21:00 | Author: சாகம்பரி










என்னவோ ஒரு தாளத்தில்
இதயம் ஓயாமல் துடிக்குது.
குழந்தையின் மழலையை...
குழலின் இனிமையை விட
ராகம் மாறாமல் கேட்குது
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!

எண்ணங்கள் கைகூடிடும்
சில சமயம் வேகம் கூடும்.
ஆகாயத்தில் தாவி குதிக்க
அலைஅலையாய் மிதக்க
காற்றேணியில் ஏறி உலவ
தண்டவாளத்து குதிரையின்
தடதடக்கும் தாளம் வரும்.


மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!
சுவாசித்தலே சுமையாக...
எழுந்து நிற்கவே சோம்பி,
கைகளில் முகம் புதைத்து,
கண்கள் மூடி இருள் தேடி..
நத்தை அடியோசை ஒற்றி
மெதுவாக தாளம் மாறும்!

எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் ம
த்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!

அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!


17:41 | Author: சாகம்பரி
இந்த முறையும் நிராகரிப்பு
சென்ற முறை போலவே
வலி மிகுந்த கேள்விகள்
இப்போதும் எழுகின்றன
பசித்து அழும் பிள்ளையை
தேற்றும் தாயாக மனம்
ஆயிரம் பதில் சொல்கிறது
தோல்வியின் தடங்கள்
உள்ளே பதிந்து நின்றிட..
வெற்றிடம் உருவாகிறது
இன்றைய நிமித்தங்களும்
தோல்வி உலாவாகிவிட
சுற்றிலும் வெற்று மனிதர்!

பகல் முழுவதும் தேடலில்
சூன்யத்தை துலாவியபின்
கூடடையும் திரும்பல்கள்!
ஒவ்வொரு காலடிகளும்
முடிவுறா பாதையினை
காரிருளில் பதிப்பித்தன.
இமைமூட கண்கள் ஓய..
உறங்குவதும் சாக்காடோ?
கனவில் கேள்விகளுக்கு
ஒளிக் கீற்றாய் பதில்கள்!
எதுவோ புரிந்து போனது
கரைதட்டும் முடிவுவரை
முயற்சிக்க வேண்டும்....

விடியலில் பறவைகள்
மரத்திலிருந்து பறந்திட,
சோகமாய் பதிந்திருந்த
கடற்கரையின் தடங்களை
நேற்றைய இரவு அழித்திட,
இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது.



18:14 | Author: சாகம்பரி

கட்டங்களும் எண்களுமான
நாட்காட்டியில் ஊருகின்ற
வாழ்வியலின் நகர்வுகள்!
கட்டத்தினில் குறிப்பிட்ட
எண்களும் நிறங்களும்
நாளின் தன்மை கூறாது.

ஒரு ஏணியில் ஏறுவதோ..
பாம்புகடியில் சிக்குவதோ..
நொடிகளின் விளையாட்டு!
ஏணியின் படிகட்டுகளும்
பாம்பின் நீண்ட உடலும்
மாதக்கணக்கில் நீளலாம்!
நொடிகள் யுகங்களாகும்
யுகங்கள் நொடிகளாகும்
பரமபத விளையாட்டில்
பகடையாய் மாறுகிறோம்!

ஏணியிலிருந்து விழவும்,
பாம்பு தலை மிதிக்கவும்,
வித்தை தெரிந்தவனுக்கு
விளையாட்டில் வெற்றி!
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
ஆனால்,
ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவனுக்கோ...
கட்டமே சிறையாகிவிடும்!



17:25 | Author: சாகம்பரி
 
புதிய வானத்தில் உயிர்ப்புடன்
    தானாவே சிந்தித்து பறக்கவே
தோளில் முளைத்த சிறகுகள்
   மறைந்தே போனதும் புரிந்தது...
கால்கள் தரைத்தட்டி சொன்னது
   கனவு மரத்தின் கனிகள் கைக்கு
எட்டிவிடும் தொலைவு இல்லை!

தலையை கோதி வருடியோ
    பிடறியில் பிடித்து தள்ளியோ
ஏதோவொரு விசை வடிவில்
    வந்தது வழுக்குமரப் பயணம்!
கண்கட்டியே நகர்ந்த நாட்களோ
    தொலைத்தூரத்து தேடல்களில்
சிரிப்பும் அழுகையும் கடந்தன!

சொல்லி வைத்த கதைகளோ,
   ஊட்டி வளர்த்த நெறிகளோ,
கற்றுத் தெளிந்த சாத்திரமோ,
   தனித்து நீண்ட பாதையில்
பாதி வழி காட்டி பரிதவிக்க...
   நினைப்பிற்கும் நிஜத்திற்கும்
கானலின் தூரம் இடையிட்டது !

மனம் மயங்கி மதியிழந்திட,
  மரத்தடியோ வேறு எங்கோ..
இரவிலோ வேறு எப்போதோ...
  சட்டென ஞானம் தோன்றியது,
கனவு மட்டுமே கண்டுகொண்டு
  வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!


06:07 | Author: சாகம்பரி
 வெறுமனே மண்ணாகவே இருந்திருக்கலாம்....
விளைநிலமாகி பசி தீர்த்து மகிழ்ந்திருப்பேன்.
அட, களிமண்ணாக இருந்திருந்தாலும்கூட,
கடவுள் சிலையாகி பல வரமளித்திருப்பேன்!

விண்ணில் நீர்த்துளியாக இருந்திருக்கலாம்...
மழையாக  உள்தாகம் தீர்த்து குளிர்ந்திருப்பேன்.
சிறிய வெண் மேகமாக இருந்திருந்தாலும்கூட,
சூரியனை மறைத்து குடையாகி காட்டியிருப்பேன்1

பச்சை மரமாக கிளைத்து இருந்திருக்கலாம்...
நிழலுக்கு புகலிடம் தந்து உயிர் காத்திருப்பேன்.
காற்று ஒடித்த குச்சிகளாக இருந்திருந்தால்கூட,
நெருப்பில் கங்குகளாக இருள் அகற்றியிருப்பேன்!

துகள் தூசாகி சிப்பியில் முத்தாகியிருக்கலாம்...
புல்லாகி பனி சேர்த்து பூப்பூக்க வைத்திருக்கலாம்,
இன்னும் வேறு ஏதாவதாககூட இருந்திருக்கலாம்,
உருப்படியாக அர்த்தம் புரிந்து வாழ்ந்திருப்பேன்!


எங்கேயோ கிடைத்த சிந்தனை வரம் கொண்டு,
வேதியியலும் உயிரியலும் சேர்ந்த கலவை நான்,
இயற்கையை அழித்து காற்றிலும் ஊழிக்காற்றாகி,
பூமியை சுற்றிய உயிர் மூச்சை உறிஞ்சிவிட்டேன்!

கால யந்திரத்தில் அழிவின் திசையில் பயணித்து,
பிரணவம் குடித்து நச்சு நொடிகளை குறிக்கும்
இறுதியை காட்டும் நாழிகை வட்டமாகிவிட்டேன்.
என்னிடமிருந்து பூமியை காத்திடுங்கள் தெய்வங்களே.

20:19 | Author: Ravi
வந்ததே  சொந்த வீடு


அணில் கீச்சிட்டு குதித்தோடும்

ஒரு ம
த்தியான வேளையிலோ...
உரிமையாளரின் கடிந்த குரலில்
உறக்கம் வரா பொழுதினிலோ...
எப்போதோ கைவிட்டுப் போன
காரைக் கட்டிடத்தின் வனப்பும்
கனவிலே வந்தே கலைத்தது...!
கல்லெறிந்த நீர் வளையங்கள்
துடுப்பிழந்த படகாய் ஆட்டிட,
மண்ணை உரிமை காணும்
ஆவல் உள்ளே கிளைத்தது.


கையிருப்பில் கட்டாந்தரையும்,
கடன் பெற்றே செங்கல் சுவரும்,
கழுத்து தங்கத்தை வைத்தாலும்
முழுமை பெறாமல் தவிர்த்தது.
வாரயிறுதி கறிச்சோறு விலக்கி
மதிய வேளையில் தேநீர் பருகி
காலை மாலையில் சிக்கனமாக
கீரையுடன் அரிசிக்கஞ்சி குடித்து,
குல தெய்வத் திருவிழா முடித்து,
ஒரு காசு வேண்டுதல் முடிச்சுடன்
பொங்கல் விழா புத்தாடை மறந்து
மழைக்கான கடவுளை வேண்டி...
பூமியிலிருந்து முளைத்து வந்தது
வெண்ணிறத்து தேவதையாகவே.


கடன் தீர, வைத்தது மீட்டெடுக்க
இன்னும் பல வருடம் விரதமே!
ஆனாலும்...
சன்னலோர மரத்தின்  காற்றில்
தவிட்டுக் குருவிகளும் கீச்சிட

வாயிலோரத்து மல்லிகை மணம்
குட்டித் தம்பியின் மழலைமொழி
அக்காவின் வெள்ளி கொலுசொலி
சின்னச் சின்ன சண்டைகளுடன்
துள்ளிக் குதித்தாடிய வெற்றிகள்
தற்காலிக தோல்வியின் அழுகை
அடுப்படியில் அம்மாவின் மணம்
அலமாரியில் அப்பாவின் உடை
இன்னும் எத்தனையோ....
அடிச்சுவடுகள் அரிச்சுவடிகளாய்
நினைவு பொதிந்த பெட்டகமாக
வாழ்ந்த கதை கூறும் தோழியாக
இனிய சுமையாகும் காதலிபோல்
வந்ததே எங்கள் சொந்த வீடு.!

                                     - சாகம்பரி


10:19 | Author: Ravi













புற்கள் இல்லாத புல்வெளி
வெறும் கட்டாந்தரையாகிட,
மேய்ச்சல் காணாத ஆநிரை
கூட்டத்தில் இருந்து விலகி
பால் வற்றிய மடியுடன்
பயனில்லாத உயிராய்
காகிதக் கழுதையாகும்
நகரத்து பகல்வேளைகள்
சற்றே கண்ணயரும் மரத்தடி
பேசும் மொழி புரியாவிடினும்
வழிப்போக்கனின் துணையில்
கரைந்து உணரும் இன்பம்...
ஏதோ கேட்டு பேசி சிரித்தாலும்
இரவில் இதுவும் இல்லாத
தெருவோரத்து சிந்தனைகளில்
அடிமாடாகப் போகும் அவலம்
இங்கேயும்கூட,
பணி ஓய்வு மரணப் போராட்டம்.
                                    
-                                                                                                                 
-      Sagampari
17:50 | Author: அன்னைபூமி

ஓரவஞ்சனை
அதென்ன .........
பௌர்ணமி வானத்திற்கு
மட்டும் தங்க மேகங்கள் !


புதன் கிழமை பாசஞ்சர்
பயணிகள் இன்றி தனித்து
செல்கிறது ரயில் பூச்சி !


ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம்
வாடகைக்கு  இடம் தேடி
வீட்டுடன் அலைகிறது நத்தை!

மின் தடை
இருட்டென்றால் பயமா
விளக்குடன் மின்மினி பூச்சி!


சுமைதாங்கி
பனித்துளியின் பாரத்தால்
வளைகிறது புல், மலர்கிறது பூ.

விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்


தியாகி

காலடி நிழலில் குளிர்ச்சி
தலையின் சூரியனின் சுட்டெரிப்பு
     - தவிப்பில் ஆலமரம்.

கள்ளாட்டம்
அலையின் கல்லா மண்ணா
ஆட்டத்தில் வென்றது கடல்.

வெட்கம்
காற்றின் கவிதை கேட்டு
தலைகுனிந்ததா பன்னீர் பூ.
                                          - சாகம்பரி,மதுரை


20:10 | Author: அன்னைபூமி

இவ்வளவு பெரிய
ஆத்து தண்ணில
எப்படி குதிக்கறது?
என்ன சிரிப்பு !
குட்டி ஆறு! குட்டி நான்!
இப்ப குளிச்சாதான்
பாதி உடம்பாவது
தண்ணில நனையும்.
மடை மாறிப்போச்சுனா...
உருண்டு புரளணும்
சிவப்பு சகதியில...!
குளிக்கலைனா....
புது சட்டை கிடையாது
எனக்கு பொறந்த நாள்
அதான்......
பொறந்த மாதியே நிக்கேன்
ரொம்ப பயமா இருக்கு
யாராச்சும் வந்தா
குதிச்சிடலாம்

அதோ அண்ணே வந்தாச்சு
இப்ப தண்ணில குதிக்கலாம்
போடலாம் குளியலை

 அண்ணனுக்கும்
சட்ட தருவாங்களா?





21:00 | Author: அன்னைபூமி
சந்தையில் களை கட்டுது
கேட்கப்பட்ட விதத்தில்
தங்கமமும் வெள்ளியும்
தகரம் பித்தளை ஆனது

கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம்
காத்தாடியின் நூலில்.
கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே....

அடிமை வியாபாரத்தில்
வெற்றுக்கை வீச பயந்து
காற்றுக்கு மட்டும் விலைபேசி
பனித் துளியுடன் ஒப்பந்தம்
முடிவில் என்னவோ....
விழித்தெழுந்த காலையில்
மறைந்து போக....
மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.
                                      
                                                        -சாகம்பரி, மதுரை
19:43 | Author: அன்னைபூமி

கடைவீதி தெருமுனை திருப்பத்தில்
கல்லில் பட்டு காலில் இரத்தம்
வலியில் சுளித்த ஏதோ ஒரு முகம்,
மூன்றவது அடுக்கு மாடி வீட்டில்
முனகிக் கொண்டு மூச்சை பிடித்து
சன்னல் வழியே பறக்க எத்தனிக்கும்
உயிர்பறவையின் கடைசி பிரயத்தனங்கள்,
சாலையோரத்து குப்பைதொட்டியில்
எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்
அதனுடன் சண்டையிடும் கதறல்கள்,
சூரியனின் வெப்ப சவுக்கடிகள்,
கண் எரிக்கும் காரத்துகள்கள்,
மூச்சு திருப்ப பயமுறுத்தும்
அவலப்பட்ட காற்றின் அச்சம்....

எதுவும் இல்லாத தனிமையில்
சற்றே உயர மலைக்குன்றின்
கைப்பிடியில் உலகம் ரம்மியமானது
மற்றவற்றை மலையைவிட்டு
இறங்கும்போது பார்த்துக் கொள்வோம்
அதுவரை என்னை மறந்திடுங்கள்!
                                                  
                                                   சாகம்பரி, மதுரை



20:23 | Author: அன்னைபூமி




ஏன் தாமதிக்கிறாய்
மெல்ல முயற்சி செய்
வருவதை ஏற்றுக் கொள்

மலையிலிருந்து நதி
இறங்கியபின்
தரை தொட்ட மகிழ்ச்சியில்
துள்ளி ஒடும்

பாறைகள் பல
தாண்டி பூமி வந்து
வெற்றி ஓசையிடலாம்
தடையில்லா சமதளத்தில்
போராட்டம் தேடாது
 
கரையும் சற்று
அமைதியாய் உறங்கும்
மாமர கூட்டம்
தலையசைக்காமல்
வேடிக்கை பார்க்கும்

குறு நதிகளையும்
ஓடைகளையும்
ஏற்றுக் கொண்டு
வற்றாத ஜீவ நதியாய்
கடலில் கலக்கும்.

நீயும் தேங்கி நிற்காமல்
தடை தாண்டி
சிறுமை தவிர்த்து
எல்லைவரை
ஓடிக் கொண்டிருப்பாயாக.
                                   - சாகம்பரி மதுரை
20:03 | Author: அன்னைபூமி

அகண்ட பெரிய விழிகள்
பட்டாம்பூச்சி இமை
வில்லாய் வளைந்த புருவம்
விரிந்த நீண்ட காதுகள்
மூக்கின் நிறமோ வெள்ளி
சாம்பல் நிற உடல்
காலணி அணிந்தது போல்
வெள்ளை நிற கால்கள்
திமிரில்லை
தோழமையான உயரம்
தொழிலாளியின் நண்பன்
அடிமையான வீட்டு விலங்கு
காணாமல் போன இனம்
வீதியோரத்து இளவரசன்
எத்தனையோ புகழலாம்
ஆனாலும்.....
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது
18:24 | Author: அன்னைபூமி
 விடிந்தும் விடியாத காலை
பார்வையின் குளிர்ச்சியில்
மலை முகடுகள்
இரண்டும் நாலுமாக
அடியெடுத்து விரைந்தால்...
தேயிலை குறுமரங்கள்
வேர்தான் தெரியாது
இங்கு மரமும் தெரியாமல்
இலை ஆடை உடுத்தி
புதுப் பெண்ணாய் நிற்க
காட்டெருமை வடித்த
இயற்கை பால் கட்டிகள்
பாறைகளில் விருந்தாய்
இன்னும்....
தெளிவான ஊற்று நீர்
பாதம் வருடும் மேகம்
சட்டென இருண்டதில்
யானை மிதி, கொசு கடி
ஓநாய் ஊளை .....
தோல்வியடைந்த காதலனின்
மனநிலையைப் போல்
காடே மாறிப் போனது
இருந்தாலும்
தொலைதூரத்து பச்சை
மறக்கவில்லை!
                       -  சாகம்பரி, மதுரை

 


18:37 | Author: அன்னைபூமி

  
 அழுக்கு நிறத்தில்
நாய் குட்டி ஒன்று
வாலை ஆட்டி நிற்க
பிய்த்து போடப்பட்ட
பெட்டிக் கடை
ரொட்டித் துண்டை
எடுப்பதற்குள்
கொட்டி தீர்த்தது மழை!
என் விருப்பமில்லாமல்
தவறவிட்ட எனக்கான
சந்தர்ப்பங்களை போல
அவை கரைந்து ஓட....
 கையாலாகாத கோபத்துடன்
 நாய்குட்டியும் நானும் !  


                          - சாகம்பரி, மதுரை 

                                   

21:29 | Author: அன்னைபூமி

வெயில் காலத்திலும் துள்ளியோடும்
வெள்ளி நீரோடை குளிர் குளியல்
பச்சை பட்டுடுத்திய அழகராய்
மருத நிலத்து மரங்கள் தலையசைக்க
பூமிக்கும் ஆடை தரும் புல்வெளி
கால் நடைகளுக்கும் சிற்றுண்டி சாலை
வேலியோரத்து வீரர்களாய் குறு மரங்கள்
ஆடுமாடுகளுக்கு அனுமதி மறுத்த
உள் நாட்டு தூதரகங்கள் அவை
கரடுமுரடான பாதைகள் கால் வலிக்க
நீல வானம் கண்ணுக்கு குளிர்ச்சி
அப்படியே ஏறியது குறிஞ்சி நிலம்....

எவ்வளவுதான் கற்பனை செய்வது
டிஜிட்டல் திரையில் வண்ணக்கோடுகள்
முப்பரிமாண தோற்றத்தின் மாயாஜாலம்
குளிரூட்டப் பட்ட அறையின் உதவியுடன்
கொஞ்சம் நம்பினாலும் தொலைதூரத்தில்
விமானத்தின் ஓசை கிளம்பி
சங்க காலத்திலிருந்து சட்டென
காதை பிடித்து இழுத்து வந்து
அத்தனை கவலைகளையும் ஆரம்பித்தது.

05:46 | Author: அன்னைபூமி

நேற்று கடைவீதியில் வண்ண விளம்பரம்
" விளம்பரம் செய்ய இங்கே அணுகவும்"
விளம்பரத்திற்கும் விளம்பரம் தேவை
அது வியாபாரம்.......

தோட்ட மூலையில் தொட்டி மறைவில்
 குழந்தையாய் ஒற்றை ரோஜா
வீட்டுக்கூரையில் உச்சியில் பெரிதாக
பூத்திருந்தது மஞ்சள் பூசணிப்பூ
விளம்பரதாரர் விருப்பம்
கிடைத்தென்னவோ பூசணிக்குதான்
உச்சியில் இருந்தால்தான்
ரோஜாவிற்கும் மதிப்பு
சமதளத்திலிருந்து உயர
உயர செல்ல மாற்றம் தேவை

வாழ்க்கை மாற்றங்களின் இயந்திரசாலை
பட்டுப்புழு பூச்சியாக அழவில்லை
பட்டம் உயரப் பறக்க பயப்படவில்லை
வானவில் மறைவதை நினைப்பதில்லை
கல் சிலைக்கு உளிவலி வலித்ததில்லை
கற்றுக்கொள்!
மலை உச்சியை நோக்கியே பயணம்
விழி அடிவாரத்திலேயே நிற்பதேன்?