17:37 |
Author: சாகம்பரி
மனோசக்தியை
ஆக்டிவேட் செய்யத் தேவையானதாக சொல்லப்படுவது மூச்சு பயிற்சி. ஆழ்ந்த மூச்சை இழுத்து விடும்போது நமக்குள் என்ன
நடக்கிறது?
உடலின் உள்ளுறுப்புகளுக்கு
இரத்தம் பாய்ச்சப்படுகிறது. ஆக்ஸிஜன் சக்தி செலுத்தப்படுகிறது. அட, சுவாசித்தல் என்பது
நுரையீரல் மட்டும் தொடர்புடைய விசயம் அல்லவா? ஆனால், உள்ளுறுப்புகள் எவ்வளவோ இருக்கின்றனவே…
அதையெல்லாம் மூச்சுப்பயிற்சி ஆக்டிவேட் செய்யுமா என்று கேட்க தோன்றும்.
செய்யும் என்பதுதான்
உண்மை. மூச்சை இழுத்து விடும்போது வயிற்று பகுதிக்கு இரத்த சுழற்சி ஏற்படும்… இதயத்திற்கு
இரத்தம் செலுத்தப்படும்… மூளைக்கு இரத்தம் செலுத்தப்படும். அந்தந்த இடத்தில் கவனம்
வைக்கும்போது நாம் உணர முடியும்.
பிரணயாமம்
செய்யும்போது மூக்கில் ஏற்படும் காற்றின் சுழற்சி மூளைக்கு இரத்தம் செல்லுவதை உணர வைக்கும். நெற்றி பொட்டில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையும்.
மார்புகூடு
விரிவடையும் வண்ணம் ஆழ்ந்த மூச்சை இழுக்கும்
போது இருதயத்திற்கு இரத்தம் செல்கிறது.
அதேபோல வயிற்றில்
கையை வைத்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிடும்போது வயிற்று பகுதிக்குள் குளுமை பரவுவதை
உணர முடியும்.
இவைதான் நான்
முதலில் தெரிவித்திருந்த மனோசக்தியை ஆளுமை செய்யும் மையங்கள்! இவைதான் மனோசக்தியை அதிகரிக்கச்
செய்யும்.
இன்னும் தெளிவாக
புரிந்து கொள்ள நான் சொல்வதை முயற்சித்து பாருங்கள். மந்திரமாக நினைத்து சொன்னாலும்
சரி… அழுத்தமான வார்த்தைகளாக சொல்லிப் பார்த்தாலும் சரி.
ஓம் என்று
அழுத்தமாக உச்சரியுங்கள்… நெற்றிபொட்டில் மாற்றம் தெரியும். இது மூளைக்கான ஆக்டிவிட்டி!
நமசிவாய என்று சொல்லிப் பாருங்கள் நெஞ்சுகூடு விரியும். வயிற்றில் கை வைத்துக் கொண்டு
சம்போ என்று சொல்லிப்பாருங்கள் ‘ச’ உள்ளிழுக்கப்படும் காற்று ‘போ’ உச்சரிக்கும்போது
வாய் வழியாக வெளியேறும். அது வெப்பமான காற்றாக இருக்கும்.
என்ன மந்திர
பயிற்சி சொல்லித் தருகிறீர்களா என்று கேட்க வேண்டாம். வார்த்தைகள்தானே மந்திரம். இந்த உச்சரிப்புகள் தரும்
அதிர்வுகளை எத்தனையோ வார்த்தைகள் செய்கின்றன. அவற்றில் சில மந்திரங்களாக இருக்கின்றன
அவ்வளவுதான்.
சரி, இப்போது
நாம் ஒரு விசயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். மூளை இருக்கும் தலைபகுதி, இதயம் இருக்கும்
மார்பு பகுதி, வயிற்று பகுதி இவற்றில் ஏற்படும் மாறுதல்கள்தான் மனதை பாதிக்கின்றன.
சரி, மூச்சு பயிற்சியின் மூலம்… நம்மால் இந்த பகுதிகளை தனித்தனியே ஆக்டிவேட் செய்ய
முடியும் என்பது புரிகிறது அல்லவா?
மேலோட்டமான
உணர்வுகளுக்கு வயிற்று பகுதி… திட்டமிடுதல்,
நினைவுகளை கையாளுதல் இவற்றிற்கு மூளை பகுதி… உறுதியான எண்ணங்களுக்கு இதயப்பகுதி
என்று பிரிந்து செயல்படுகிறது.
இப்போது நாம்
மூச்சு பயிற்சியை தொடங்குவோமா? முதலில் கையை வயிற்றில் வைத்து சம்போ என்று உச்சரித்து
இரத்த ஓட்டத்தை வயிற்று தசைக்கு மாற்றுங்கள்.
வாய் வழியே குளிர்ந்த காற்று உள்ளே செல்லும். சூடான காற்று வாய் வழியே வெளியேறும்.
வயிற்றின் வெப்பம் குறையும். இதை நீங்கள் எளிதாக செய்ய முடியும். பத்து நிமிடங்கள்
இதை செய்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். டென்சன் குறைந்திருக்கும். சந்தேகம்,
பய உணர்வுகள் இருக்காது. கவலைகள் குறைந்து இயல்பாக சிரிக்கவும் முடியும்.
அடுத்து கண்களை
மூடிக் கொண்டு மூக்கின் வழியே சுவாசித்து பாருங்கள். மூளைக்கு இரத்த ஓட்டம் பாயும்
பயிற்சி. புருவங்களுக்கு மத்தியில் கவனம் வையுங்கள்.
ஒரு நிமிடம்கூட தொடர்ந்து இதை செய்ய முடியாது. ஏனெனில் இதை செய்யும்போது நமக்குள் இருக்கும் நினைவுகள் தூண்டப்படும்.
நம்மைபற்றிய நல்லது கெட்டது எல்லாம் நினைவிற்கு வரும். மனம் அமைதியாக இருக்காது. சுவாசிப்பதில்
இருந்து கவனம் சிதறிவிடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கல்தான்!
உண்மையில் நாம் எதை அடைய
விரும்புகிறோமோ அதை இங்கேதான் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால்,
நம்முடைய எண்ணம் பலிதமாக தேவையான செயல்பாட்டு முறைகள் வடிவு பெறும் .உதாரணமாக,
நமக்கு ஒரு வேலை தேவை… அதற்கான அடிப்படை தகுதிகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை…
தகுதிகள் இருந்தும் வேறு ஏதும் தடை உள்ளதா… அட்டிட்யூட் பிராப்ளம் போன்றவை… இதையெல்லாம்
நம்மால் ஆய்வு செய்ய முடியும். நம்மை நாம்
அறியும் இடமும் நேரமும் இதுதான்!
அடுத்து இதயப்பகுதி
சுவாசத்தை கவனியுங்கள். இதுதான் மனோசக்தியை வெளிக்கொணரும் முக்கியமான இடம். நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நீங்கள் கண்ணைமூடி சுவாசிக்கும்போது
பழைய சம்பவங்கள், வெற்றி தோல்விகள், கடந்த காலத்தில் செய்த தவறுகள், ஒரு காலத்தில்
நம்மிடம் இருந்த போற்றத் தக்க குணங்கள், கொள்கைகள், இனிமையான உறவுகளின் நினைவுகள் அடிமனதிலிருந்து
வெளிக் கொணரப்படும்.இதுவரை இழந்தது பெற்றது அத்தனையும் நினைவிற்கு வரும். இங்கேயும்
மூச்சை கவனிப்பதை விட்டுவிடுவோம்.
அடிமனதிலிருந்து எழும் நினைவுகளால் கண்களில் கண்ணீர்
துளிர்க்கும். அது தவறுகளை கரைக்கும் விதமாகவும் இருக்கும். நம்மைபற்றிய பெருமிதத்தை
வெளிப்படுத்தும் கண்ணீராகவும் இருக்கும். நமக்கு முன் யாரோ இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை
உருவாக்கிக் கொண்டால் கொஞ்சம் புலம்பவும் செய்யலாம். இந்த உணர்வு நம்மை தேற்றும்.
இதெல்லாம்
ஆரம்ப கட்டம்தான். இந்த விசயத்தை செய்ய செய்ய, நம்மை நன்றாக புரிந்து கொண்டு விடுவோம். நமக்கு முன் அமர்ந்து
இருக்கும் நீதிபதி நம் குறைகளை கேட்க ஆரம்பித்து விடுவார், அதற்கான நியாயத்தையும் தருவார்.
அந்த நீதிபதிதான் நம்முடைய ஆழ்மனம். அடிமனதில் இருக்கும் தங்கியிருந்த எதிர்மறை எண்ணங்கள்
வெளியேறி விடும். ஆழ்மனம் தெளிவாக இருக்கும். குற்றமற்ற நெஞ்சம்தான் மனோசக்தியின் அடிப்படை
தேவையாகும்.
மற்றவை அடுத்த வரும் கடைசி பகுதியில்.
0 comments: