20:00 | Author: Ravi
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
                                                   
           நாலடியார்.   


1. உங்கள் நண்பனுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து செய்யுங்கள்.
2. உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்காதீர்கள்
3. நட்பு உடையுமளவிற்கு எந்த விசயத்திலும் வாக்குவாதம் புரியாதீர்கள்.
4. தேவையான சமயதில் ஊக்கப்படுத்துங்கள்
5. நட்பில் பிழை பொறுத்தல் மிக அவசியம்.
6. உங்களைப்போலவே உங்கள் நண்பனும் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
7. அவர்கள் நன்றாக வாழ்ந்தாலும் அல்லது நிலை தாழ்ந்து போனாலும் விட்டு விலகாதீர்கள்.
8. இரகசியம் காக்கும் தன்மை உங்களிடம் இருப்பது நட்பை பலப்படுத்தும்.
9. அவர்களுடைய தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள்


  இவை அத்தனையும் நல்லவன் என்று அடையாளம் கண்டு நட்பு கொண்டாடிய ஒருவனுக்காக செய்ய வேண்டும். எப்போதாவது மனிதர்கள் குணம் செயல் மாறுவது உண்டு.அந்த நிலையிலும் நண்பனை விட்டு நீங்காமல் அவனை நல்வழிப்படுத்துவது நட்பின் தன்மையாகும்.

17:41 | Author: சாகம்பரி
இந்த முறையும் நிராகரிப்பு
சென்ற முறை போலவே
வலி மிகுந்த கேள்விகள்
இப்போதும் எழுகின்றன
பசித்து அழும் பிள்ளையை
தேற்றும் தாயாக மனம்
ஆயிரம் பதில் சொல்கிறது
தோல்வியின் தடங்கள்
உள்ளே பதிந்து நின்றிட..
வெற்றிடம் உருவாகிறது
இன்றைய நிமித்தங்களும்
தோல்வி உலாவாகிவிட
சுற்றிலும் வெற்று மனிதர்!

பகல் முழுவதும் தேடலில்
சூன்யத்தை துலாவியபின்
கூடடையும் திரும்பல்கள்!
ஒவ்வொரு காலடிகளும்
முடிவுறா பாதையினை
காரிருளில் பதிப்பித்தன.
இமைமூட கண்கள் ஓய..
உறங்குவதும் சாக்காடோ?
கனவில் கேள்விகளுக்கு
ஒளிக் கீற்றாய் பதில்கள்!
எதுவோ புரிந்து போனது
கரைதட்டும் முடிவுவரை
முயற்சிக்க வேண்டும்....

விடியலில் பறவைகள்
மரத்திலிருந்து பறந்திட,
சோகமாய் பதிந்திருந்த
கடற்கரையின் தடங்களை
நேற்றைய இரவு அழித்திட,
இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது.18:14 | Author: சாகம்பரி

கட்டங்களும் எண்களுமான
நாட்காட்டியில் ஊருகின்ற
வாழ்வியலின் நகர்வுகள்!
கட்டத்தினில் குறிப்பிட்ட
எண்களும் நிறங்களும்
நாளின் தன்மை கூறாது.

ஒரு ஏணியில் ஏறுவதோ..
பாம்புகடியில் சிக்குவதோ..
நொடிகளின் விளையாட்டு!
ஏணியின் படிகட்டுகளும்
பாம்பின் நீண்ட உடலும்
மாதக்கணக்கில் நீளலாம்!
நொடிகள் யுகங்களாகும்
யுகங்கள் நொடிகளாகும்
பரமபத விளையாட்டில்
பகடையாய் மாறுகிறோம்!

ஏணியிலிருந்து விழவும்,
பாம்பு தலை மிதிக்கவும்,
வித்தை தெரிந்தவனுக்கு
விளையாட்டில் வெற்றி!
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
ஆனால்,
ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவனுக்கோ...
கட்டமே சிறையாகிவிடும்!15:58 | Author: Ravi
இன்றைக்கு முதியோர் தினமாக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உண்மையில் து முதியோருக்கான தினம் அல்ல, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தும் தினம். ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கலாம்.
 
நம்மையும் மறக்க வைக்கும் உழைப்பில் சில வேளைகளில் கடமையாக செய்திருப்போம். "சாப்பிட்டீர்களா? பணம் ஏதும் வேண்டுமா? மருத்துவரை பார்த்தாகிவிட்டதா?" போன்றவை. இன்றைக்கு இவற்றில் நாம் பங்கெடுத்துக் கொள்ள முயலலாம். சாப்பிட்டீர்களா? என்று கேட்பதுடன், உடன் அமர்ந்து உணவருந்த வைப்பது, சாதரணமாக உரையாடுவது போன்றவற்றை செய்யலாம்.

தொலைகாட்சி நமக்கு தேவையில்லாத ஆறாவது விரலாக இருக்கும், ஆனால் பெரியவர்களுக்கு ஞாபக சக்தியை தூண்டும் சிறு பயிற்சியாகிவிடுகிறது. அதற்கான வசதிகளை மறுக்காதீர்கள்.

வயதான காரணத்தால் கண் பார்வை மங்குதல், உடல் தெம்பில்லாமல் போவது ஏற்படலாம். அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் சுற்றுபுறத்தை கையாள குடும்பத்தினர் முயற்சியுங்கள்.

வீட்டில் முக்கியமான விசேசங்கள் நடைபெறும்போது, அவர்களின் கருத்திற்கு மரியாதை கொடுங்கள்.

- அவர்கள் நடக்கும்போது தடுக்கிவிடாமல் வழியில் மிதியடி போன்றவற்றை அகற்றிவிடுங்கள். தலைவாசலில் மட்டும் பயன்படுத்தினால் போதும். ஈரம் படிந்திருக்கும் குளியலறை போன்றவற்றின் வாசலில் நாரினால் செய்யப்பட்ட மிதியடிகளை போடுங்கள், ரப்பர் மிதியடிகள் வழுக்கிவிடும். அவர்கள் நடக்கும் வழியில் சுவற்றில் பிடிமானத்திற்காக கைப்பிடிகளை பதிக்கலாம். தடுமாறும்போது பிடித்துக் கொள்ள உதவும்.

- சமையலறையின் அருகில் அவர்களுக்கு அறை ஒதுக்க வேண்டாம். அதீத மணம், நுரையீரலை பாதிக்கும். இருமலை தூண்டும்.

- அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கைக்கு எட்டக் கூடிய இடத்தில் டார்ச் லைட் போன்றவற்றை வையுங்கள். எப்போது வெளிச்சம் குறைவான மின்விளக்கு அவர்கள் அறையில் எரியட்டும்.

- முதலுதவிப் பெட்டியும் தயாராக இருக்கட்டும்.

- வேலையாட்கள் அவர்களின் உதவிக்காக வைத்திருந்தாலும், சில வேலைகளை அவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இது
வேலையாட்களை அவர்களிடம் மரியாதையாக நடக்க வைக்கும்.

நம் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள், தெரிந்தவர்கள் என நம்மை சுற்றியுள்ள முதியோருக்கு, தேவையான சிறு உதவிகளை செய்வது என்ற உறுதி எடுக்கலாம் உ-ம் முதியோர் ஓய்வூதியம் வாங்க உதவுவது. குடும்பத்தினரிடையே அவர்களுக்கு ஏற்படும் பிணக்குகளை தீர்க்க முனைவது.

சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு செய்ய வேண்டிய சிறு உதவிகளை கற்றுத் தரலாம். இதன் மூலம் அவர்களை மதிக்கும் பழக்கம் வளரும்.

உங்களுடைய தயவு ஏதும் தேவைப்படாத நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு சிறு பரிசுப் பொருட்கள் தந்து வாழ்த்து பெறுங்கள்.

வார இறுதியில் முதியோர் இல்லங்களுக்கு சென்று தனிமையில் இருக்கும் ஆதரவற்ற பெரியோரிடம் உரையாடுங்கள். சதுரங்கம் போன்ற உடல் உழைப்பு தேவைப்படாத விளையாட்டுகள் அவர்களுடன் விளையாடலாம். அவர்கள் இவற்றை மிகவும் விரும்புகிறார்கள்.

சில முதியோர் உடலளவிலும் மனதளவிலும் தன்னை உற்சாகமாக வைத்திருப்பார்கள். அவர்களை பார்த்து பொறாமைப்படாமல், கிண்டல் செய்யாமல் மதித்து நடங்கள். சில வயதான தம்பதியினரிடையே மிகுந்த அன்னியோன்யம் இருக்கும், அதனை விமர்சிப்பது நல்லதல்ல. அவர்களுக்கு இனிமையான வாழ்க்கையை தந்த கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள். நமக்கு முன்னுதாரணமாக கொள்ளலாம். எனக்கு தெரிந்து தொன்னூறு வயது பாட்டி ஒருவர் அசைவம் இல்லாமல் உணவை விரும்ப மாட்டார்.   "சாவப்போறவளுக்கு  நாக்குக்கு  ருசியா தரமாட்டேங்குறாங்க"  என்பார். ஆனால். இறந்து போவதை நினைத்து மிகவும் பயப்படுவார். அவர் சொல்லும் காரணத்தை கேளுங்களேன் - இறந்த பின் அவர்கள் வீடு தீட்டு வீடாகிவிடுமாம். "ஒரு வருசத்திற்கு ஒரு விசேசமும் நடக்காது". அதிசயிக்கத்தக்க விதத்தில் அவருடைய குடும்பத்தினர் சிரித்துக் கொண்டே அவரை குறைவில்லாமல் கவனிக்கிறார்கள்.
இன்றைக்கு ஏதாவது உறுதி எடுக்கொள்வோம். இன்றைக்கு நடப்படும் சிறு விதைகள் மரமாக வளர்ந்து, நிழலும் பசுமையும் நிறைந்த ஒரு சோலையாக மாறி நமக்காக காத்திருக்கும்.