20:15 | Author: அன்னைபூமி
     

   ஒரு கிரியேட்டிவ் வொர்க் - புத்தகம், திரைப்படம், இசை, ஓவியம் - படித்தோ, பார்த்தோ, கேட்டோ முடித்தபின் சில நிமிடங்களாவது நம்மை பேச்சிழக்கச் செய்வதோ, மனதின் ஒரு மூளையில் நின்று கொண்டு சிந்தனையை நாட்கணக்கில் ஆட்கொள்வதோ அதை உன்னதமான படைப்பாக்கி விடுகிறது. இது அந்த படைப்பாளியின் படைப்பின் மீதான முழு ஈடுபாட்டின் பலன் என்றும் அதற்காக அவர்கள் ஏற்றுக்கொண்ட வலி மிக பெரியது என்பதும் நமக்குப் புரியாமல் போய்விடுகிறது. சொல்லப்போனால் நந்தாவில் ஆரம்பித்தது. ஏன் இப்படி ? இப்ப்டியெல்லாம் நடக்குமா? வரையரைக்குட்படாத மனமாச்சரியங்களை இயக்குனர்.பாலாவின் கதாபாத்திரங்கள் உரத்து பேசின. சூழ்நிலைகள், மனிதர்கள், அவர்களின் நடத்தைகள் பற்றி என்னுடைய ஆராய்ச்சிகள் தொடங்கியது அப்போதுதான். Behavioural ethics நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்று உணர்ந்ததும் அப்போதுதான். வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போய் வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டு வாழ்கின்ற கதாபாத்திரங்கள்தான் இயக்குனர் பாலாவின் படைப்புகள். இப்போது அவன், இவனிற்கு செல்லலாம்

இயக்குனர் பாலாவின் ரசிகை என்பதை விட, அந்த கதாபாத்திரங்களுடன் பயணித்து அதிசமான விளிப்புகளை அனுபவித்து உணர்ந்தவள் என்று சொல்லலாம். ஆனால், அவன் இவன் பற்றி பலவிதமான  விமர்சனங்களை  படித்து  இயக்குனர்பாலாவின் படம் அல்ல என்ற முடிவிற்கு வந்து மறுக்கவே, முடியாமல் என் கணவரின் அழைப்பிற்காக சென்றேன் என்பதுதான் உண்மை. பாலாவையும் காணவில்லை கதையையும் காணவில்லை என்று பலர் பறை சாற்றிய அந்தப் படத்தின் முடிவில் வழக்கம் போலவே நான்தான் தொலைந்து போய்விட்டேன். இப்படியெல்லாம் கதாபாத்திரங்களை படைக்க முடியுமா? படத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் கற்பனையே என்று சொல்லத்தான் முடியுமா? வேறு வேறு குணாதிசயங்கள், வேறுபட்ட வாழ்க்கை தரத்தில் இருப்பவர்கள் ஒரே கதைக்களத்தில் வரும்போது இது போன்ற படைப்புகள் உருவாகின்றன. அத்தனை பேருக்காகவும் கதையை நகர்த்துகின்ற படைப்பாளியின் லாகவம், மனோதத்துவத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்படுகிறது. என்னை பொறுத்தவரை கதையின் நாயகன் , அவனுமல்ல இவனுமல்ல எல்லோராலும் கோமாளி என்று முத்திரை குத்தப்பட்ட ஹைனஸ் கதாபாத்திரம்தான் ஹீரோ. கதையின் மொத்த கட்டுப்பாடும் அந்த மனிதரிடம்தான் உள்ளது.

தென் தமிழகத்தின் ஒரு மூலையில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைபட்ட ஒரு ஊரில், வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். சூதாட்டத்திலோ தவறான பழக்கத்தினாலோ நொடித்துப் போகவில்லை, உறவினரால் ஏமாற்றப்பட்டு அத்தனையையும் இழந்தவர். தன் தவறால் இழந்திருந்தால் தண்டனையாக தனிமையாக நாட்களை கடத்தியிருக்கலாம். ஆனால் ஏமாற்றப்பட்டதால், உறவுகளைவிட்டு ஒதுங்கி இருப்பவர். பொதுவாக இப்படித்தான், தன்னிலை தாழ்ந்துவிட்டால் உறவுகளை விட்டு விலகும் மனோபாவம்தான் வரும். ஒன்று சிரிப்பை மறந்து இறுக்கமான மனிதர்களாகிவிடுவார்கள் அல்லது திடீரென்று தொலைத்துவிட்ட வாழ்க்கையை மனதின் ஒரு மூலையில் போட்டுவிட்டு, நகைச்சுவை மனிதர்களாகிவிடுவார்கள். அந்த சிரிப்பு, மனதின் வலிக்கான மருந்து. ஆனால் அவர்களுக்குள் விதைக்கப்பட்ட மேன்மக்கள் தத்துவங்கள் ஒரு போதும் அழிந்து போகாது. அவர்களின் தேவை , சோகத்தை நினைவுபடுத்தாத நொடிகளை கரைத்துக் கொண்டுபோகக் கூடிய லகுவான மனிதர்கள். வழுக்கு நிலத்தில் ஒரு கைத்தடியை போல. அதற்கான வடிகால்கள்தான் அவனும், இவனும் அந்த குண்டுப்பையனும். வன அதிகாரி சீண்டும்போது, அந்த சமயம் பொறுத்துவிட்டு பிறகு புலம்பி பதிலடி கொடுக்கும் மனிதரால் அடிமாடு கடத்தலை பொறுத்துக்கொள்ளவே முடியாமல் உடனேயே சீறுகிறார். முன்னது அவர் சொந்தபிரச்சினை, பின்னது அவருடைய மேன்மக்கள் தத்துவமான அநியாயத்தினை அனுமதிக்காத சிந்தனை.

அப்புறம் அவருடைய முடிவு. சட்டத்திற்கு அப்பாற்பட்டு மாடுகளை இறைச்சிக்காக விற்று கொழுத்த பணம் சம்பாத்தித்தாலும், பணத்தின் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மையை தெரிந்து வைத்திருக்கும் மாட்டுக்காரன் .பணத்தை ஆயுதமாகவும் மற்றவர்களுக்கு அவன் மேலிருக்கும் பயத்தை தடுப்பாகவும் கொண்டு வரையறை மீறியவன். அவனுடைய உடனடி தேவை, மற்றவர்கள் அவன் மேல் வைத்திருந்த பயம். ஜமீன்தாருக்கு தண்டனை. இரண்டிற்காகவும் எடுத்த ஆயுதம்தான் நிர்வாண மரணம். ஆடையிழந்து நிற்கும் மனிதரின் தன்னம்பிக்கை இழந்த கண்ணில் தெரியும் பயம் அவனுக்கு போதை மருந்து. வாயில்லாத ஜீவனை அடித்து பழகியவனுக்கு ஜமீன்தாரும் ஒரு மாட்டைப் போல மாறுகிறார். பழிவாங்கும் படலம் முடிந்த பின் பயத்தை பதிக்கும் நடவடிக்கை. இறந்துபோன உடலை குளிப்பாட்டவே சில உறவுமுறைகளுக்கு மட்டும்தான் உரிமை தரும் மதிப்பான சமுதாயத்தில் உயிரைவிடக்கூட பயப்படமாட்டார்கள். ஆடையே இல்லாமல் அடித்து தொங்கப்படவிடுவது , எதிர்ப்புக் குரல் கொடுப்பவனையும் தயங்க வைக்கும் விசயம். இன்னும்கூட கிராமத்தில் குடும்ப கௌரவரத்தை அழித்தவனையோ குடும்பத்தையே அழித்தவனையோ இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு விடுகின்றன. கதையின் துணை கதாபாத்திரங்களை நாயகராக கொண்டு கதையை தேடினால் எங்கே கிடைக்கும் ? விசாலுக்கு எதற்கு ஒன்றரைக்கண் தோற்றம் என்பதற்குகூட விளக்கம் தர முடியும். பெண்பிள்ளைத்தனமான கலைஞன் கதாபாத்திரத்தின் நளினாமான பெண் பார்வைக்கு ஒத்து வராத கம்பீரமான கண்கள் விசாலுடையது. ஒன்றரைக் கண்களாக இருக்கும்போது நாமும் அத்தனை ஆழமாக ஆராய முடியாது.

இன்னும் எத்தனையோ விளக்கம் சொல்லமுடியும், எழுத்தில் கொண்டிவரமுடியாத எத்தனையோ விசயங்களை படத்தில் கொண்டுவரமுடியும். அதனை முழுவதுமாக பயன்படுத்தியிருக்கும் படம்தான் அவன்-இவன். ஸ்தம்பித்து போய் உலகத்தை மறக்க வைத்த வினாடிகளுக்காக இயக்குனர்.பாலாவிற்கு மீண்டும் நன்றிகள்.

                                                                                            -  சாகம்பரி 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On June 30, 2011 at 7:47 AM , Unknown said...

what a great job...
Vaalga valamudan..

 
On June 30, 2011 at 7:47 AM , Unknown said...

hey mee the firstu...

 
On June 30, 2011 at 7:54 AM , சாகம்பரி said...

காலை வணக்கம் சிவா. க்ரேட் ஜாப்ங்கறது, படத்தைதானே குறிப்பிடுகிறது.

 
On June 30, 2011 at 3:46 PM , அன்னைபூமி said...

பலாவின் படைப்புகள் அத்தனையிலும் கதை சொல்லக்கூடிய படைப்புகள் பல இருக்கும். அவரின் இந்த படைப்பும் அப்படித்தான். உங்களது விமர்சனமும் பலாவின் படைப்பு போலவே அருமை அம்மா . . .

 
On July 1, 2011 at 9:33 AM , இராஜராஜேஸ்வரி said...

iசிறப்பான பகிர்வுக்கு நன்றி.