பவும் எளிமையாக அமைதியான வாழ்க்கை வாழ முயற்சிக்கலாமே!
அமைதியான வாழ்க்கைக்கு என்ன தேவை? அமைதியை குலைப்பது எது? பணத்தேவை… அன்பிலாத சூழல்… தனித்த வாழ்க்கை… உடல் நலமின்மை.. தோல்வியின் பயம்… இவைதானே. இவற்றை மனோசக்தியால் சரி செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்.   
மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Category: | Leave a comment
20:28 | Author: சாகம்பரி



       பிராண சக்தி என்பது லைஃப் எனர்ஜி (உயிர் சக்தி) என்று சமஸ்கிருதத்தில் பொருள் வருகிறது. ஆக்ஸிஜன்தான் ப்ராண வாயு என்பதும் அதனால் உருவாக்கப்படும் சக்திதான் ப்ராணசக்தி என்றும் கொள்ள வேண்டும். உடலியலை பொறுத்தவரை செல்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவை தயாரிக்க குளுக்கோஸுடன் ஆக்ஸிஜனும் சேர்ந்து வேதிவினை புரிகிறது. அதில் எச்சமாக காரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்ஸைட் வெளிவருகிறது. ஆக்ஸிஜனை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுவது நுரையீரலில் வேலை. இதுவரை அறிவியல் விளக்கம் சரி. ஆனால் இந்த ப்ராண வாயு எப்படி மனோசக்திக்கு வலு சேர்க்கிறது?

       இதற்கு நமக்குள் இருக்கும் சக்தி உருவாக்கும் மையங்களை கவனிக்க வேண்டும். இதை விஷூவலாக அறிய முடியாது ஆனால் உணர முடியும்.
       ஒரு விசயம் நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது… கோபம், துக்கம், மகிழ்ச்சி, வெறுப்பு, சாந்தம், பயம் என்று கவனப்படுத்தலாமா?. பேருந்து கூட்டத்தில் யாரோ ஒருவர் நம் காலை மிதித்து விடுகிறார். வலி….

அது உருவாக்கும் முதல் உணர்வு கோபம்தான்…
       “யார் என் காலை மிதித்தது?” என்று திரும்பி பார்க்கிறோம்… அந்த நபர் மன்னிப்பு கேட்கும் பாவனையில் நம்மை பார்த்தால் கோபம் குறைந்து விடுகிறது.   “கவனமாக நில்லுங்க” என்பதுடன் விசயம் முடிந்து விடும்.

 இது இரண்டாவது ரியாக்ஸன்…
        அவர் அலட்சியமாக பார்த்து, “கூட்ட நெரிசலில்   இப்படித்தான் நடக்கும்” என்றால்…  நமக்கு இன்னும் கொஞ்சம் கோபம் கூடும்.     இப்போது கண் சிவக்கவும் செய்யும்… வார்த்தைகள் துடித்து கொண்டு வெளிவரும்… பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதுதானே?

இதை மூன்றாவது கட்டம் என்று கொள்வோம்.  
       எதுவுமே  நடவாததுபோல  ஒரு ரியாக்ஸன் தருவோம்… சின்ன சிரிப்பு உதட்டில்  நிற்க பெருந்தன்மையான பாவனையுடன் நகர்ந்து விடுவோம்.  நமக்கு தெரிந்தவராக இருந்தால் இப்படி நடக்கும் அல்லது அந்த நபரிடம் நல்ல இமேஜை உருவாக்க நினைத்தால் இவ்வாறு செய்வோம்.

முதல் ரியாக்ஸன் உருவான இடம் மூளையாக இருக்கும்… அந்த வலியை உணர்ந்து கோபம் வருகிறதல்லவா அதற்கான நடவடிக்கைகளை ரத்த ஓட்டம் முகத்திற்கு ஏற்றி கோபம் வருகிறது. பிறகு எதிராளியின் பணிவை பார்க்கவும் அமைதியாகி விடுகிறோம். அத்தனையும் வாபஸ்! இங்கே உணர்வு மையம் மூளை! இதுவும் சக்தியை உருவாக்கும் இடம்தான்! வலிமையான சிந்தனைகளை உருவாக்கும்….  நம்மை பற்றிய பயோடேட்டா இங்கு இருக்கும். மன்னிப்பு கேட்டுட்டாரே விட்டுடலாமே என்ற ஆலோசனை தரும்.

இரண்டாவது ரியாக்ஸன் உருவாகும் இடம் வயிறு. டென்சன் அதிகரித்து அமிலத்தை சுரக்கச் செய்து வாடி வாசலில் இருந்து தலைதெறிக்க ஓடிவரும் காளையைபோல் கட்டுபாடிழக்க வைத்து பேச்சு சண்டையை ஆரம்பித்து வைக்கும். இதயத்துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவாக்கி… அதிக ஆக்ஸிஜனை உட்கொள்ள வைத்து… சண்டை முடிந்த பின் வயிறு எரியும். இதுவும் சக்தி உருவாகும் இடம்தான்.  நமக்கும் கொஞ்சம் விரையம்தான்!

மூன்றாவது ரியாக்ஸன் இதயத்தில் உருவாகும். உடனடி கோபத்தின் வேகத்தை குறைத்து முகத்தில் சிரிப்பை வரையும். இந்த இடத்தில் உள்ளுக்குள் அமைதி வந்துவிடும்.  நமக்கு தெரிந்தவர் என்ற எண்ணம் தோற்றுவிக்கும் அன்பின் வெளிப்பாடு!

இப்போது சொல்லுங்கள் நாம் சுவாசிக்கும் ப்ராண வாயு எப்போது ப்ராண சக்தியாக மாறுகிறது? என்று…. மூன்றாவது கட்டத்தில்தானே… ஏன் அங்கு உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன?. இந்த அமில சுரப்பு… டென்சன்… இதயதுடிப்பு அதிகரிப்பது எதுவுமே இல்லை. நமக்கு இதுதானே நல்லது.

சற்று யோசித்து பாருங்கள் ஒரு பயணத்தின் முடிவில் சகபயணியுடன் சண்டையிட்டு… வியர்த்து முகம் கறுத்து… தலைவலியுடன் பேருந்தில் இருந்து இறங்க வேண்டுமா? அல்லது அமைதியாக இறங்க வேண்டுமா? மனதை எளிமையாக்கிக் கொண்டால் இந்த கட்டுப்பாடும் எளிதாகி விடும். உண்மையில் அதுதான் நம் எண்ணங்கள் வெற்றியடைய செய்யும் சக்தி தருகிறது.

அமைதி மிக முக்கியம்… ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருக்கும் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை மனஅமைதியாகும். அப்போதுதான் சரியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க முடியும்.

வெறும் சுவாசித்தலில் மட்டும் ப்ராணசக்தியில்லை என்பது உண்மைதானே. இந்த மூன்று சக்தி மையங்களும் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் விதத்தில்தான் அது சக்தியாக மாறுகிறது. சுத்தமான காற்று ப்ராணவாயுவை தரலாம்… ஆனால் அமைதியான மனோபாவம்தான் ப்ராண சக்தியாக அதனை மாற்றும். சுத்தமான காற்றை சுவாசித்தாலும் அருகிலிருப்பவருடன் ஆர்க்யூமெண்ட் செய்து கொண்டிருந்தால் அது எப்படி சக்தியாக மாறும்? அது வெறும் மூச்சு காற்றின் பயணமாக மட்டுமே இருக்கும்! சிந்தனை ஒன்றுபட்டு சுவாசிக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும்.

எப்படியெல்லாம் இதை செய்ய முடியும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

🙇 இவ்வளவு  நீண்ட அப்சென்ஸ்க்கு மன்னிக்கவும்!  அடுத்த பகுதி 10-10-2018 அன்று வெளிவரும். நன்றி!
Category: | Leave a comment