20:15 | Author: அன்னைபூமி
     

   ஒரு கிரியேட்டிவ் வொர்க் - புத்தகம், திரைப்படம், இசை, ஓவியம் - படித்தோ, பார்த்தோ, கேட்டோ முடித்தபின் சில நிமிடங்களாவது நம்மை பேச்சிழக்கச் செய்வதோ, மனதின் ஒரு மூளையில் நின்று கொண்டு சிந்தனையை நாட்கணக்கில் ஆட்கொள்வதோ அதை உன்னதமான படைப்பாக்கி விடுகிறது. இது அந்த படைப்பாளியின் படைப்பின் மீதான முழு ஈடுபாட்டின் பலன் என்றும் அதற்காக அவர்கள் ஏற்றுக்கொண்ட வலி மிக பெரியது என்பதும் நமக்குப் புரியாமல் போய்விடுகிறது. சொல்லப்போனால் நந்தாவில் ஆரம்பித்தது. ஏன் இப்படி ? இப்ப்டியெல்லாம் நடக்குமா? வரையரைக்குட்படாத மனமாச்சரியங்களை இயக்குனர்.பாலாவின் கதாபாத்திரங்கள் உரத்து பேசின. சூழ்நிலைகள், மனிதர்கள், அவர்களின் நடத்தைகள் பற்றி என்னுடைய ஆராய்ச்சிகள் தொடங்கியது அப்போதுதான். Behavioural ethics நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்று உணர்ந்ததும் அப்போதுதான். வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போய் வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டு வாழ்கின்ற கதாபாத்திரங்கள்தான் இயக்குனர் பாலாவின் படைப்புகள். இப்போது அவன், இவனிற்கு செல்லலாம்

இயக்குனர் பாலாவின் ரசிகை என்பதை விட, அந்த கதாபாத்திரங்களுடன் பயணித்து அதிசமான விளிப்புகளை அனுபவித்து உணர்ந்தவள் என்று சொல்லலாம். ஆனால், அவன் இவன் பற்றி பலவிதமான  விமர்சனங்களை  படித்து  இயக்குனர்பாலாவின் படம் அல்ல என்ற முடிவிற்கு வந்து மறுக்கவே, முடியாமல் என் கணவரின் அழைப்பிற்காக சென்றேன் என்பதுதான் உண்மை. பாலாவையும் காணவில்லை கதையையும் காணவில்லை என்று பலர் பறை சாற்றிய அந்தப் படத்தின் முடிவில் வழக்கம் போலவே நான்தான் தொலைந்து போய்விட்டேன். இப்படியெல்லாம் கதாபாத்திரங்களை படைக்க முடியுமா? படத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் கற்பனையே என்று சொல்லத்தான் முடியுமா? வேறு வேறு குணாதிசயங்கள், வேறுபட்ட வாழ்க்கை தரத்தில் இருப்பவர்கள் ஒரே கதைக்களத்தில் வரும்போது இது போன்ற படைப்புகள் உருவாகின்றன. அத்தனை பேருக்காகவும் கதையை நகர்த்துகின்ற படைப்பாளியின் லாகவம், மனோதத்துவத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்படுகிறது. என்னை பொறுத்தவரை கதையின் நாயகன் , அவனுமல்ல இவனுமல்ல எல்லோராலும் கோமாளி என்று முத்திரை குத்தப்பட்ட ஹைனஸ் கதாபாத்திரம்தான் ஹீரோ. கதையின் மொத்த கட்டுப்பாடும் அந்த மனிதரிடம்தான் உள்ளது.

தென் தமிழகத்தின் ஒரு மூலையில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைபட்ட ஒரு ஊரில், வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். சூதாட்டத்திலோ தவறான பழக்கத்தினாலோ நொடித்துப் போகவில்லை, உறவினரால் ஏமாற்றப்பட்டு அத்தனையையும் இழந்தவர். தன் தவறால் இழந்திருந்தால் தண்டனையாக தனிமையாக நாட்களை கடத்தியிருக்கலாம். ஆனால் ஏமாற்றப்பட்டதால், உறவுகளைவிட்டு ஒதுங்கி இருப்பவர். பொதுவாக இப்படித்தான், தன்னிலை தாழ்ந்துவிட்டால் உறவுகளை விட்டு விலகும் மனோபாவம்தான் வரும். ஒன்று சிரிப்பை மறந்து இறுக்கமான மனிதர்களாகிவிடுவார்கள் அல்லது திடீரென்று தொலைத்துவிட்ட வாழ்க்கையை மனதின் ஒரு மூலையில் போட்டுவிட்டு, நகைச்சுவை மனிதர்களாகிவிடுவார்கள். அந்த சிரிப்பு, மனதின் வலிக்கான மருந்து. ஆனால் அவர்களுக்குள் விதைக்கப்பட்ட மேன்மக்கள் தத்துவங்கள் ஒரு போதும் அழிந்து போகாது. அவர்களின் தேவை , சோகத்தை நினைவுபடுத்தாத நொடிகளை கரைத்துக் கொண்டுபோகக் கூடிய லகுவான மனிதர்கள். வழுக்கு நிலத்தில் ஒரு கைத்தடியை போல. அதற்கான வடிகால்கள்தான் அவனும், இவனும் அந்த குண்டுப்பையனும். வன அதிகாரி சீண்டும்போது, அந்த சமயம் பொறுத்துவிட்டு பிறகு புலம்பி பதிலடி கொடுக்கும் மனிதரால் அடிமாடு கடத்தலை பொறுத்துக்கொள்ளவே முடியாமல் உடனேயே சீறுகிறார். முன்னது அவர் சொந்தபிரச்சினை, பின்னது அவருடைய மேன்மக்கள் தத்துவமான அநியாயத்தினை அனுமதிக்காத சிந்தனை.

அப்புறம் அவருடைய முடிவு. சட்டத்திற்கு அப்பாற்பட்டு மாடுகளை இறைச்சிக்காக விற்று கொழுத்த பணம் சம்பாத்தித்தாலும், பணத்தின் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மையை தெரிந்து வைத்திருக்கும் மாட்டுக்காரன் .பணத்தை ஆயுதமாகவும் மற்றவர்களுக்கு அவன் மேலிருக்கும் பயத்தை தடுப்பாகவும் கொண்டு வரையறை மீறியவன். அவனுடைய உடனடி தேவை, மற்றவர்கள் அவன் மேல் வைத்திருந்த பயம். ஜமீன்தாருக்கு தண்டனை. இரண்டிற்காகவும் எடுத்த ஆயுதம்தான் நிர்வாண மரணம். ஆடையிழந்து நிற்கும் மனிதரின் தன்னம்பிக்கை இழந்த கண்ணில் தெரியும் பயம் அவனுக்கு போதை மருந்து. வாயில்லாத ஜீவனை அடித்து பழகியவனுக்கு ஜமீன்தாரும் ஒரு மாட்டைப் போல மாறுகிறார். பழிவாங்கும் படலம் முடிந்த பின் பயத்தை பதிக்கும் நடவடிக்கை. இறந்துபோன உடலை குளிப்பாட்டவே சில உறவுமுறைகளுக்கு மட்டும்தான் உரிமை தரும் மதிப்பான சமுதாயத்தில் உயிரைவிடக்கூட பயப்படமாட்டார்கள். ஆடையே இல்லாமல் அடித்து தொங்கப்படவிடுவது , எதிர்ப்புக் குரல் கொடுப்பவனையும் தயங்க வைக்கும் விசயம். இன்னும்கூட கிராமத்தில் குடும்ப கௌரவரத்தை அழித்தவனையோ குடும்பத்தையே அழித்தவனையோ இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு விடுகின்றன. கதையின் துணை கதாபாத்திரங்களை நாயகராக கொண்டு கதையை தேடினால் எங்கே கிடைக்கும் ? விசாலுக்கு எதற்கு ஒன்றரைக்கண் தோற்றம் என்பதற்குகூட விளக்கம் தர முடியும். பெண்பிள்ளைத்தனமான கலைஞன் கதாபாத்திரத்தின் நளினாமான பெண் பார்வைக்கு ஒத்து வராத கம்பீரமான கண்கள் விசாலுடையது. ஒன்றரைக் கண்களாக இருக்கும்போது நாமும் அத்தனை ஆழமாக ஆராய முடியாது.

இன்னும் எத்தனையோ விளக்கம் சொல்லமுடியும், எழுத்தில் கொண்டிவரமுடியாத எத்தனையோ விசயங்களை படத்தில் கொண்டுவரமுடியும். அதனை முழுவதுமாக பயன்படுத்தியிருக்கும் படம்தான் அவன்-இவன். ஸ்தம்பித்து போய் உலகத்தை மறக்க வைத்த வினாடிகளுக்காக இயக்குனர்.பாலாவிற்கு மீண்டும் நன்றிகள்.

                                                                                            -  சாகம்பரி 
23:27 | Author: அன்னைபூமி
தருமம் அம்மா தருமம்
தருமம் ஐயா தருமம்
பூமியில நாங்க வாழ
போடுங்க கொஞ்சம் தருமம். . .

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில
வாழ்க்கை போற பாதையில
வயித்துக்காக நாங்க போடுறஆட்டம்
கயித்துக்கும் கம்புக்கும் இடையில. . .

கசந்து போகா நாட்களில
காகித பூவா எங்கவாழ்க்கை
விடியலுக்கும் சாயலுக்கும் நடுவில
விதியோ சதியோ ஒன்னும்புரியல. . .

ஆசை தீர விளையாட
அரபிக்கடல் பக்கம் போனதில்லை
அம்பானி ஆவோம்னு
அடிக்கடி சொன்னதிலை. . .

வாயிக்கும் வயித்துக்கும் நடுவில
வஞ்சம் வச்சு இருந்ததில்லை
வாய்க்கா வரப்பு சண்டையின்னு
வாழ்க்கை காலத்த கழிச்சதில்லை. . .

குருவி கூட்ட கலச்சுபுட்டு
கோபுரத்த நாங்க கட்டினதில்லை
குழிய தோண்டி போட்டுபுட்டு
குப்புற விழுந்தவுங்கள ரசிச்சதில்லை. . .

கோடி கோடியா சேத்துவச்சு
கொல்லையில நாங்க அடுக்கியதில்லை
கொரங்கு மனசு புத்தியெல்லாம்
கோட்டத்தாண்டி நாங்க ஆடவிட்டதில்லை. . .

வீதியில நாங்க கிடந்தாலும்
நடைபிணமா நாங்க வாழ்ந்ததில்லை
இந்த நிலைம தொடர்ந்தாலும்
திருடி நாங்க பொழைச்சதில்லை. . .

ஆட்சி மாற்றம்
அறுவடை காலம்
எதைப்பத்தியும் எங்களுக்கு கவலையில்ல. . .

தினம் நாங்க போடுற ஆட்டத்தில
எங்க அரைவயிறுகூட நிறைஞ்சதில்லை
தருமம் ஐயா தருமம்
தருமம் அம்மா தருமம். . .
23:34 | Author: அன்னைபூமி

புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
Baby Star Water
உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.
பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.
உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
நன்றி செய்திகள்.wordpress
12:36 | Author: அன்னைபூமி
நம் அன்றாட வாழ்வில் பயணம் செய்யக் கருதியே பல வாழ்க்கைத் தத்துவங்களை மறந்துவிடுகின்றோம். இன்றைய வாழ்வில் பலரது பிரச்சனை பொருளாதாரம், இங்கு ஆதரவு அற்றவர்களும் இருக்கின்றனர், ஆகாசத்தை தொடும் அளவுக்கு பொருள் படைத்தவர்களும் இருக்கின்றனர். இல்லாதவர் நாளைய வாழ்வை என்னி உழைக்கின்றார். இருப்பவர் இன்னும் கொஞ்சம் பொருள்தேடி பயணிக்கின்றார். பசி போல் செல்வமும் ஒரு தேவை கருதியே, அத்தியாவசியமே. உணவை ஒரு அளவுக்கு மேல் உடல் ஏற்க மறுப்பது போல். மனமும் ஒரு அளவுக்கு மேல் செல்வத்தை மறுத்தால் நன்று. நிலையானவை எவை என்பதை மறந்துவிட்டு இது போல் பல அற்ப விசயங்களுக்கு மனதை விட்டுவிடுகின்றோம். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகம்.

     "நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
     வாள்அது உண்ர்வார்ப் பெறின்"

இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள் நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரை அறுக்கும் வாள் என்பதை அறிவர்.

அடுத்த நொடி வாழ்வோமா என்பதை மனிதர் அறிய முடிவதில்லை, ஆனால் அவர்தம் எண்ணங்களோ கோடி

நிலையாமையை நன்கு உணர்ந்த வள்ளுவர்
     
     "புக்கில் அமைந்தின்று லொல்லோ உடம்பினுள்
      துச்சில் இருந்த உயிர்க்கு"


உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு தங்குவதற்கு நிலையான இடம் கிடைக்கவில்லை போலும் எங்கின்றார்.
15:46 | Author: அன்னைபூமி
மஞ்ச அரைச்சு
மாராப்பு தேச்சு. . .
அரப்பு அரைச்சு
அள்ளி குளிச்சு. . .

பட்டுடுத்தி பொட்டுவச்சு
பாவட தாவணி
பருவமெல்லாம் கடந்து. . .
பந்தக்கால் நட்டு
பச்சரிசி உலக்குதட்டி
பாலும் பழமுமென
பல கனவு கண்ட
காலம் அது. . .

கருப்பனுக்கு பொறந்ததால
கஞ்சிக்கு கூட வழியத்து
காக்கானி நிலம் கூட
சொந்தமில்லாத ஊரவிட்டு
நான் மட்டும் விரட்டப்பட்டேன்
ஒத்தையில வீட்டவிட்டு. . .

காளையாக பொறந்திருந்தா
கலப்பைக்கு வாக்கப்பட்டு
பசுவாக பொறந்திருந்தா
பாலுக்கு மடிதந்து
பண்ண வீட்டோரம்
பக்குவமா வளந்திருப்பேன். . .

கருவகாட்டு குடிசையில
கள்ளியாக பொறந்ததால
கஞ்சிக்காக தள்ளப்பட்டேன்
கண்ணுக்கெட்டாத காட்டோரம். . .

கருப்பாயி மருதாயியென
மந்தையாடு போல
பெட்டைக கூட்டம். . .

கல்லொடைக்க
காணாத தூரம் போக
மண்ணு சொமக்க
மதிக்கெட்டாத தூரம் போக. . .
மத்தவுக பெத்தவுக மத்திரம்
சொந்த மண்ணோட தங்கிநிக்க. . .

எட்டு வருச குத்தகைக்கு
ஏழுறு தாண்டிப்போறோம். . .
போறமக்க அனைவருக்கும்
பத்தும் பதினொன்னுமா
பருவமாறா சின்ன வயசு. . .

போற இடம்
புழுதிக் காடோ
கரட்டு மேடோ. . .

பத்தில போற நாங்க
பதினெட்டில திரும்பி வருவோம். . .
பக்கத்து வீடென்ன
பக்கத்து நாடென்ன
பொறந்தவீட்ட
 பிரிஞ்சு போற எங்களுக்கு
பொழப்பத்தேடி போற இடமெல்லாம்
புகுந்தவீடுதான். . .

குழந்தையா போற நாங்க
குமரியா திரும்பி வருவோம்
குச்சுகட்ட மாமனுமில்ல
கொல்லப்புற குடிசையுமில்ல. . .

சொந்த மண்ணுல பொறந்தநாங்க
பூத்தது எங்கயோ
புகுந்தது எங்கயோ

போய்ட்டு வர்றோம் நாங்க
பொழப்பத்தேடி. . .


20:14 | Author: Ravi

 


     முதல் கட்டுரையில் கூறியது போல பனிப் பிரதேசங்களில் உரைந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன மிருகங்களின் எலும்பு, திசுக்கள் போன்றவற்றில் இருக்கும் டி.என்.ஏகளை பிரித்து அதனை கொண்டு மீண்டும் அத்தகைய உயிரினங்களை உருவாக்க முடியும்  என ஆராய்ச்சியாளர்கள்  நம்புகின்றனர் .....  இது சாத்தியமானதே.........
   
    எனென்றால் 16 வருடங்களுக்கு முன் மண்ணில் புதைந்த ஒரு எலியின் திசுவிலிருந்து பிரித்த டி.என்.ஏவை கொண்டு படியெடுப்பு முறை மூலம் பல எலிகளை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்...... 

   
              தற்பொழுது ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அகிரா ஐரிடானி தலைமையில் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மம்மோத் (mammoth) என ஆங்கிலத்தில் கூறப்படும் கம்பிளி யானைகளை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.....

     இந்த மம்மோத் யானைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவை 13-16 அடி உயரம், 8000-10000 கிலோ எடை, 15அடி உயர தந்தங்கள் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்...... 
       

       2007ம் ஆண்டு சைபீரியா நாட்டில் பனியில் உரைந்துபோன 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குட்டி மம்மோத்தின் சடலம் கண்டுபிடிக்கபட்டது. இது தற்பொழுது ரஷ்யா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபடுகிறது.

   

   ஆராய்ச்சியாளர் அகிரா தலைமையிலான குழு இந்த குட்டி யானையின் திசுக்களிலிருந்து அதன்  டி.என்.ஏகளை பிரித்து அந்த டி.என்.ஏகளை பெண் ஆப்பிரிக்கா யானையின் கருமுட்டையில் செலுத்தி அது சரியாக வளர்ச்சியடைவதன் முலம் மம்மோத் யானைகள்  பூமியில் மீண்டும் உயிருடன் வலம்வரலாம் என்கிறார்கள்.... அவர்களின் கணக்குப்படி அடுத்த 4-6 ஆண்டுகளுக்குள் இது சாத்தியம் என்கிறார்கள்.......

                                                           அடுத்த பதிவில்.........  

09:07 | Author: Ravi


படியெடுப்பு......  அறிவியல் வளார்ச்சியின் அடுத்த பரிணாமம்……….      ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் அம்பர் (படிமங்கள்) மூலம் பாதுகாக்கபட்ட கொசுவின் உரைந்திருக்கும் ரத்ததிலிருந்து பிரித்துஎடுக்கபட்ட  டி.என்.ஏவை கொண்டு டைனசோரை உருவாக்குவதாக கூறுயிருப்பார்கள்.... இதுவே படியெடுப்பு முறைக்கு சிறந்த உதாரணம் .....

                                                       


             படியெடுப்பு (cloning) இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும்.
                 
இந்த முறையை பயன்படுத்தி 1996ம்ஆண்டு உருவாக்கபட்டதுதான் டொலி ஆடு என்பது அனைவரும் அறிந்ததே...... அதை போலவே நாய், ஒட்டகம், மாடு போன்ற பல மிருகங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிவிட்டர்கள்........

இந்த படியெடுப்பு முறைக்கு தேவையானது அந்தந்த  மிருகங்களின் முழுமையான டி.என்.ஏக்களே.....

      பனிப் பிரதேசங்களில் உரைந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து அழிந்து போன மிருகங்களின் எலும்பு, திசுக்கள் போன்றவற்றில் இருக்கும் டி.என்.ஏகளை கொண்டு மீண்டும் அத்தகைய மிருகங்களை உருவாக்கும் வேலையை உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தொடங்கிவிட்டனர்.... 
(பனிப் பிரதேசங்களில் இருக்கும் குளிர் வெப்பநிலையில் டி.என்.ஏ எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாக்கப்படும்)

பழங்காலத்து மிருகங்கள் என்றால்??? எந்த மிருகம் ??? 
      அவை இனிவரும்......