18:12 | Author: சாகம்பரி
சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா? 
 
இதற்கு நமக்கு ஏதோ ஒரு இறை சக்தி உதவுவதாக எண்ணுவோம். நல்லது நடந்தால் சரி... வேறு மாதிரி நடந்தால்...

அவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள். புது இரு சக்கர வாகனம் வாங்கியாகிவிட்டது. கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி. அதீத உற்சாகம் கரைபுரண்டு ஓட, நான்கு வழிச்சாலையில் மிகுந்த வேகத்துடன் வண்டியில் சென்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  ஒரு கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் மோதிவிட்டான். வழக்கமாக இது போன்ற விபத்துக்களில் பின் இருக்கையில் அமர்ந்தவன்தான் மாட்டுவான். வண்டியை ஓட்டுபவன் பெரும்பாலும் தப்பிவிடுவான். ஆனால் இந்த விபத்தில் ஓட்டியவன் உயிரை விட்டான். பின் இருக்கையில் அமர்ந்தவன் மருத்துவ உதவியினால் பிழைத்துவிட்டான்.. தப்பித்தவனிடம் விசாரித்தபோது,  அவன் சொன்னது என்னவெனில், மோதப்போகும் கடைசி  நொடியில் கூட விபத்து தவிர்க்கப்படும் என்று நினைக்க, ஓட்டியவனோ  மோதியே விட்டான். மோதும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை "சாரிடா...". மன்னிப்பு கேட்க தோன்றிய மனதில் மாற்றுவழி யோசிக்கத் தோன்றவில்லையே. இதுதான் 'விதி' என்றனர். போதாத 'காலம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஏதோ ஒன்று அவனை அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றதல்லவா... அதுதான் அவனுக்கு வழிகாட்டியது. அதைத்தான் வானுரைபதிவு (ஆகாஷிக் ரெக்கார்டுகள்) என்கிறார்கள். அந்த நேரம், அந்த இடம், அந்த வண்டி, ஓட்டியவன் அனைத்தும் சேர்ந்த ஒரு நிகழ்விற்கான ஒரு காட்சிக்கான அமைப்பு அந்த இடத்தில் அலைகளாக இருந்திருக்கிறது. அந்த சூழ்நிலைக்குள் செல்லவுமே நம்மை பாதிக்க, அதனை செயல்படுத்தும் பாத்திரங்களாக மாறிவிடுகிறோம். இதைத்தான் முதல் பகுதியிலேயே நான்காவது பரிமாணத்தின் திட்டத்தில்தான் உலகின் ஒவ்வொரு அசைவும் நடக்கின்றன என்றேன்.

இன்னும் ஒரு விளக்கம் தருகிறேன். சுவாமி விவேகானந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. விவேகானந்தரின் உரை

மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். விவேகானந்தர் சந்தித்த அந்த மனிதர் ஒரு சாது. அவர் மூன்று தாள்களில் எதையோ எழுதி மடித்து வைத்துக் கொண்டார். விவேகானந்தரும் அவருடைய நண்பர்கள் இருவரிடமும் அவற்றை நீட்டி 'பிரித்துப் படிக்க வேண்டாம். அப்படியே சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். சற்று பொறுத்து "நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் எந்த மொழியில் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்." என்றாராம். தனியே சென்று விவாதி
த்துவிட்டு, விவேகானந்தர் சமஸ்கிருதத்திலும், அவர் நண்பர்கள் அராபியிலும், ஜெர்மானிய மொழியிலும் நினைத்துக் கொண்டனர். இவை அந்த சாதுவிற்கு தெரியாத மொழிகள். உற்சாகமாக சாதுவிடம் திரும்பி வர 'உங்களிடம் நான் ஏற்கனவே தந்த தாள்களை எடுத்துப் பாருங்கள்' என்றார். அந்தத்தாள்களில் இவர்கள் மூவரும் நினைத்த வாக்கியங்கள் அந்தந்த மொழியிலேயே இருந்தன. கூடவே யார் எந்த வாக்கியத்தை நினைப்பார்கள் என்றும் மிக்ச்சரியாகவே எழுதியிருந்தார். இதற்கு அவர் தந்த விளக்கம் வானுரை பதிவுகள்தான். இதைத்தான் இவன் இப்போது செய்வான் என்பதை வானுரை பதிவுகளின் மூலம் அவரால் அறிய முடிந்தது.

சாதாரண நிலையிலிருந்து பார்க்கும்போது திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருக்கிறோம் என்பது புரிகிறதல்லாவா? மேலும் அண்டவெளி சுருங்கும் சமயத்தில் பொருட்கள் வாயு மூலக்கூறுகளாக மாறிய பின்பும் அழியாத அலைவடிவாக இந்த  வானுரை பதிவுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கும். புதிதாக பிறக்கும் அண்டவெளிக்கு வழிகாட்டியாகும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் என்பதும் ஒப்புக் கொள்ள முடிகிறதுதானே. 

எத்தனை ராமரோ? எத்தனை கணையாழியோ? என்று அகத்தியர் அனுமனிடம் சொன்னதன் விளக்கமும் இதுதான். எல்லாமே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஓரளவிற்கு விளக்கிவிட்ட நம்பிக்கையில் , இப்போது ஏற்கனவே பதிவிட்ட இந்த வாக்கியங்களை அழுத்தமாக மீண்டும் பதிகிறேன்.

 "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."

இதுவரை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது ஒரு கேள்வி எழும். இவ்வாறு காலத்தால் கட்டப்பட்ட நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிய முடியுமா?  அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.

இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும் இதுதான் விடை. நம்மாலும் அந்த வானுரை பதிவுகளை வாசிக்க இயலும்.

இது பற்றி இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற 'வாவ்' சிக்னல் பற்றிய ஆராய்ச்சிதான் அது.

ஜெர்ரி என்ற விஞ்ஞானி 1977ல் அவருடைய தொலை நோக்கி பதிந்திருந்த விண்வெளி பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு ஆச்சரியமான அலைவரிசை கிட்டியது. அது நம்முடைய தனுர் மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் இருந்து - 200 ஒளியாண்டுகள் - தொலைவில் இருந்து வந்திருந்தது. அதனை மொழிபெயர்த்தபோது கிட்டிய விடை 'வாவ் (WOW)'. பூமியை பார்த்து வெளியுலகத்தில் இருந்து வர்ணிக்கப்பட்ட இந்த சிக்னலை யார் அனுப்பியிருக்க முடியும்.
இதற்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Wow!_signal
Thanks to wiki resource


நம்முடைய விஞ்ஞானிகளுக்கு சிக்கல் என்னவென்றால் அதற்கு பதில் அனுப்பினால், அது அனுப்பப்பட்ட இடத்தை அடைய  200 வருடங்கள் ஆகும். அதற்குள் அனுப்பியவர் உயிருடன் இருப்பா
ர் என்று சொல்ல முடியாது. அது பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொலைவிலிருந்து வந்திருந்தால் அந்த அலை வீச்சு அருகிலிருக்கும் அலைவாங்கியிலும் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த சிக்னல் மீண்டும் அடுத்த ஒலிவாங்கியில் பதியப்படவேயில்லை. அப்படியென்றால் யாரோ அருகே வந்து சொல்லிவிட்டு சென்றதுபோல இருக்கிறது. காலம் சம்பந்தப்பட்ட கணக்கீடுகளால் இதனை விளக்கமுடியவில்லை. இந்த விசயத்தில் நம்முடைய நான்காம் பரிமாணம் பயன்படாமல் போய்விட்டது. இதனை விளக்கும் பொருட்டு இயற்பியல் புது வார்த்தையை கொண்டு வந்தது. Worm hole(புழுத்துளை என்றால் நல்ல வார்த்தையாகப்படவில்லை). காலத்திற்கு கட்டுப்படாத ஒரு குறுக்கு வழிப்பயணம் இதில் சாத்தியம். 
இதற்கான சுட்டி:http://en.wikipedia.org/wiki/Wormhole


சரி சரி, எளிதாகவே சொல்லகிறேன். வாயு வேகம் மனோ வேகம் என்று படித்திருப்பீர்களே. இதில் மனோவேகத்தைதான் இயற்பியல் தத்தெடுக்கிறது. ஐன்ஸ்டைனின் சில கோட்பாடுகளை கொண்டு இதனை விளக்கவும் முற்படுகின்றனர். இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சரி, நம் பக்கம் ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

பழந்தமிழரின் வாழ்க்கையில் நான்காவது பரிமாணம் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் ஐந்தாவது பரிமாணம் சம்பந்தப்பட்ட கலைகளில் நம் முன்னோர்கள்  மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பழந்தமிழர் என்றால் 50,000 வருடங்களுக்கு முந்தைய குமரி மாந்தன் எனப்படும் மூத்த தமிழ்குடியின் வரலாறு பற்றி அடுத்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On November 15, 2011 at 7:22 PM , Ramani said...

அருமையாக ஆதாரத்துடன் புரியும்படி
புரியாத விஷய்ங்களை சொல்லிப் போகும் அழகு
மலைப்பூட்டுகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

 
On November 15, 2011 at 8:17 PM , shanmugavel said...

எடுத்துக்காட்டுடன் சிறப்பாக இருக்கிறது.நல்ல உழைப்பும்கூட.சிரத்தை எடுத்து பகிர்வதற்கு நன்றி.

 
On November 16, 2011 at 12:12 AM , பிரணவன் said...

நம் பேச்சு மொழி உருவாக்கத்திற்கு முன் உருவானவைகளில் காற்று சக்தியும் ஒன்றுதானே அம்மா, மேலும், காற்று அலைகளை குரல் நாளங்களின் வழியே பக்குவப் படுத்தியே பின் நாம் பேச்சு மொழி உருவாக்கியிருக்கின்றோம். அப்படியிருக்க, ஒரு ஆங்கிலம் தெறிந்த மனிதனாக யாரும் வளி மண்டலத்தில் இருந்து இதை சொல்லிச் சென்றிருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை இது இயல்பாக தோன்றிய அலைவரிசையாக இருந்திருக்கலாம் அல்லவா. சற்று விளக்கம் கொடுங்கள் அம்மா.

 
On November 16, 2011 at 12:24 AM , பிரணவன் said...

மனோ சக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி அம்மா, இது எனக்கு விண்வெளி மற்றும் அதையும் தாண்டிய நிலை, மனித பிறப்பின் காரணம், பிறப்பு இறப்பு அற்ற நிலை, போன்ற பல என் உள் மன கேள்விகளுக்கு விடையளிக்க கூடும். . .

 
On November 16, 2011 at 12:36 AM , பிரணவன் said...

அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். எனில் நாம் இருக்கும் தற்சமய நிலை கருதி யாரும் வருத்தபடக் கூடாது என்ற கருத்து சரியாகுமா? அம்மா.
ஆக்கமும் அழிவும் என்ற சுழற்சிக்கு எப்பொழுது முடிவு வரும்.

 
On November 16, 2011 at 10:12 AM , கணேஷ் said...

அழகாக எளிமையாக விளக்குகிறீர்கள். இந்த வானுரைப் பதிவை அறிந்து தேர்ந்தவர்களைத்தான் நாம் சித்தர்கள் என்று கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது. சரிதானா சாகம்பரி? சொல்லுங்கள்...

 
On November 16, 2011 at 11:38 AM , சாகம்பரி said...

மிக்க நன்றி ரமணி சார்.

 
On November 16, 2011 at 11:38 AM , சாகம்பரி said...

உண்மைதான். தூண்டுதல்கள் ரீடர்ஸ் டைஜெஸ்டில் அல்லது டிஸ்கவரி அல்லது பிபிசியில் தொடங்கின. பிறகு புத்தகங்கள் மற்றும் இணையத்தில் தேடி உறுதிபடுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. நேரம் அதிகம் செலவானாலும் மதிப்புமிக்க விசயங்கள் கிட்டின. அவற்றை பகிர்ந்து கொள்வதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

 
On November 16, 2011 at 12:10 PM , சாகம்பரி said...

வானுரை பதிவுகளில் மொழி பிரச்சினை கிடையாது பிரணவன். ஒரு பூ மலர்கிறது. அதனால் நுகரும் புலன் தூண்டப்பெற்று நம்முடைய மொழியில் நறுமணம் வீசுகிறது என்று சொல்வோம், ஒவ்வொரு மொழியிலும் அதற்கேற்ப வாக்கியங்கள் வெளிப்படும். ஆனால் சில பதிவுகள் காட்சிப்பதிவுகளாக இருக்கும். இவற்றில் எழுத்துக்களின் வடிவம் இருக்கலாமே. விவேகானந்தர் சொன்ன சாதுவிற்கு மொழி தெரியாது . அவரால் அதை வாசிக்கவும் முடியாது. அவரை பொறுத்தவரை அது ஒரு ஓவியம்தான். சிலர் ஒலியலைகளாக இருக்கும் வானுரைபதிவுகளை அப்படியே உச்சரிக்கவும் செய்வார்கள். அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. மொழி தெரிந்தவர்கள்தான் 'இவன் தெலுங்கில் பேசுகிறான்' என்பார்கள்.

உருவாக்குதல் என்ற ஒரு வார்த்தையைவிட கண்டுபிடித்தல் என்பதுதான் சரி. அப்படியென்றால் மொழிகளும் ஏற்கனவே இருந்தவைதான். ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவது என்னவெனில் ஒவ்வொரு மொழியும் ஏதோ ஒரு அடிப்படையில் மற்றதுடன் ஒப்பியைந்து உள்ளன என்பதே.

 
On November 16, 2011 at 12:16 PM , சாகம்பரி said...

ஒரு மின்புத்தகத்தை மெயில் செய்கிறேன் பிரணவன். மனோசக்தியை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சிகள் இருக்கின்றன. அத்துடன் என்னுடைய கருத்துக்களையும் தருகிறேன். பொதுவாக மொனோ சக்தியானது தேடி வளர்க்க முயற்சிப்பவர்களைவிட மற்றவர்களை நேசிப்பவர்களிடம் அருமையான வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.

 
On November 16, 2011 at 12:16 PM , சாகம்பரி said...

இந்த சுழற்சி எப்போது நிற்கும்... விடை தெரியாத கேள்வி. அதேபோல ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைகளில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்பதும் கவனிக்க வேண்டிய விசயங்கள்தானே.

 
On November 16, 2011 at 12:20 PM , சாகம்பரி said...

ஆமாம் சார். முக்காலமும் உணர்ந்தவர்கள் சித்தர்கள் என்பது உண்மைதான். இப்போதும் இருக்கின்றனர். பெரிய அளவில் வெளியே தெரிய மாட்டார்கள். பிச்சைக்காரர் போல வந்த ஒருவர் தாமிரத்தகடை மூலிகைகளை பயன்படுத்து தங்கமாக மாற்றிக் காட்டினார். நிறைய விசயங்களை தெரிவித்தார். அப்போது நான் நம்பவில்லை என்பதுதான் உண்மை.

 
On November 16, 2011 at 12:24 PM , சாகம்பரி said...

தங்களின் கருத்துரைகள் என்னுடைய எழுத்துக்களை கவனப்படுத்துகின்றன மிக்க நன்றி கணேஷ் சார்

 
On November 17, 2011 at 10:09 AM , புலவர் சா இராமாநுசம் said...

அரிய அருமையான ஒரு செய்தியை எடுத்துக்காட்டோடு
வி்ளக்கி செல்லும் நடை
பாராட்டுக்கு உரியது
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

 
On December 26, 2011 at 4:38 PM , Shakthiprabha said...

//அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.

//

:)...