19:43 |
Author: அன்னைபூமி
கடைவீதி தெருமுனை திருப்பத்தில்
கல்லில் பட்டு காலில் இரத்தம்
வலியில் சுளித்த ஏதோ ஒரு முகம்,
மூன்றவது அடுக்கு மாடி வீட்டில்
முனகிக் கொண்டு மூச்சை பிடித்து
சன்னல் வழியே பறக்க எத்தனிக்கும்
உயிர்பறவையின் கடைசி பிரயத்தனங்கள்,
சாலையோரத்து குப்பைதொட்டியில்
எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்
அதனுடன் சண்டையிடும் கதறல்கள்,
சூரியனின் வெப்ப சவுக்கடிகள்,
கண் எரிக்கும் காரத்துகள்கள்,
மூச்சு திருப்ப பயமுறுத்தும்
அவலப்பட்ட காற்றின் அச்சம்....
எதுவும் இல்லாத தனிமையில்
சற்றே உயர மலைக்குன்றின்
கைப்பிடியில் உலகம் ரம்மியமானது
மற்றவற்றை மலையைவிட்டு
இறங்கும்போது பார்த்துக் கொள்வோம்
அதுவரை என்னை மறந்திடுங்கள்!
சாகம்பரி, மதுரை
15:33 |
Author: அன்னைபூமி
31 நாடுகளில் அணு சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது 443 அணு உலைகள் உள்ளன. 62 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக 482 அணு உலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணு சக்தி உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கின்றது. உலகில் உற்பத்தியாகும் அணுசக்தியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 27 சதவிகிதம் ஆகும். அமெரிக்காவை அடுத்து 17 சதவிகித பங்களிப்புடன் பிரான்சு 2 வது இடத்திலும், 13 சதவிகித பங்களிப்புடன் ஜப்பான் 3 வது இடத்திலும், 6 சதவிகித பங்களிப்புடன் ரசியா 4 வது இடத்திலும், 5 சதவிகித பங்களிப்புடன் ஜெர்மனி 5 வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கட்டுமான பணியில் (projects under construction) 8 உலைகளும், கட்டுமான பணி திட்டமிடலில் (planned projects)21 உலைகலும், அணு உலை அமைக்க திட்டமிடலில் (projects are firmly proposed)15 உலைகளும் பயன்பாட்டிற்கு வருகைதர உள்ளன. திட்டங்கள் முடிவடைந்த நிலையில் செயல் பாட்டின் துவக்க நிலையில் 2 அணு உலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தமிழ் நாட்டில் செயல்படப்போகின்றது.
ஆனால் இந்தியாவில் வெறும் 2 .2 சதவிகிதம் மின்சாரம் மட்டுமே அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செயப்படுகின்றன.
நமது அடுத்த பதிப்பில் அணு உலைகளால் ஏற்ப்படும் பாதிப்புகள் பற்றி காண்போம் . . .
19:22 |
Author: அன்னைபூமி
ஆகாயத்திலிருந்து
பூமிக்கு வந்த
மழைத்துளியின்
சரணாலயம்
இல்லை .....
பூமிக்கு வரவில்லை
இடையில் மலையரசியின்
மடிப் பிள்ளையானது
கைப்பிள்ளையானதால்
தரையிறங்க பயந்து
அங்கேயே கொஞ்சம்
தஞ்சம் புகுந்தது
வெண் மேகங்கள் உலா
விடியாத பொழுதில்
வானின் வண்ணம்
வாங்கி நீல ஆடை
உச்சி வெயிலில்
சூரிய கதிர்களின்
மஞ்சள் பட்டு தரித்து
இருளின் கரும் ஆடை
வெள்ளி நிலா பொட்டு
விண்மீன்களின் ஜிகினா
குமரிப்பெண்ணின்
குதூகலத்துடன் .....
நீல வானின் அருகேமலையை விட்டு
வண்டல் மண்ணின்
அழுக்கு தேசத்தில்
பயத்துடன் பயணிக்க
பச்சை மரங்கள்
தலையசைத்து வாழ்த்த
வறண்ட பூமியின்
தாகம் தீர்த்து
தாய்மை கண்டது.
சாகம்பரி , மதுரை
16:19 |
Author: அன்னைபூமி
உன் பாதங்களுக்கு
அடியில் பூக்களாய்
மலர ஆசை . . .
மலரிலும் நீ
எவ்வளவு மென்மையானவள்
என்பதை அறிந்துகொள்ள. . .
18:49 |
Author: அன்னைபூமி
சாலை கடக்கும்போது
எதிர்புற மரத்தடியில்
சாக்குப் பை விரிப்பின் மீது
நலிந்த தேகம்
பையைப் போலவே
நைந்து நிறம் மாறி
நடுங்கி நீண்ட கை
பசிக்குரல்...!
கடிகார முட்கள்
துரத்த தயக்கத்துடன்
தாண்டிப் போனேன்
சற்று பொறுத்து
தெரு முனை
திரும்பும் முன்
இதயம் வலிக்க
அனிச்சையாய்
திரும்பிய கண்ணில்
யாரோ ஒருவர்
கையில் உணவுடன்
மரத்தடியில் நிற்க
சற்றே நிம்மதியுடன்
மூச்சு திருப்பினேன்.
கவிதை மட்டும் என்னுடையது. கவிதையின் கரு
உங்களுடையதாகக்கூட இருக்கலாம்.சாகம்பரி மதுரை
-
19:27 |
Author: அன்னைபூமி
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூல பொருட்களை கொண்டே உருவாக்கபடுகின்றன..... அனைத்து உயிரினங்களின் உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏவைதான் சார்ந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த டி.என்.ஏ பற்றிய சில தகவல்கள் :
1. டி.என்.ஏ என்பதன் முழுபெயர் டிஆக்சிரைபோ நுக்ளிக் அசிட் (Deoxyribonucleic acid) தமிழில் "ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்" எனப் பொருள் தரும். உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு டி.என்.ஏவே காரணமாகும்.
2. இதன் வடிவம் ஓர் நீண்ட ஏணியை முறுக்கியது போன்று இருக்கும். இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன, அடினீன் (adenine) குவானீன் (guanine) தைமீன் (thymine) சைற்றோசின் (cytosine) போன்ற அமினோ அமிலங்களையும் சுகர் மற்றும் ஃபொஸ்பேட் அணுக்களையும் கொண்டே உருவாக்கபட்டுள்ளன.
3. இந்த டி.என்.ஏ வடிவத்தை ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃப்ரன்சிஸ் க்ரிக் 1953ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள்.
4. மனித உடலிலுள்ள டி.என்.ஏகளின் எண்ணிக்கையும் அதன் செயல்பாடுகளையும், மரபியல் தகவல்ளையும் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டமே மனித மரபகராதித் திட்டம் (Human genome project).
5. இந்த திட்டம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2003ம் ஆண்டு நிறைவடைந்தது.
6. நமது உடலிலுள்ள டி.என்.ஏகளை மொத்தமாக மரபகராதி(Genome) என்பார்கள். மரபகராதி என்பது டி.என்.எயில் குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்த மரபியல் தகவல்ளையும் குறிக்கிறது.
7. நமது மரபகராதியில் மொத்தம் 3,000,000,000 டி.என்.ஏகள் உள்ளன..
8. உண்மையென்ன வென்றால் நம்முடைய டி.என்.ஏ போலவேதான் நம் பக்கத்திலுள்ள அறிமுகமில்லாத நபரின் டி.என்.ஏ அமைப்பும் 99.9 சதவிகிதம் ஒத்து இருக்கும் . 0.01 சதவீகிதத்தில்தான் வேறுபாடு.
9. சமீபத்திய ஆராய்ச்சியின்படி நவீன யுக மனிதன் ஆதிமனிதனாகிய நியண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ களில் 1 லிருந்து 4 சதவிகிதம் வரை பெற்றுள்ளான். ஆனால் மனிதக் குரங்குடன் 96 லிருந்து 99 சதவிகிதம் வரை ஒத்துள்ளது.