20:28 |
Author: சாகம்பரி
பிராண சக்தி என்பது லைஃப் எனர்ஜி (உயிர் சக்தி)
என்று சமஸ்கிருதத்தில் பொருள் வருகிறது. ஆக்ஸிஜன்தான் ப்ராண வாயு என்பதும் அதனால் உருவாக்கப்படும்
சக்திதான் ப்ராணசக்தி என்றும் கொள்ள வேண்டும். உடலியலை பொறுத்தவரை செல்களின் வளர்ச்சிக்கு
தேவையான உணவை தயாரிக்க குளுக்கோஸுடன் ஆக்ஸிஜனும் சேர்ந்து வேதிவினை புரிகிறது. அதில்
எச்சமாக காரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்ஸைட் வெளிவருகிறது. ஆக்ஸிஜனை உட்கொண்டு
கரியமில வாயுவை வெளியேற்றுவது நுரையீரலில் வேலை. இதுவரை அறிவியல் விளக்கம் சரி. ஆனால்
இந்த ப்ராண வாயு எப்படி மனோசக்திக்கு வலு சேர்க்கிறது?
இதற்கு நமக்குள் இருக்கும் சக்தி உருவாக்கும்
மையங்களை கவனிக்க வேண்டும். இதை விஷூவலாக அறிய முடியாது ஆனால் உணர முடியும்.
ஒரு விசயம் நம்மை
உணர்ச்சிவசப்பட வைக்கிறது… கோபம், துக்கம், மகிழ்ச்சி, வெறுப்பு, சாந்தம், பயம் என்று
கவனப்படுத்தலாமா?. பேருந்து கூட்டத்தில் யாரோ ஒருவர் நம் காலை மிதித்து விடுகிறார்.
வலி….
அது உருவாக்கும் முதல் உணர்வு கோபம்தான்…
“யார் என் காலை
மிதித்தது?” என்று திரும்பி பார்க்கிறோம்… அந்த நபர் மன்னிப்பு கேட்கும் பாவனையில்
நம்மை பார்த்தால் கோபம் குறைந்து விடுகிறது. “கவனமாக
நில்லுங்க” என்பதுடன் விசயம் முடிந்து விடும்.
இது இரண்டாவது ரியாக்ஸன்…
அவர்
அலட்சியமாக பார்த்து, “கூட்ட நெரிசலில் இப்படித்தான்
நடக்கும்” என்றால்… நமக்கு இன்னும் கொஞ்சம்
கோபம் கூடும். இப்போது கண் சிவக்கவும் செய்யும்… வார்த்தைகள் துடித்து
கொண்டு வெளிவரும்… பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதுதானே?
இதை மூன்றாவது
கட்டம் என்று கொள்வோம்.
எதுவுமே நடவாததுபோல ஒரு ரியாக்ஸன் தருவோம்… சின்ன சிரிப்பு உதட்டில் நிற்க பெருந்தன்மையான பாவனையுடன் நகர்ந்து விடுவோம். நமக்கு தெரிந்தவராக இருந்தால் இப்படி நடக்கும் அல்லது
அந்த நபரிடம் நல்ல இமேஜை உருவாக்க நினைத்தால் இவ்வாறு செய்வோம்.
முதல் ரியாக்ஸன்
உருவான இடம் மூளையாக இருக்கும்… அந்த வலியை உணர்ந்து கோபம் வருகிறதல்லவா அதற்கான நடவடிக்கைகளை
ரத்த ஓட்டம் முகத்திற்கு ஏற்றி கோபம் வருகிறது. பிறகு எதிராளியின் பணிவை பார்க்கவும்
அமைதியாகி விடுகிறோம். அத்தனையும் வாபஸ்! இங்கே உணர்வு மையம் மூளை! இதுவும் சக்தியை
உருவாக்கும் இடம்தான்! வலிமையான சிந்தனைகளை உருவாக்கும்…. நம்மை பற்றிய பயோடேட்டா இங்கு இருக்கும். மன்னிப்பு
கேட்டுட்டாரே விட்டுடலாமே என்ற ஆலோசனை தரும்.
இரண்டாவது
ரியாக்ஸன் உருவாகும் இடம் வயிறு. டென்சன் அதிகரித்து அமிலத்தை சுரக்கச் செய்து வாடி
வாசலில் இருந்து தலைதெறிக்க ஓடிவரும் காளையைபோல் கட்டுபாடிழக்க வைத்து பேச்சு சண்டையை
ஆரம்பித்து வைக்கும். இதயத்துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவாக்கி… அதிக ஆக்ஸிஜனை
உட்கொள்ள வைத்து… சண்டை முடிந்த பின் வயிறு எரியும். இதுவும் சக்தி உருவாகும் இடம்தான். நமக்கும் கொஞ்சம் விரையம்தான்!
மூன்றாவது
ரியாக்ஸன் இதயத்தில் உருவாகும். உடனடி கோபத்தின் வேகத்தை குறைத்து முகத்தில் சிரிப்பை
வரையும். இந்த இடத்தில் உள்ளுக்குள் அமைதி வந்துவிடும். நமக்கு தெரிந்தவர் என்ற எண்ணம் தோற்றுவிக்கும் அன்பின்
வெளிப்பாடு!
இப்போது சொல்லுங்கள்
நாம் சுவாசிக்கும் ப்ராண வாயு எப்போது ப்ராண சக்தியாக மாறுகிறது? என்று…. மூன்றாவது
கட்டத்தில்தானே… ஏன் அங்கு உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன?. இந்த அமில சுரப்பு…
டென்சன்… இதயதுடிப்பு அதிகரிப்பது எதுவுமே இல்லை. நமக்கு இதுதானே நல்லது.
சற்று யோசித்து
பாருங்கள் ஒரு பயணத்தின் முடிவில் சகபயணியுடன் சண்டையிட்டு… வியர்த்து முகம் கறுத்து…
தலைவலியுடன் பேருந்தில் இருந்து இறங்க வேண்டுமா? அல்லது அமைதியாக இறங்க வேண்டுமா? மனதை
எளிமையாக்கிக் கொண்டால் இந்த கட்டுப்பாடும் எளிதாகி விடும். உண்மையில் அதுதான் நம்
எண்ணங்கள் வெற்றியடைய செய்யும் சக்தி தருகிறது.
அமைதி மிக
முக்கியம்… ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருக்கும்
வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை மனஅமைதியாகும். அப்போதுதான் சரியான முடிவுகளை உடனுக்குடன்
எடுக்க முடியும்.
வெறும் சுவாசித்தலில்
மட்டும் ப்ராணசக்தியில்லை என்பது உண்மைதானே. இந்த மூன்று சக்தி மையங்களும் ஆக்ஸிஜனை
பயன்படுத்தும் விதத்தில்தான் அது சக்தியாக மாறுகிறது. சுத்தமான காற்று ப்ராணவாயுவை
தரலாம்… ஆனால் அமைதியான மனோபாவம்தான் ப்ராண சக்தியாக அதனை மாற்றும். சுத்தமான காற்றை
சுவாசித்தாலும் அருகிலிருப்பவருடன் ஆர்க்யூமெண்ட் செய்து கொண்டிருந்தால் அது எப்படி
சக்தியாக மாறும்? அது வெறும் மூச்சு காற்றின் பயணமாக மட்டுமே இருக்கும்! சிந்தனை ஒன்றுபட்டு
சுவாசிக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும்.
எப்படியெல்லாம் இதை செய்ய முடியும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!
2 comments:
Awaiting for your next post
Yes Thank you Siva