21:00 | Author: சாகம்பரி










என்னவோ ஒரு தாளத்தில்
இதயம் ஓயாமல் துடிக்குது.
குழந்தையின் மழலையை...
குழலின் இனிமையை விட
ராகம் மாறாமல் கேட்குது
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!

எண்ணங்கள் கைகூடிடும்
சில சமயம் வேகம் கூடும்.
ஆகாயத்தில் தாவி குதிக்க
அலைஅலையாய் மிதக்க
காற்றேணியில் ஏறி உலவ
தண்டவாளத்து குதிரையின்
தடதடக்கும் தாளம் வரும்.


மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!
சுவாசித்தலே சுமையாக...
எழுந்து நிற்கவே சோம்பி,
கைகளில் முகம் புதைத்து,
கண்கள் மூடி இருள் தேடி..
நத்தை அடியோசை ஒற்றி
மெதுவாக தாளம் மாறும்!

எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் ம
ரத்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!

அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!


06:07 | Author: சாகம்பரி
 வெறுமனே மண்ணாகவே இருந்திருக்கலாம்....
விளைநிலமாகி பசி தீர்த்து மகிழ்ந்திருப்பேன்.
அட, களிமண்ணாக இருந்திருந்தாலும்கூட,
கடவுள் சிலையாகி பல வரமளித்திருப்பேன்!

விண்ணில் நீர்த்துளியாக இருந்திருக்கலாம்...
மழையாக  உள்தாகம் தீர்த்து குளிர்ந்திருப்பேன்.
சிறிய வெண் மேகமாக இருந்திருந்தாலும்கூட,
சூரியனை மறைத்து குடையாகி காட்டியிருப்பேன்1

பச்சை மரமாக கிளைத்து இருந்திருக்கலாம்...
நிழலுக்கு புகலிடம் தந்து உயிர் காத்திருப்பேன்.
காற்று ஒடித்த குச்சிகளாக இருந்திருந்தால்கூட,
நெருப்பில் கங்குகளாக இருள் அகற்றியிருப்பேன்!

துகள் தூசாகி சிப்பியில் முத்தாகியிருக்கலாம்...
புல்லாகி பனி சேர்த்து பூப்பூக்க வைத்திருக்கலாம்,
இன்னும் வேறு ஏதாவதாககூட இருந்திருக்கலாம்,
உருப்படியாக அர்த்தம் புரிந்து வாழ்ந்திருப்பேன்!


எங்கேயோ கிடைத்த சிந்தனை வரம் கொண்டு,
வேதியியலும் உயிரியலும் சேர்ந்த கலவை நான்,
இயற்கையை அழித்து காற்றிலும் ஊழிக்காற்றாகி,
பூமியை சுற்றிய உயிர் மூச்சை உறிஞ்சிவிட்டேன்!

கால யந்திரத்தில் அழிவின் திசையில் பயணித்து,
பிரணவம் குடித்து நச்சு நொடிகளை குறிக்கும்
இறுதியை காட்டும் நாழிகை வட்டமாகிவிட்டேன்.
என்னிடமிருந்து பூமியை காத்திடுங்கள் தெய்வங்களே.