13:33 | Author: பிரணவன்
அந்நாளில் தேடுதல் என்ற ஒன்றே மனித வாழ்வாதரங்களை பெரிதும் பூர்த்தி செய்வதாக அமைந்தது. உறைவிடம் அற்ற மனிதன் உணவை மட்டுமே தேடினான். காடுகளுக்குள் தன் வாழ்க்கையை தொடங்கிய மனிதன் அவனுக்கு உணவு மட்டுமே பிரதானமாக இருந்தது, பின் ஆற்றங்கரைகளில் குடியேரினான், நெருப்பு, சக்கரம் என அவனது தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆரம்பம் முதலே விலங்குகளை வேட்டையாடி உணவிற்காக மட்டுமே பயன்படுத்திவந்த அவன் பின் நாளில் அதனை தன் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். முதலில் காட்டு ஆடு, பின் யானை பிறகு மாடு என பல வலிய மிருகங்களை தன் இயல்பிற்கு கொண்டுவந்தான்.
                                கிரிஸ்த்து பிறப்பதற்கு 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோதுமை மற்றும் பார்லி பயிரிட்டு வளர்த்ததாக சொல்லப்படுகின்றது, கி.மு 8000 முதல் 6000 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் நெல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது, இந்த காலகட்டத்தில் தான் யானையும் வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
                                 இயற்க்கையை மட்டுமே சார்ந்த இந்த வாழ்வில் நீர்பாசனம் என்ற ஒன்று கி.மு 4500 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது.  பின் இதையடுத்த வேதகாலம், கிரிஸ்த்துவ காலம், போன்ற காலங்களிலும் கூட மக்களில் வாழ்வாதரம் என்பது விவசாய உற்பத்திசார்ந்து தான் அமைந்தைருந்தது. பின் நாளில் மனிதன் கடுமையான உழைப்பில் இருந்து விலகி சுகமாக வாழ்வது என்பதற்கு பழகத்தொடங்கிவிட்டான்.
                                விவசாயம் என்பது பிரதானமாக இருந்த காலம் மாறி இயந்திரத்தொழில்,  அணு, வாகனம், சாயத் தொழில், மின்உற்பத்தி, குளிர் பாணங்கள், மது, கேளிக்கை என அத்தியாவசியம் சாந்துஅல்லாத பல தொழில்கள் உருவெடுக்க தொடங்கிவிட்டன.
                              முன் நாளில் அத்தியாவசியம் என கருதப்பட்டது உணவு, உடை, இருப்பிடம், இந் நாளில் அப்படியா ? எல்லாவற்றிலும் செயற்கையை புகுத்திவிட்டோம். செயற்கை குளிர்பாணம், பாலி எஸ்டர் ஆடைகள், உரைகள், பாதுகாப்பு பெட்டகங்கள், முக்கியமாக தொலைத்தொடர்பு, அணு ஆயுதம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
                           மனிதனின் தன் நிறைவு என்ற ஒன்றே இந் நாளில் இல்லாமல் போய்விட்டது. நாணயங்கள் சங்க காலம் முதலே பயண்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்றது, அவைகள் ஆட்சியாளர்களில் அடையாளங்களை சுமந்த படியே இருந்ததே தவிர பெருவாரியாக புழக்கத்தில் இல்லை, அதாவது சாமானியர்களை சென்றடையவில்லை, பண்டமாற்று முறையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது, பண புழக்கம் என்பதே ஆங்கிலேய ஆட்சியிலேயே கொண்டுவந்தாதாக சொல்லப்படுகின்றது, ஆனால் இந்தியாவில் மூன்று இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை அந் நாளில் இருந்து இன்றளவும் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
                       இந் நாளில் உற்பத்தியின் மதிப்பு குறைந்து நாணயத்தின் மதிப்பு மட்டுமே அதிகரிக்க தொடங்கிவிட்டது. நெல் உற்பத்தியில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு 25காசு மட்டுமே லாபம் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத உன்மை. ஆனால் விவசாயம் அல்லாத பிறதொழிலில் ஈடுபடுபவர்கள் அடையும் நிகரலாபம் 3 முதல் 5 மடங்கையும் தாண்டி செல்கின்றது. இங்கே வாங்கி விற்பவர்களுக்குத்தான் அதிக லாபம்.
                       மனிதனின் அத்தியாவசியத்திற்காக வேலை செய்பவன் தன் உடல் உழைப்பையும் கொடுத்து குறைவான லாபத்தையே அடைகின்றான், மாறாக ஒரு தொலைதொடர்பில் வேலை பார்ப்பவனோ, கணினியில், சொகுசு வாகனங்கள், பொருட்கள், மதுபாண உற்பத்தி என இதன் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது. இயற்கை பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீதான கவனம் குறைவுதான்.
                          விவசாயம் மீதான கவனம் குறைந்து, சொகுசு வாழ்க்கை மீதான கவனமே அதிகரித்துவிட்டது. . .

23:47 | Author: பிரணவன்
வறட்சி மாவட்டங்கள் என முற்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்க்கப்பட்ட மரம் தான் கருவேல மரம், பெரும்பாலும் கரி மற்றும் விறகு எரிபொருளுக்காக இந்த மரம் வளர்க்கப்பட்டது,. வறட்சி காலங்களில் மக்களின் வருவாய்க்காக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டது. இன்று தமிழகத்தின் வறட்சிக்கு இதுவே முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஏனெனில் இம் மரத்தின் தன்மை அப்படி இதன் வேர்கள் மண்ணின் ஆழம் வரை சென்று அங்கு இருக்கும் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை, இதன் அருகில் எந்த வித சிறு செடியையும் வளரவிடாது, முக்கியமாக இதை வேரோடு பிடுங்கினால் மட்டுமே அழிக்க முடியும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, இதன் வேர்கள் அதிக ஆழம் வரை செல்லக்கூடியவை.

                                                 ஆனால் கருவேலம் ஒரு மரம், இப்ப விஷயத்திற்கு வருவோம், அடக்கவிலை 40 பைசாவிற்கும் குறைவாக தயாரிக்கப்பட்டு 2ரூபாய் முதல் 4ரூபாய் வரை விற்கப்படும் தண்ணீர் பைகள். மற்றும் 13 ரூபாயை தாண்டிய ஒரு லிட்டர் தண்ணீர் புட்டிகள், இதற்கு காரணம் எல்லாம் பொருளாதாரமயமாக்கப்பட்ட பின், தண்ணீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.
                           
                            இதுவும் விஷயம் அல்ல, இவைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன. அதிக நீர்வளமிக்க இடங்களில் 500 முதல் 1500அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்டு அங்கு இந்த தண்ணீர் புட்டிகள் ( நிரப்பப்படுகின்றன) தயாரிக்கப்படுகின்றன. இந் நிலப்பரப்பைச் சுற்றி இருப்பது விவசாய நிலங்கள். இங்கே உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது, பின் விவசாய நிலங்கலும், வறட்சி நிலமாகின்றன.

                                  கருவேல மரத்தை பற்றி ஏன் நான் முதலில் சொன்னேன்னு தெரியுதா, சொல்றேன், அவைகளாவது தனக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை மற்ற தாவரங்களுக்கு விட்டுவிடுகின்றன. இதன் செயல்முறைகள் இயற்கையின் வசம் இருகின்றன. ஆனால் மனிதால் உருவாக்கப்பட்ட தாண்ணீர் புட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், எந்த நிலையிலும் தன்நிறைவு அடைவதில்லை. முடிவில் அந் நிலம் வறட்சியாகின்றது.

                                   நாம் குடிக்கும் தண்ணீருக்கு நாமே பணம் கொடுக்கின்றோம். நாமே நம் நிலத்தையும் வறண்ட பூமியாக்குகின்றோம். இந்த நாசகார வேலையை பல வெளி நாட்டு நிருவணங்கள் நம் நாட்டிலையே துணிச்சலாக செய்கின்றன. இவர்கள் போதாது என்று நம்மவர்கள் வேறு இந்த தொழிலை செய்கின்றனர். நம் தலையில் நாமே மண்னை வாரி போட்டுக்கொள்கின்றோம்.

                       தற்போதைய வாழ்விற்காக நம் எதிர்காலத்தை இருள் அடித்துக்கொண்டிருக்கின்றோம், இம்மாதிரியான உற்பத்தி ஆலைகள் வளமிக்க கிராமபுறங்களில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறன. மாறாக கடல் பகுதியை சுற்றியுள்ள நில பரப்புகளில் மட்டும் இம்மாதிரியான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால் நல்லது. . . 
14:22 | Author: சாகம்பரி
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும்  ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

* சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் - மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் - கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.


*. இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

* அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்
* ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். "ஓ, சூரிய கடவுளே அரை  நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்" ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு 1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

* வேதங்களின்படி,  ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்."த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே" என்று வரும்.  இதன்படி 
ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்) 
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 
                                                                                                                                 மகாயுகம் 
ஒரு  கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.

     நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.


            
கணிதம்
கி.மு -3000  - நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 - வேதகாலம் - வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200  - பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 - 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
               

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.  
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா: இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.

காஷ்யப ரிஷி - முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

                                                                                அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.
Thanks to Hindusutra.com

12:20 | Author: சாகம்பரி

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு
                                                                                                              -மகாகவி

        நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு தலைவிரித்தாடும் ஊழலும், லஞ்சமும் பாரத மண்ணில் விளைந்தவை அல்ல. அந்நியர் விதைத்துவிட்டுப் போனது. அதனை தூக்கி எறிவது நம்மிடம்தான் உள்ளது. உரத்து பேசுவதாலோ, சினம் கொண்டு எழுதுவதாலோ இவற்றை துரத்த முடியாது. சட்டங்களோ அவற்றிற்கான தண்டனைகளோ இவற்றை வேரறுக்க முடியாது. நல்லதை விதைப்பதும் பேணி வளர்ப்பதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இவற்றை கடைபிடித்தாலே போதும். நம் தேசத்தை எத்தனை கேலி பேசினாலும் அழுத்தமாக மறுக்கமுடியாத ஒரு உண்மை உலக அளவில் பயமுறுத்துகிறது. என்றைக்காவது இந்தியா வல்லமை மிக்க தேசமாக மாறும் என்பதே அது.

       இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்.

       ஒரு இளைஞன் பட்டி மன்றத்தில் பேசுகிறான் "வெறும் பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு கால் காசு பெருமானம் கூட தாராது. வெள்ளையர்கள் நம்மை ஆண்டார்கள். ஆமாம், அதனால்தான் சிறப்புமிக்க இருப்புப்பாதை கிட்டியுள்ளது. நிறைய பாலங்கள் அவர்கள் கட்டியவைதான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருந்தால் இன்னும் முன்னேற்றம் கண்டிருப்போம்.... " இதற்கு கை தட்டல் வேறு கிட்டியது. அது அவனுடைய சிந்தனையில் உதித்தல்ல. பாலம், அணைக்கட்டு, இருப்புப்பாதை போன்றவற்றை ஆங்கிலேயர்கள் கட்டிய காலத்தின் நிலமையை இளையவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க தவறி விட்டோம். 80 சதவிகித வரி விதிப்பில் இந்தியர்களை பரதேசிகளாக்கிவிட்டு அவர்கள் கொண்டு சென்ற வரலாறு மறக்கப்பட்டு விட்டனவே.

      நம்முடைய வரலாற்று நாயகர்கள் ஜாதிய ரீதியில் அடையாளம் காணப்பட்டு உருமாற்றம் அடைந்து விட்டனர். உண்மையில் இது போன்று ஒரு புதிய கோலம் பெறப்போகிறோம் என்று அவர்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய அன்றைய சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்திருந்த தாய் மண்ணின் பெருமையும் அதனை காக்கும் கடமையுணர்வும் மறக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதம், இனம் ஏற்கனவே இங்கு இருந்ததுதான். அதெல்லாம் ஒருபோதும் ஒற்றுமையை குலைத்தது இல்லை. வேறு வழியில் வெற்றி கொள்ள முடியாத அன்னிய சூழ்ச்சிக்காரர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் இதைத்தான் ஆயுதமாக்கினர்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
      அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
      சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? . 
என்ற பாரதியின் வார்த்தைகள் உண்மையின் உறைவிடமாக நின்று ஒன்றுபட்டு நாட்டின் விடுதலை கீதமாக ரீங்கரித்தது. விடுதலையையும் பெற்றோம்.

     இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.                                          
    
    அடுத்த பகுதி ஆதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பழம் பெருமை பேசுவோம் .

பாரத தேசமென்று பெயர் -2
17:25 | Author: சாகம்பரி
 
புதிய வானத்தில் உயிர்ப்புடன்
    தானாவே சிந்தித்து பறக்கவே
தோளில் முளைத்த சிறகுகள்
   மறைந்தே போனதும் புரிந்தது...
கால்கள் தரைத்தட்டி சொன்னது
   கனவு மரத்தின் கனிகள் கைக்கு
எட்டிவிடும் தொலைவு இல்லை!

தலையை கோதி வருடியோ
    பிடறியில் பிடித்து தள்ளியோ
ஏதோவொரு விசை வடிவில்
    வந்தது வழுக்குமரப் பயணம்!
கண்கட்டியே நகர்ந்த நாட்களோ
    தொலைத்தூரத்து தேடல்களில்
சிரிப்பும் அழுகையும் கடந்தன!

சொல்லி வைத்த கதைகளோ,
   ஊட்டி வளர்த்த நெறிகளோ,
கற்றுத் தெளிந்த சாத்திரமோ,
   தனித்து நீண்ட பாதையில்
பாதி வழி காட்டி பரிதவிக்க...
   நினைப்பிற்கும் நிஜத்திற்கும்
கானலின் தூரம் இடையிட்டது !

மனம் மயங்கி மதியிழந்திட,
  மரத்தடியோ வேறு எங்கோ..
இரவிலோ வேறு எப்போதோ...
  சட்டென ஞானம் தோன்றியது,
கனவு மட்டுமே கண்டுகொண்டு
  வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!


10:22 | Author: சாகம்பரி

"வெள்ளமா? வாசலையும் தாண்டி உள்ளே வந்துவிடுமோ?". வெள்ளப்பகுதிகளை பத்திரிக்கைகளில் பார்த்த நினைவு வர, நானும் என் சகோதரியும் கலவரமானோம். வீட்டினுள்ளே ஓடி சென்று அம்மாவிடம் பதறலும் உதறலுமாக சொல்ல, அம்மாவோ ஆபாத்பாந்தவனாக அப்பாவைத் தேடினார். எங்கேயோ சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் (புல்லட்டாக்கும்...) வந்திறங்கிய அவருக்கு கடும் பசிபோலும். "சாப்பாட்டை எடுத்து வை" என்றுவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டார்.

திருவள்ளுவரின் வாசுகிக்கு பிறகு கணவர் சொல்லுக்கு மறுச்சொல் பேசாத புண்ணியவதியாக (சில சமயங்களில் வார்த்தைகளையே பயன்படுத்தாமல், அப்பாவை 'விசையுறு பந்தே''ன துரத்திய வல்லமை மிக்கவர் அவர் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்.) உணவு பரிமாறினார். தெருவில் 'அறிவி'ன் புண்ணியத்தால் குதிரை வண்டிகளும் ஆட்டோக்களுக்கும் பறக்கும் ஓசை எங்கள் வயிற்றை கலக்கியது. உணவு முடிக்கும் தருவாயை எதிர்பார்த்து காத்திருக்க, "வத்த குழம்பு பிரமாதம். இன்னும் கொஞ்சம் போடு" என்ற தந்தையின் புகழாரம் அம்மாவை மகிழ்ச்சியுற வைக்கவில்லை. தயிர் சாதத்தில் தந்தையின் கைகள் விளையாடிய சமயம் அம்மா விசயத்தை ஆரம்பித்தார். (அம்மாடியோ, தாய்க்குலம் வாழ்க!)

"வெள்ளம் வராத இடமென்றால் காஜாமலைக்கு சென்றுவிடலாம். உயரமான பகுதி என்பதால் வெள்ளம் வராது. அங்குதான்  சிவாண்ணா வீடு இருக்கே" என்று பதறாமல் திட்டமிட்டு வயிற்றில் இருந்த புளியை பாலாக மாற்றினார்.  அவர் தொடர்ந்து "ஆனால்..." என (கவனிக்க, இந்த இடத்தில் மறுபடியும் பால் புளியானது) "விசயம் உண்மையா என அரசு செய்தி நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டு வருகிறேன்" என்று விட்டு அருகிலிருந்த தபால் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போதெல்லாம்,  தபால் அலுவலகத்தில் மட்டும்தான் தொலைப்பேசி வசதியிருக்கும். 

தசாவதாரம் படத்தில் வரும், கரைகாணா வெள்ளத்தை எதிர்பார்த்து, பெருமாள் வாய்க்குள் போய்விடுவோமோ என்ற பயத்தில் பத்து வயது பாலகனாக நான் நின்றபோது, தீபாவளிக்கு வாங்கிய புது பட்டுபாவாடையை அணிந்து கொண்டு அசைந்தாடி வந்தாள் என் அக்கா. "எல்லாத்தையும் வெள்ளம் அடிச்சிட்டுப் போனலும் புது டிரஸ்ல போலாம்ல?" என்றாள். என்னுடைய மாம்பழக் கலர் கோ-ஆப்டெக்ஸ் புது கால்சட்டை நினைவிற்கு வந்து - பட்டுபாவாடை தைத்த டெய்லரை சபித்தது.

ஒரு வழியாக அப்பா வந்து "அதெல்லாம் பொய்" எனவும், நாங்கள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டோம். "இருந்தாலும், உங்கள் நிம்மதிக்காக நாம் பெரியப்பா வீட்டிற்கு செல்லலாம். ஆட்டோவிற்கு சொல்லிவிட்டேன்" என்று முடிக்கும் முன் ஆட்டோ வந்துவிட்டது. வெளியில் இருந்த மயான அமைதி பயமுறுத்த, எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக வெளியேறினோம். அப்பா வீட்டை பூட்டிவிட்டு சற்று பொறுத்து வருவதாக கூறி விட்டார். தயக்கமாக பார்த்த அம்மாவிடம் "முன்னே போம்மா, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு வரேன். கண்டிப்பா வந்திடுவேன்" என்று போர்க்கள வீரன் போல கூறினார். எனவே நாங்கள் மட்டும் ஆட்டோவில் ஏறினோம்.

செல்லும் வழியெல்லாம், ஆட்டோக்காரரும் அனைவரையும் காஜாமலைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்தியர் சென்று சமன் செய்ததுபோல மொத்த திருச்சியும் அங்கு குடிபெயர்ந்தால் , அது தாழ்வுப்பகுதியாகிவிடாதா? என்ற  கவலை எங்களுக்கு வந்துவிட்டது. 

வழியில் பாலக்கரை மேம்பாலத்தை கடந்தபோது, ரமேஷ் அண்ணா சைக்கிளில் பாலம் ஏறிக் கொண்டிருந்தான். காஜாமலை பெரியப்பாவின் மகன், எங்களுக்கு அண்ணன். மெதுவாக அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்ததை பார்க்கவும், மிதமிஞ்சிய கலவரத்தில் "ரமேஷண்ணா ஓடி வா. ஓடி வா. வெள்ளம் வருது " என்று நாங்கள் கூப்பாடு போட, மொத்த சக்தியையும் கூட்டி சைக்கிளை மேலும் வேகமாக மிதித்துக் கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டி வந்தான். அவன் பின்னோடேயே வெள்ளம் வந்துவிட்டதாக நினைத்து பயந்து விட்டானாம். சைக்கிளை போட்டு விட்டு ஓடி விடும் உத்தேசத்தை பெரியப்பாவின் இடுப்பு பெல்ட் மறக்க வைத்துவிட்டதாம்.

ஒரு வழியாக பெரியப்பா வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தபோது, "அடக்கடவுளே யாரையும் காணாமே" அம்மாவின் குரல் பதறியது. வீடே காலி செய்யப்பட்டு இருந்தது. இதைவிட உயரமான இடத்திற்கு சென்று விட்டார்களோ என்று சந்தேகம் முளைத்தது. அவர்கள் சென்ற உயரமான இடத்திலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. வீட்டின் மேல் மாடிதான் அது. "எல்லோரும் மேலே வாங்க"

மொட்டை மாடிக்கு விரைந்தோம். ஒரு பெரிய அளவு லாரியில் மொத்த வீட்டின் பொருட்களையும் ஏற்றி விட்டது போல மாடி காட்சியளித்தது. மழைக்காக ஒரு குடையையும் பிடித்தபடி ஒரு மரப்பெட்டியின் மேல் அமர்ந்திருந்தார் எங்கள் பெரியம்மா.( பெரியம்மாவின் திறமையே தனிதான்). வேறு குடையில்லாத காரணத்தால் பெரிய தாம்பாளங்களை தலைக்கு மேல் பிடித்தபடி வெள்ளத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அது வந்ததாக தகவல் ஏதும் வரவில்லை.


அப்பாவை மட்டும் காணவில்லை. அம்மாவின் பாசம் கெட்டவார்த்தைகளாக உருவேற ஆரம்பித்த மாலை வேளையில் டப் டப் என்று புல்லட் ஒலிக்க அப்பா வந்தார். "நான் சொன்னேன்ல ரேடியோல செய்தி சொல்றாங்க கேளு" என்று டிரான்ஸிஸ்டரை காட்டினார். ஏதோ ஒரு கரகரப்பான குரல் - சரோஜ் நாராயணசுவாமி?- பவானி சாகர் உடையவில்லை என்பதை உறுதிபடுத்தியது. பிறகென்ன பெரியம்மா வீட்டில் விருந்தாடிவிட்டு, இரவு வீடு திரும்பினோம்.

மறு நாள் காலையும் மழைவிட்டபாடில்லை அறிவு வந்தான். 'மேட்டூர் அண ஒடைஞ்சிடுத்தாம். டோட்டல் தமிழ்நாடே வாஷ் அவுட் ஆகப் போகுதாம்" என்றான். உண்மையில் வாஷ்-அவுட் ஆனது யார் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதே போல் என்னுடைய மறதி வியாதியும் மனோ வியாதிதான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்குமே.  

                                                                                   -முற்றும்.

10:21 | Author: சாகம்பரி


 ஐம்பது வயதை நெருங்கும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பு உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது.  உடல் நலம் மிக நன்றாகவே உள்ளது. என்னுடைய பெரியப்பாவின் ஐம்பதாவது வயதில் அவரது ஆறாவது விரலாக ஒரு சிறிய பெட்டி முளைத்துவிட்டது. அதில் ஜிகுஜிகுக்கும் உரைகளில் அழகிய வண்ணங்களுடன் மாத்திரைக் குடும்பங்கள் குடியேறியிருந்தன. என் அப்பா எப்படி என்கிறீர்களா? அவருக்கு ஜிப் வைத்த பேக். அப்படிப் பார்க்கும்போது என் வாழ்க்கை மிக சமர்த்தாகவே இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளில் "வயதாகிவிட்டதால் அதை மறந்துவிட்டேன்? எனக்கு செலக்ட்டிவ் அம்னீசியா" என்று திகார்வாசிகள் பேட்டி கொடுப்பதை படித்தபின் ஒரு பயம் தோன்றிவிட்டது. எனக்கும் மறதி வந்துவிடுமோ? மறந்தால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? என்று நினைப்பீர்கள். சரிதான், நான் ஐன்ஸ்டைன் போன்ற ஆராய்ச்சியாளனாக இல்லையென்பதாலும் என் மறதியால் உலகம் சுழல்வது நின்று போகாது என்றாலும் என்றைக்காவது தெருவில் செல்லும்போது எதிரில் வரும் என் மகனைப் பார்த்து "யார் வீட்டுப் பிள்ளையோ? என்னை மாதியே இருக்கிறான்." என்று நினைத்து அவனிடம் "உங்கம்மா யாருடா?" என்று கேட்கக் கூடிய அபாயம் நிகழலாம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவர், என்னை பல கேள்விகள் கேட்டு ஞாபக மறதி இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டபின் ஒரு ஆலோசனை கூறினார். மறதி வராமலிருக்க தனித்திருக்கும் சமயங்களில் சிறிய வயது சம்பவங்கள், வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கச் சொன்னார். "டாக்டர், அதெல்லாம் சரியாகத்தான் உள்ளது. என்னுடைய திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தாலே அன்றைக்கு வைத்த உருளைக் கிழங்கு வறுவலின் வாசம்கூட நினைவு வருகிறது" என்றேன். "சம்பவங்களைத்தான் நினைவுகூற சொன்னேன், தண்டனைகளையல்ல" என்று பெரிதாக சிரித்துக் கொண்டார். பாவம், அங்கேயும் என்னவோ நடந்திருக்கிறது!

இப்போது நடப்பிற்கு வருவோம். தலைப்பிலிருந்தே நான் நினைத்துப் பார்க்கப் போகும் சம்பவம் எது என்று புரிந்திருக்கும். பவானி சாகர் அணை உடைந்த விசயம்தான். எப்போது உடைந்தது என்று யோசிக்கிறீர்கள்தானே. அதுதான் சொல்லுவோம்ல.

அது கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நாற்பதைக் கடந்த திருச்சிவாசிகள் எளிதாக நினைவுகூறமுடியும். ஐப்பசி மாதம் அடைமழை என்ற பழமொழி 'வரலாறு காணாத மழை'யை பெய்வித்து அப்போது வேலை செய்து கொண்டுதான் இருந்தது. சரியாக தீபாவளியுடன் வரும் மழை எங்களை வெடிவெடிக்க விடாமல் தடுத்து என் தந்தையின் பணப்பையினை பாதுகாத்துவிடும் -"மழைல வெடிபோட முடியாது. அடுத்த வருசம் வாங்கலாம்" என்று தப்பித்துவிடுவார்.

எங்களுடைய திட்டும், தந்தைமார்களின் வாழ்த்தும் போட்டிபோட ஒரு வருடம் மழைக்கு வெகு உற்சாகம் கிளம்பி விட்டது. தீபாவளியன்று தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து காவிரியில் வெள்ளத்தை வரவழைத்தது. சாப்பிட முடியாது மீந்து போனதை பிச்சைக்காரனுக்கு தாராளமாக இடுவது போல் காவிரியின் அளப்பரிய காட்டாற்று வெள்ளம் கிளை வாய்க்கால்களுக்கு வாரி வழங்கப்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்தது.

பார்வதி பரமேஸ்வரன் திருமணத்தின்போது தாழ்ந்துபோன பூமிபோல திருச்சிக்கே உறையூர்தான் தாழ்வான பகுதி. வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் காகிதக் கப்பல்விடும் மகிழ்வை தந்தாலும் அதில் நீச்சல் இட்டு செல்லும் ஊர்வன வகைகள் திகில் கிளப்பும்.  ஒரு சமயம் வான்வழியே உணவுப் பொட்டலம் வழங்கியதும் நடந்தேறியது. இப்படி எங்களுடைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் வருடாவருடம் குறையில்லாமல் நடந்தது.

அந்த வருடமும் மழையையும், வெள்ளத்தையும் விருந்திற்கு வந்த மாப்பிள்ளையை சமாளிப்பதுபோல் சமாளிக்க முயற்சித்தோம். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் நிலமை மோசமானது. ஒரு மதிய வேளையில், எங்கள் சினேகிதன் 'அறிவு' எனப்படும் அறிவழகன் கலவரமிக்க பார்வையுடன் ஓடி வந்தான். "டேய், பவானி அணக்கட்டு உடைஞ்சிடுத்தாம்டா. இரண்டு பனமர அளவுக்கு தண்ணி வருமாம்டா. இங்கிருந்து வேற எங்கியாவது போப்போறோம்டா" 
                                                                      தொடரும்.

சஸ்பென்ஸ் வைப்பது, திடுக்கிடும் திருப்பங்கள் இவற்றில் செய்யும் திறமை எனக்கு இல்லை என்று நான் நம்புகின்ற  காரணத்தால் அடுத்த பகுதியை உடனடியாக தொடர இந்த இணைப்பை கிளிக்கவும்.    

பவானி சாகர் உடைந்த கதை part-2
இது அந்த அணை அல்ல. இதைவிட பெரியதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.