00:41 | Author: அன்னைபூமி

இதமான அதிகாலைப்பொழுது, அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து செல்கையில் ஈரத்தினுடன் இணைந்த அந்த வாசனை, எந்த வெளியில் நடந்தாலும் அந்த வழிப்பாதையும் அதன் வாசமும் நான் எங்கும் சூவாசித்தறியேன். நம் பார்வைக்கு அப்பார்பட்டு பல விசயங்களில் நாம் நம்மை மறந்து அனுபவித்த விசயங்க்களில் வாசனை நுகர்தலும் நம்மை அறியா நம் மனதுக்குள் நுலைந்த ஒரு அழகிய விசயமாகும். உண்ணும் உணவுகளில் இருந்து உடுத்தும் உடைவரை இந்த வாசமும் அதன் தனித்தன்மையும் மாறாதது. 
          சுவாசம் நம் உயிர் வாழ்வதற்கான விசயம் எனில், வாசம் நம் உணர்வுகளுக்கான விசயங்களில் ஒன்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு முறை நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் அந்த இடங்களின் காட்சிகள் மட்டும் மனதில் பதிவதில்லை அந்த மண்ணின் வாசமும் நம் நினைவுகளில் பதியப்படுத்தப்பட்டு விடுகின்றன. 
           நம் பள்ளிப் பருவ நாட்களாகட்டும், கல்லூரி நாட்க்களாகட்டும், பணி செய்த இடமாகட்டும், அதன் வாசனைகளும் நினைவுகளும் நம் நினைவைவிட்டு என்றும் நீங்கியதில்லை. மாலைப்பொழுதில் சாலையோர தேனீர் கடையில் அருந்திய தேனீரின் வாசம், நாம் எந்த பகுதியில் தேனீர் அருந்தினாலும் நம் நினைவுக்கு சட்டென்று வந்துவிடும்.
         நமக்கு பிடித்த விசயங்களையும் அதன் அத்தனை பரிணாமங்களையும் நாம் அதிகம் உள்வாங்கிவிடுகின்றோம். அம்மாவின் கைப்பக்குவ சாதம், ரயில் நிலைய சிற்றுண்டிச் சாலை, கோயில் திருணீறு, திருவிழாக்கால மிட்டாய் கடைகள், தேர்வு நேர வினாத்தாள், வயல் வெளிகளின் பசுமை வாசம் என பல விசயங்கள் நம்மையும் அறியாமல் நம் மனதில் பதிந்தவையாகும்.
         பழகிய, நாம் பழக்கப்படுத்திவிட்ட பல விசயங்கள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன. எல்லாவற்றிர்க்கும் பதிலாக நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மில் உரைந்துவிட்ட அந்த வாசம் என்றும் நம் நினைவில் இருந்து நீங்குவதில்லை. தனிமையில் கண்ணில் நிறைந்த காட்சிகளுக்கு உயிர் கொடுபதும் கூட இந்த வாசனை நினைவுகள் தான்.
          வாசனை ஒன்றேவும் பல நினைவுகளையும் நம் ஞாபகத்திற்கு கொண்டுவந்து விடுகின்றன. வாசம் மாறாது பலவிசங்களையும் நம் நினைவில் வைத்திருக்கும் என்னற்ற நினைவுகள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன, இருந்த போதும் அதன் வாசம் மட்டும் என்றும் மாறுபடுவதே இல்லை. . . 

12:05 | Author: அன்னைபூமி
காதல் வரைந்த கோலங்களில்
கடைசியாய் விடப்பட்ட
கரும்புள்ளி நான். . .

காவியத்திற்கும் ஓவியத்திற்கும்
இடையில் விடப்பட்ட வரைபட
கிறுக்கள் நான். . .

அழகான ரோஜா தோட்டத்தில்
முட்களால் வடிவமைக்கப்பட்ட
இதழ்களைக் கொண்டவன். . .

                                               காதலென சேர்ந்த கயவர்களால்
                                               கைவிடப்பட்ட மிச்சங்களில்
                                               நானும் ஒரு எச்சம். . .

                                              காதலுடன் முடிந்திருக்க கூடதா
                                              உங்கள் வாழ்க்கை. . .
                                              உங்கள் கணவுகளையும் எரித்துவிட்டு
                                              என்னையும் இந்த நரகத்திற்குள்
                                              தள்ளியதேன். . .

                                             உயிர்களால் படைக்கப்பட்ட
                                             ஜீவன் என்றில்லாமல்
                                             உடல்களால் படைக்கப்பட்ட
                                             பிண்டமாகி விட்டேனே. . .
                                             புரிதலின்றி சேர்ந்துபிரிந்த உங்களால்
                                             விதையிலேயே கருகிவிட்டேனே. . .

                                             இளந்தென்றல் போல் இனிமையாய்
                                             எல்லோர் மனதிலும்
                                             வந்து போகும் காதல்
                                             எனக்கு மட்டும் நரகமாகிவிட்டது
                                             நீங்கள் தந்த காதல்பரிசால். . .

                                             வாழ்க்கையை ஆரம்பத்திலேயே
                                             முடித்துக் கொண்டீர்கள்
                                              என் வாழ்க்கையையும்
                                             ஆரம்பத்திலேயே முடித்து
                                              வைத்துவிட்டீர்கள். . .

                                              அய்யனும் அம்மையும் இருந்தும்
                                              அனாதையாக்கப்பட்டேனே. . .
                                              இதன் பிறகு சேரும்
                                              இன்னொருவரிடமிருந்து மேனும்
                                              பிரிந்து விடாதீர்கள். . .

                                              என்னைப்போல் ஓர் அனாதையை
                                              இனி இந்த உலகில்
                                              பார்க்க விருப்பமில்லை எனக்கு. . .


22:12 | Author: Ravi

  
மதுரையில் இருந்து தொடங்குகின்றது எங்கள் பயணம். ஒரு நாள் பயணம் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் பயணம் தொடங்குகின்றது. இரவு நேர பயணம் என்பதால் மதுரை – தேனி இடையேயான 75கிலோ மீட்டர் பயண தூரத்தை இரண்டே மணி நேரத்தில் கடக்கின்றது பேருந்து. தேனியை வந்தடைந்த நாங்கள் மலைப்பேருந்து வருவதற்குள் நாளைய பயணத்திற்கு தேவையான பொருட்களை பேருந்து நிலையத்தில் வாங்கிக்கொண்டோம். தேனியில் இருந்து 73கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேகமலை. 

மேகமலை பகுதியை வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு 2009 ஜூனில் அறிவித்தது.குமுளி ரோடு - சின்னமனூர்; கண்டமனூர் - எழுமலை வரை 26 ஆயிரத்து 910 எக்டேர் வனப்பகுதி சரணாலயமாக உள்ளது. தற்போது, 16.36 லட்ச ரூபாயை வனத்துறை ஒதுக்கியுள்ளது


     தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாக வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை நீர் வீழ்ச்சி, மேகமலை, வெள்ளிமலை மற்றும் போடி மெட்டு ஆகிய இடங்கள் உள்ளன.

மேகமலை செல்லும் மலைப்பேருந்து சரியாக அதிகாலை 3.30 மணிக்கு தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக பேருந்து சின்னமனூரை வந்தடைந்தது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த திருக்கோவில் ஆகும். இதன் அருகே முல்லைப்பெரியாறு ஆறு அழகாக இந்தக்கோவிலை கடந்து செல்கின்றது. தேனி கம்பம் நெடுஞ்சாலையில், சின்னமனூரில் இருந்து இடதுகைப்பக்கமாக செல்கின்றது மேகமலை செல்லும் பாதை.


  மேகமலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மேகமலை, கேரள பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. மலைப்பாதை தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு வனச்சரகம் சார்பில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இதைக்கடந்து சென்றால் முருகன் கோவில் வழியே மலைப்பயணம் ஆரம்பம் ஆகின்றது. மலையேற்றம் 20 கிலோ மீட்டர் தான் என்றாலும் மீதம்முள்ள 32 கிலோ மீட்டர் மலைக்குன்றுகளுக்கு இடையேயும் தேயிலைத்தோட்ங்களுக்கு இடையேயும் கழிகின்றது.

மலைப்பாதையில் முதல் நிறுத்தம் கர்டானா எஸ்டேட், தேயிலைத் தோட்டங்களும், ஏலக்காய் தோட்டங்களும் இங்கிருந்தே ஆரம்பம் ஆகின்றது. இந்த நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக சிறிய தேவாலையம் ஒன்று உள்ளது. இதற்கடுத்து உள்ள ஊர்தான் மேகமலை. இதமான குளிர் காற்று, பனிமூட்டம் வழியாக பேருந்து பயணிக்கின்றது. இதன் பின் ஹைவேவிஸ  என்ற நிறுத்தம் உள்ளது, இங்கே தான் மஞ்சள் ஆறு அணை உள்ளது. இங்கும், மகாராஜா மெட்டு மற்றும் இரவங்களாறு என்ற இடங்களில் மட்டுமே சிற்றுண்டி சாலைகள் உள்ளன.

சரியாக அதிகாலை 7 மணியளவில் மகாராஜா மெட்டு என்ற எல்லைப்பகுதியை வந்தடைந்தது பேருந்து, அடர்ந்த பனி மூட்டமும், இருக்கமான குளிர் காற்றும், எங்களை இனிதே வரவேற்றன. அங்குள்ள சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்தினோம், சற்று வித்தியாசமாகவே இருந்தது. மதிய உணவு வேண்டுமெனில் முன்னதாகவே இங்கு சொல்லிவைத்துவிட வேண்டும். இங்குள்ள மலைப் பகுதியின் உச்சியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கை நாம் பார்க்கலாம். அதிகாலைப் பொழுதில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானைக்கூட்டங்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம், மகாராஜ மெட்டு மலை உச்சியில் சிறிய காளி கோவில் ஒன்று உள்ளது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. சாலையோரம் ஈரப்பதம் மிகுந்த புல்வெளிகள் அதிகம், சற்றே தார் சாலையை விட்டு காட்டுப்பகுதிக்குள் கால் வைத்தால் பற்றிக்கொள்கிறது அட்டை, காலி கடிப்பதும் தெரியாது நம் இரத்தத்தை உறிஞ்சுவதும் தெரியாது, இதற்காக நாம் அதிகம் பயம் கொள்ள தேவையில்லை.இரவு நேரங்களில் இங்கே தங்குவது சற்றே கடினம், தங்கும் வசதியுள்ள அறைகள் மிகக்குறைவு, குளிரும் மிக அதிகம்.

வன விலங்குகளான சிறுத்தை, சிங்கவால் குரங்கு, மலை அணில், கேளை ஆடு , புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா,  புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி, மஞ்சள் ஆறு அணை, வென்னியாறு அணை, இரவங்களாறு அணை, தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை எழில்களை ரசித்தபின் 4.30மணிக்கு இரவங்களாறு பேருந்தின் மூலம் தேனிக்கு மீண்டும் பயணம் தொடர்கின்றது. . .....