17:49 |
Author: சாகம்பரி
இப்போது மனோசக்தியை
வலிமை செய்யும் எளிமையான வழிமுறையை பார்க்கலாம்.
கொஞ்சம் பாஸிடிவ்
எண்ணங்களை மனதில் பதிந்து கொண்டால் நமக்குத் தேவையானதை அடையும் மனஉறுதி நம்மிடம் இருக்கும்.
வயிற்று பகுதி பயிற்சி எளிதில் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில்
நாம் அவசரப்பட்டு தவறுகளை செய்ய மாட்டோம். மூளைக்கு செலுத்தப்படும் இரத்தம் சிந்திக்கும்
திறனை அதிகரிக்கும். இதனால் நல்ல விசயங்கள்
பதியப்படும். நம்மைபற்றிய ஹை-எஸ்டீம் (உயர்வான இமேஜ்) நம்முள் உருவாக்கப்படும். இதயத்தின்
சுவாசம் மனஉறுதியை அதிகரிக்கும். அதில் தூய்மையான எண்ணங்கள் கலக்கும்போது மனோசக்தி
அதிகரிக்கும். அன்-ஷேக்கபல் என்று சொல்வார்களே அதுபோன்ற தளராத மனம் கிடைக்கும்.
இத்தனை ப்ராஸஸ்களும்
செய்வது ஒன்றைத்தான். எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை பதிய வைப்பது. இந்த
எண்ணங்கள்தான் நமக்கு தேவையான மனோசக்தியை தரும். உடலுக்கு சக்தி தரும் ஊட்டசத்துக்கள்போல,
இந்த ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு நாம் தரும் விட்டமின்
ஆகும். நாம் ஒரு பிரச்சினையை கவனப்படுத்தவும், தீர்வுகளை தேடித்தரவும், செய்யும் செயல்கள்
வெற்றியடையவும் இது உதவும். (இது ரொம்பவும் அடிப்படையான பாடம்தான். இதை வைத்து ஹெலிகாப்டரை
பறக்க விடுவது, நோக்கு வர்மம் செய்வது என்பதெல்லாம் முடியாது.)
செய்யும் செயல்கள்
வெற்றியடைய தளராத முயற்சி வேண்டும். வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்முடைய
மனதினை பொருத்ததுதான். நான் நல்லதுதானே நினைக்கின்றேன்… நான் எந்த தவறும் செய்யவில்லையே…
நியாயமாக எனக்கு வேண்டியதை பெற விழைகிறேன்… கண்டிப்பாக இதற்கு ஒரு வழி இருக்கும். என்ற
உறுதியை தந்து தேடலின் பாதையில் பயணிக்க வைக்கும். இதற்குதான் நம்மை பற்றிய ஹை-எஸ்டீம்
நம் மனதிற்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
இப்போது விசயத்திற்கு
வரலாமா? இத்தனை பயிற்சி எடுத்துதான் மனோசக்தியை செயல்பட வைக்க முடியும் என்றில்லை.
எளிதான வழிதான். நம்மை பற்றி ஹை-எஸ்டீமை நம் மனதிற்குள் பதிய வைக்க வேண்டும்.
இதனை ரிவர்ஸ்
பார்முலா என்று சொல்லலாம். நம்ம மனசு ரொம்ப சுத்தம் என்ற வார்த்தையை பதிய வைக்க மூச்சு
பயிற்சிதான் அவசியம் என்று இல்லை. நம்மை பற்றிய பாஸிட்டிவ்
இமேஜை மனதிற்குள் உருவாக்க நல்ல விசயங்களை பதிய வைக்க வேண்டும். நம்மை நாமே
சபாஷ் என்று சொல்லி பாராட்டும் செயல்களை செய்ய வேண்டும்.
பரிட்சையில்
முதலிடம் வருவது, ஹெச்ஆரிடம் நல்ல ரிமார்க் வாங்குவது… பாங்க் பாலண்ஸ் வைத்திருப்பது,
சொந்தமாக வீடு வைத்திருப்பது, ம்… அழகான படித்த மனைவி… இதெல்லாம் சபாஷ் போட வைக்காது.
மனிதாபிமானம் மிக்க செயல்கள் செய்யும்போது நம் மனம் நம்மை வாழ்த்தும். பாஸிட்டீவ் நோட்ஸ்
எடுத்து வைத்துக் கொள்ளும்
பரிட்சையில்
தோல்வியுற்றாலும் தளர்வடைய வைக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கும்.
வேலைபறி போனாலும் நம்மை பொறுப்புடன் சிந்திக்க வைத்து வருமானத்திற்கான வழியை தேட வைக்கும்.
குடும்பத்தினருடன் சண்டையிட வைத்து நம்மை பிரித்து வைக்காது.
மனிதாபிமானம்
மிக்க செயல்கள் என்ன செய்யலாம்?
Caring
and nurturing இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். இதுதான் நம்மைபற்றிய ஹை-எஸ்டீமை
நமக்குள் பதிய வைக்கும். இதை செய்யுங்கள் அதை
செய்யுங்கள் என்று நான் சொல்வதைவிட நீங்களே ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்களேன். அன்னதானம்
செய்வது… இறைவனுக்கு பூஜை… அநாதை இல்லைத்திற்கு நன்கொடை… கும்பலாக சேர்ந்து கொண்டு
தண்ணீர் பந்தல் வைப்பது… இதெல்லாம் இல்லை. இவையெல்லாம் வேல்யு கூட்டுவது மட்டுமே. தவிர
இவற்றை எப்போதாவதுதான் செய்வோம்.
ஒரு நாளைக்கு
ஒரு முறையேனும் நம் ஆழ்மனம் நம்மை பாராட்டிக்
கொள்ளும் செயல்களை செய்ய வேண்டும். சின்ன சின்ன செயல்கள்… உங்கள் பார்வையிலேயே படும்…
மனிதாபிமானம்…
மனித அபிமானம்… சகமனிதர்களை நேசிப்பது மட்டும்
அல்ல. நம்மை நாமே மனிதனாக உணர்வது. இதுதான் மிக உயர்வானது. இந்த நிலையை சில செயல்கள்
மட்டுமே பெற்று தரும். உதாரணமாக,
பேருந்தில்
பயணிக்கிறோம். ஒரு வயதான பெரியவர் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வருகிறார். தடுமாறியபடி
அவர் நிற்கும்போது மனம் பதைக்கிறது (மனம் பதைத்தால் நல்லது… உங்களுக்குள் ஒரு நல்ல
மனம் இருக்கிறது என்று பொருள்). நாமும் நின்று கொண்டே செல்வதால் அவர்க்கு உதவ முடியாத
நிலை. அந்த சமயத்தில் யாராவது இருக்கையை விட்டு
எழுந்து நின்று அவருக்கு இடம் தந்தால்… நமக்குள் ஒரு நிம்மதி வரும் பாருங்கள்… அதை
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் லிஸ்டில் இடம் பெற வேண்டும்.
எந்த செயலை
செய்தால் இரவு உறங்கும்முன் நினைவிற்கு வந்து நிம்மதியை தருகிறதோ… போற்றத்தக்க நல்ல
செயல்களை செய்வது மட்டுமல்ல… தவறு என்று மனம்
நினைக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதுகூட நல்லதுதான். அது எல்லாமே ஹை-எஸ்டீம் லிஸ்ட்தான்.
எப்படி உடலுக்கு ஊட்ட சத்து மிக்க உணவுகள் தேவையோ அதுபோல, இதுதான் மனதிற்கு நாம் தரும்
உணவு. நட்ட விதை முளைத்து பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும்போது, மனதிற்குள் இருக்கும்
குப்பைகள் நாளடைவில் மக்கிப் போய்விடும்.
ஒரு இக்கட்டில்
நாம் மாட்டும்போது ‘மாட்டிகிட்டாயா?’ என்று எக்காளமிட்டு குத்தி காட்டி நம்மை சாய்க்கும்
வேலையை செய்யாது. ஒரு தவறும் நாம் செய்யவில்லை… இதுவும் கடந்து போகும் என்று தேற்றும்.
வழிகள் சொல்லி தரும். வெற்றி பெறுவோம் அழுத்தமாக எண்ண வைக்கும்.
எளிதாக சொல்லப்
போனால் நிறைய நல்ல விசயங்களை செய்யுங்கள்,
அது நேர்மறை ஆற்றலை உங்கள் மனதிற்கு தரும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து போகும்.
இதுதான் அந்த
காலத்து ரகசியம். இலகுவாக இருக்கும் மனம் சக்தி மிக்கதாக இருக்கும்!. அடுத்த நொடி என்ன
நடக்கப் போகிறதோ என்ற கவலையை எப்போதும் மனதிற்குள் கிளப்பும் இந்த காலகட்டத்தில் மனதை
தொலைத்து விட்டு சிறிய விசயங்களைக்கூட சிக்கலாக்கி கொள்வோம். தேற்றுவாரும் போற்றுவாரும் இல்லை என்ற நிலையிலும்
மனோசக்தி நமக்கு உதவும். சரியாக இதனை பயன்படுத்தி
நம் வாழ்க்கையை கை கொள்ளுவோம்.!
நன்றி (முற்றும்)
0 comments: