09:23 | Author: சாகம்பரி
    பொருளீட்டும் முயற்சியில் மும்பை, பெங்களூர், பூனே என்று வெவ்வேறு திசைக்கு பிரிந்து தொலை தூரத்தில் இருந்தாலும் , வருடம் ஒரு முறை ஒன்றாக சகோதர சகோதரிகள் சில நாட்கள் சேர்வது வழக்கம். இது மூத்தவர்களுக்கு சிறிய வயதின் நினைவுகளின் மறுபதிப்பாக இருந்தாலும், அதே பிணைப்பு இளையவர்களுக்கிடையிலும் இருக்கவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கொருமுறையாவது கண்டிப்பாக சந்திப்போம். வழக்கமான விருப்பம் கொடைக்கானல்தான். ஆனால் சென்றமுறை  விடுமுறைக்கு அங்கு சென்று தங்குமிடம், உணவிற்காக சிரமப்பட்டது நினைவிற்கு வந்ததால் இந்த முறை எங்கள் விருப்பம் முன்னார் எனப்படும் மூணார் ஆனது.

சுற்றுலா திட்டமிடும்போது ரொம்பவும் திட்டமிட மாட்டோம். எங்களுடைய  பயண அமைப்பாளர் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவருடைய நண்பர் மூணாறில் தங்கும் விடுதி வைத்திருப்பதாக தெரியவுமே கிளம்பிவிட்டோம். மலையாள உச்சரிப்புடன் பேசிய நண்பரின் குரலில் ஏதோ தயக்கம். தங்கும் விடுதியின் வாடகை அதிகமிருக்குமோ என்றுகூட தோன்றியது. அதன் உண்மையான காரணம் பிறகுதான் புரிந்தது. இரண்டு சுமோவை கேட்டவர்களை மறுத்து ரைனோவை தருவித்ததில் எங்களுக்கு சற்று வருத்தம்தான். சுமோவில் இருக்கும் சுதந்திரம் ரைனோவில் இல்லை. சுமோவின் பின்பக்கம் குட்டீஸ்கள் ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.  கட்டிவைக்கப்பட்ட உணர்வுடன் மலை ஏறிய பின்னர்தான் புரிந்தது. மிகவும் நெருக்கடியான மலைவளைவுகள் (கொடைக்கானலைவிட அதிகம்) ஒரு படகைப்போல எங்கள் வாகனத்தை ஆட்டியெடுக்க உள்ளேயே குலுங்கிக்கொண்டதோடு சிரமம் முடிந்துவிட்டது. சுமோ எனில் எண்ணிலடங்கா வண்ணம் வாகனத்திற்குள்ளேயே உருண்டிருப்போம். கடவுளுக்கு நன்றி!

போடி தாண்டியதுமே, மலையேற்றம் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் மலையேறியதுமே சில்லிட்ட காற்று நெற்றியில் இரத்தத்தை உறைய வைத்தது. மூனாரில் சாரல் மழையாம். இப்போது புரிகிறதா மலையாள நண்பரின் தயக்கத்தின் காரணம். பச்சை போர்வை விரித்ததுபோல ஆரம்பித்த மலைச்சாலையை பார்த்து  இளையவர்கள் ( 5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள்) போட்ட கூச்சலில் எங்களுக்கு முகம் மலர்ந்தது.   " ஹேய் , இது ஏலக்காய் செடி." " இதிலேருந்துதான் டீ தாயாரிக்கிறார்களாம்" என்று கண்ணில் பட்ட செடிகளை சுட்டியபடி உற்சாகக்குரல்கள். ஏலக்காய் செடியில் இப்போது காய் எதுவும் விட்டிருக்கவில்லை. ஒரு முறை மேகமலை சென்றபோது பார்த்த நினைவு வந்தது. இன்னும் சில பழ மரங்கள். அந்த மண்ணிற்கே உரியது. பாதி மலையேறவுமே  வாகனத்தை நிறுத்தி சோதனை. கேரள எல்லையாம். எங்கள் அலைப்பேசியில் வரவேற்பு செய்திகள் வர ஆரம்பித்தன. ரோமிங் கட்டணத்தை நினைவுபடுத்துகிறார்களாம். மலை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள். கலைந்த போர்வை போல தோற்றமளித்து எடுத்து உதறி மீண்டும் சரியாக போர்த்தத் தூண்டுகிறது.

மீதிருந்த மலை வளைவுகளில் குலுங்கி குலுங்கி - 24 என்று பார்த்த நினைவு- வழியில் தென்பட்ட கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டங்களை கடந்து மூணாறை அடைந்தோம். பழைய மூணார் , புது மூணார் என்று பிரிக்கின்றார்கள். நிறைய உணவுவிடுதிகள் பழைய மூணாரில்தான் உள்ளன. நாங்கள் புது மூணாரில் தங்கினோம். நிறைய பேர் தங்கும் வசதியுடன் ரிசார்ட்ஸ் கிடைக்கின்றது. நாங்கள் தங்கியது உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி. சிறிய குழந்தைகள் இருக்கும்போது இதைத்தான் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சமயத்தில் பசிக்கும்.  ஆனாலும், மிக அழகாக உடுத்திக் கொண்டு கிளம்புவதில் சமர்த்தர்கள். சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலே இருந்தது. எங்களுக்கிருந்த விடுமுறையை கணக்கிட்டு சிலவற்றை நாங்கள் தேர்வு செய்ய, மழையால் திகில் கிளப்பிய வனாந்தரப்பகுதிகள் எங்களை சில இடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.
   
  எரவிக்குளம் தேசிய பூங்கா- சிறப்பு மிக்க வரையாடுகள் பார்க்கலாம். நாங்கள் சென்றபோது மழையினால் மண் சரிவு ஏற்பட்டு பூங்கா மூடப்பட்டுவிட்டது. 

   
  மாட்டுபட்டி அணை - பெரிய நீர் தேக்கம். சுற்றுலா பயணிகள்  ஷாப்பிங்               
                          இடமாகவும் இருக்கிறது.   
ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி - மலையேறுபவர்களுக்கு சொர்க்கம். எங்களைப் போன்றவர்களுக்கு வழுக்குப் பாறைகள் நிறைந்த திகில் பூமி.

 எக்கோ பாயிண்ட் - மலை முகடு. மூணாறைவிட அதிக உயரத்தில் உள்ள இடம். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகரித்து காது அடைத்துக் கொண்டு பேசுவது புரியாமல் தவித்தோம். சூடான தேநீர் மட்டுமே அதிக விருப்பமாக இருந்தது. 

 ஹைடெல் பார்க் - பூக்களின் தோட்டம். புகைப்பட பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

 குறிஞ்சி பூங்கா - இது போடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. . குதிரை சவாரி அருமை.சுற்றிப்பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளன. கொடைக்கானல் போல கூட்டம் இல்லை. நமக்கே நமக்கான குளுமை. சமயத்தில் தலை வலித்தால் இருக்கவே இருக்கிறது மசாலா தேநீர். காடை முட்டை, வேக வைத்த சோளக்கதிர், சீமை இலந்தை போன்றவை கிட்டுகின்றன.  ஒரு உற்சாகமான மன நிலையில் இவற்றை அனைத்து தரப்பினரும் உண்ணுகிறார்கள்.

அதிக பட்ச குளுமையை தந்த காட்டுப்பகுதிகள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் உள்ள தேயிலைத் தோட்டங்கள். பெரும்பாலும் வட இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகள். இட்லிக்காக இரவில் பழைய மூணாரை தேடி யாத்திரை. இரவின் அமைதியில் இன்னும் கூடிப்போன உறைய வைக்கும் குளிர் - சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமோ?. மழையுடன் மலைப்பாதையில் திகிலூட்டும் பயணம் - காரோட்டி கடவுளாக தோன்றினார்.. விலை மலிவாக கிட்டிய நல்ல தரமான மசாலா பொருட்கள், டாடாவின் தேயிலை விற்பனை அங்காடிகள். இவைதான் எங்கள் பயணத்தின் கொசுறுச்செய்திகள்.

என்னுடைய அறிவுரை: சரியான நேரம் பார்த்து மூனார் செல்லுங்கள். மூனார் குளிரை அலட்சியமாக நினைக்காமல் கம்பளி உடைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது.  கொடைக்கானல் போல் இல்லாமல் சில சுற்றுலா இடங்கள் தனியார் ஏற்படுத்தியதாக உள்ளன. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கிடு கிடு பள்ளங்கள், தொலைவில் தெரியும் மலை முகடுகள், பச்சை பசேலென்ற காட்சிகள், அழகாக பூத்துக் கொலுங்கும் மலர்கள்- நீங்கள் இயற்கை விரும்பிகள் எனில் மூனார் ஒரு சொர்க்கம்தான்.

மலை இறங்கி குளிரிடம் விடைபெற்று போடியின் வெயிலை  உணர்ந்தபோது,  வந்த பாதையை திரும்பிப் பார்த்தபடி குட்டிம்மா கூறியது " ஹம் ஃபிர் சே ஆயேகா" - ( திரும்பவும் வரலாமா?)  அதுதான் எங்களின் விருப்பமும்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 31, 2011 at 9:43 AM , ரைட்டர் நட்சத்திரா said...

பகிர்வுக்கு நன்றி

 
On August 31, 2011 at 10:49 AM , இராஜராஜேஸ்வரி said...

ஹம் ஃபிர் சே ஆயேகா" - ( திரும்பவும் வரலாமா?) அதுதான் எங்களின் விருப்பமும்.//

அருமையான இடம் குடும்பத்தோடு குதூகலித்த மலரும் நினைவுகளின் மணம் பரப்புகிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

 
On August 31, 2011 at 1:42 PM , Yaathoramani.blogspot.com said...

மூணார் குறித்த விரிவான த்கவல்களுடன் கூடிய
பதிவு மிக மிக அருமை
படங்கள் இன்னும் ஒன்றிரண்டு இணைத்திருக்கலாமோ
என்ற எண்ணம் வந்தது..குளுமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

 
On August 31, 2011 at 5:06 PM , சாகம்பரி said...

பாராட்டிற்கு நன்றி, திரு.கார்த்தி கேயனி

 
On August 31, 2011 at 5:08 PM , சாகம்பரி said...

தோழர்கள் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால், ஒரு மாறுதலுக்கு இந்தப் பதிவு. நன்றி தோழி

 
On August 31, 2011 at 5:09 PM , சாகம்பரி said...

இப்போது இன்னும் சில படங்களை இணைத்துவிட்டேன். தமிழ்மண ஓட்டிற்கு நன்றி ரமணி சார்.