10:22 | Author: சாகம்பரி

"வெள்ளமா? வாசலையும் தாண்டி உள்ளே வந்துவிடுமோ?". வெள்ளப்பகுதிகளை பத்திரிக்கைகளில் பார்த்த நினைவு வர, நானும் என் சகோதரியும் கலவரமானோம். வீட்டினுள்ளே ஓடி சென்று அம்மாவிடம் பதறலும் உதறலுமாக சொல்ல, அம்மாவோ ஆபாத்பாந்தவனாக அப்பாவைத் தேடினார். எங்கேயோ சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் (புல்லட்டாக்கும்...) வந்திறங்கிய அவருக்கு கடும் பசிபோலும். "சாப்பாட்டை எடுத்து வை" என்றுவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டார்.

திருவள்ளுவரின் வாசுகிக்கு பிறகு கணவர் சொல்லுக்கு மறுச்சொல் பேசாத புண்ணியவதியாக (சில சமயங்களில் வார்த்தைகளையே பயன்படுத்தாமல், அப்பாவை 'விசையுறு பந்தே''ன துரத்திய வல்லமை மிக்கவர் அவர் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்.) உணவு பரிமாறினார். தெருவில் 'அறிவி'ன் புண்ணியத்தால் குதிரை வண்டிகளும் ஆட்டோக்களுக்கும் பறக்கும் ஓசை எங்கள் வயிற்றை கலக்கியது. உணவு முடிக்கும் தருவாயை எதிர்பார்த்து காத்திருக்க, "வத்த குழம்பு பிரமாதம். இன்னும் கொஞ்சம் போடு" என்ற தந்தையின் புகழாரம் அம்மாவை மகிழ்ச்சியுற வைக்கவில்லை. தயிர் சாதத்தில் தந்தையின் கைகள் விளையாடிய சமயம் அம்மா விசயத்தை ஆரம்பித்தார். (அம்மாடியோ, தாய்க்குலம் வாழ்க!)

"வெள்ளம் வராத இடமென்றால் காஜாமலைக்கு சென்றுவிடலாம். உயரமான பகுதி என்பதால் வெள்ளம் வராது. அங்குதான்  சிவாண்ணா வீடு இருக்கே" என்று பதறாமல் திட்டமிட்டு வயிற்றில் இருந்த புளியை பாலாக மாற்றினார்.  அவர் தொடர்ந்து "ஆனால்..." என (கவனிக்க, இந்த இடத்தில் மறுபடியும் பால் புளியானது) "விசயம் உண்மையா என அரசு செய்தி நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டு வருகிறேன்" என்று விட்டு அருகிலிருந்த தபால் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போதெல்லாம்,  தபால் அலுவலகத்தில் மட்டும்தான் தொலைப்பேசி வசதியிருக்கும். 

தசாவதாரம் படத்தில் வரும், கரைகாணா வெள்ளத்தை எதிர்பார்த்து, பெருமாள் வாய்க்குள் போய்விடுவோமோ என்ற பயத்தில் பத்து வயது பாலகனாக நான் நின்றபோது, தீபாவளிக்கு வாங்கிய புது பட்டுபாவாடையை அணிந்து கொண்டு அசைந்தாடி வந்தாள் என் அக்கா. "எல்லாத்தையும் வெள்ளம் அடிச்சிட்டுப் போனலும் புது டிரஸ்ல போலாம்ல?" என்றாள். என்னுடைய மாம்பழக் கலர் கோ-ஆப்டெக்ஸ் புது கால்சட்டை நினைவிற்கு வந்து - பட்டுபாவாடை தைத்த டெய்லரை சபித்தது.

ஒரு வழியாக அப்பா வந்து "அதெல்லாம் பொய்" எனவும், நாங்கள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டோம். "இருந்தாலும், உங்கள் நிம்மதிக்காக நாம் பெரியப்பா வீட்டிற்கு செல்லலாம். ஆட்டோவிற்கு சொல்லிவிட்டேன்" என்று முடிக்கும் முன் ஆட்டோ வந்துவிட்டது. வெளியில் இருந்த மயான அமைதி பயமுறுத்த, எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக வெளியேறினோம். அப்பா வீட்டை பூட்டிவிட்டு சற்று பொறுத்து வருவதாக கூறி விட்டார். தயக்கமாக பார்த்த அம்மாவிடம் "முன்னே போம்மா, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு வரேன். கண்டிப்பா வந்திடுவேன்" என்று போர்க்கள வீரன் போல கூறினார். எனவே நாங்கள் மட்டும் ஆட்டோவில் ஏறினோம்.

செல்லும் வழியெல்லாம், ஆட்டோக்காரரும் அனைவரையும் காஜாமலைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்தியர் சென்று சமன் செய்ததுபோல மொத்த திருச்சியும் அங்கு குடிபெயர்ந்தால் , அது தாழ்வுப்பகுதியாகிவிடாதா? என்ற  கவலை எங்களுக்கு வந்துவிட்டது. 

வழியில் பாலக்கரை மேம்பாலத்தை கடந்தபோது, ரமேஷ் அண்ணா சைக்கிளில் பாலம் ஏறிக் கொண்டிருந்தான். காஜாமலை பெரியப்பாவின் மகன், எங்களுக்கு அண்ணன். மெதுவாக அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்ததை பார்க்கவும், மிதமிஞ்சிய கலவரத்தில் "ரமேஷண்ணா ஓடி வா. ஓடி வா. வெள்ளம் வருது " என்று நாங்கள் கூப்பாடு போட, மொத்த சக்தியையும் கூட்டி சைக்கிளை மேலும் வேகமாக மிதித்துக் கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டி வந்தான். அவன் பின்னோடேயே வெள்ளம் வந்துவிட்டதாக நினைத்து பயந்து விட்டானாம். சைக்கிளை போட்டு விட்டு ஓடி விடும் உத்தேசத்தை பெரியப்பாவின் இடுப்பு பெல்ட் மறக்க வைத்துவிட்டதாம்.

ஒரு வழியாக பெரியப்பா வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தபோது, "அடக்கடவுளே யாரையும் காணாமே" அம்மாவின் குரல் பதறியது. வீடே காலி செய்யப்பட்டு இருந்தது. இதைவிட உயரமான இடத்திற்கு சென்று விட்டார்களோ என்று சந்தேகம் முளைத்தது. அவர்கள் சென்ற உயரமான இடத்திலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. வீட்டின் மேல் மாடிதான் அது. "எல்லோரும் மேலே வாங்க"

மொட்டை மாடிக்கு விரைந்தோம். ஒரு பெரிய அளவு லாரியில் மொத்த வீட்டின் பொருட்களையும் ஏற்றி விட்டது போல மாடி காட்சியளித்தது. மழைக்காக ஒரு குடையையும் பிடித்தபடி ஒரு மரப்பெட்டியின் மேல் அமர்ந்திருந்தார் எங்கள் பெரியம்மா.( பெரியம்மாவின் திறமையே தனிதான்). வேறு குடையில்லாத காரணத்தால் பெரிய தாம்பாளங்களை தலைக்கு மேல் பிடித்தபடி வெள்ளத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அது வந்ததாக தகவல் ஏதும் வரவில்லை.


அப்பாவை மட்டும் காணவில்லை. அம்மாவின் பாசம் கெட்டவார்த்தைகளாக உருவேற ஆரம்பித்த மாலை வேளையில் டப் டப் என்று புல்லட் ஒலிக்க அப்பா வந்தார். "நான் சொன்னேன்ல ரேடியோல செய்தி சொல்றாங்க கேளு" என்று டிரான்ஸிஸ்டரை காட்டினார். ஏதோ ஒரு கரகரப்பான குரல் - சரோஜ் நாராயணசுவாமி?- பவானி சாகர் உடையவில்லை என்பதை உறுதிபடுத்தியது. பிறகென்ன பெரியம்மா வீட்டில் விருந்தாடிவிட்டு, இரவு வீடு திரும்பினோம்.

மறு நாள் காலையும் மழைவிட்டபாடில்லை அறிவு வந்தான். 'மேட்டூர் அண ஒடைஞ்சிடுத்தாம். டோட்டல் தமிழ்நாடே வாஷ் அவுட் ஆகப் போகுதாம்" என்றான். உண்மையில் வாஷ்-அவுட் ஆனது யார் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதே போல் என்னுடைய மறதி வியாதியும் மனோ வியாதிதான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்குமே.  

                                                                                   -முற்றும்.

10:21 | Author: சாகம்பரி


 ஐம்பது வயதை நெருங்கும்போது ஏற்படும் ஒரு பாதுகாப்பு உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது.  உடல் நலம் மிக நன்றாகவே உள்ளது. என்னுடைய பெரியப்பாவின் ஐம்பதாவது வயதில் அவரது ஆறாவது விரலாக ஒரு சிறிய பெட்டி முளைத்துவிட்டது. அதில் ஜிகுஜிகுக்கும் உரைகளில் அழகிய வண்ணங்களுடன் மாத்திரைக் குடும்பங்கள் குடியேறியிருந்தன. என் அப்பா எப்படி என்கிறீர்களா? அவருக்கு ஜிப் வைத்த பேக். அப்படிப் பார்க்கும்போது என் வாழ்க்கை மிக சமர்த்தாகவே இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளில் "வயதாகிவிட்டதால் அதை மறந்துவிட்டேன்? எனக்கு செலக்ட்டிவ் அம்னீசியா" என்று திகார்வாசிகள் பேட்டி கொடுப்பதை படித்தபின் ஒரு பயம் தோன்றிவிட்டது. எனக்கும் மறதி வந்துவிடுமோ? மறந்தால்தான் என்ன? குடியா முழுகிப் போய்விடும்? என்று நினைப்பீர்கள். சரிதான், நான் ஐன்ஸ்டைன் போன்ற ஆராய்ச்சியாளனாக இல்லையென்பதாலும் என் மறதியால் உலகம் சுழல்வது நின்று போகாது என்றாலும் என்றைக்காவது தெருவில் செல்லும்போது எதிரில் வரும் என் மகனைப் பார்த்து "யார் வீட்டுப் பிள்ளையோ? என்னை மாதியே இருக்கிறான்." என்று நினைத்து அவனிடம் "உங்கம்மா யாருடா?" என்று கேட்கக் கூடிய அபாயம் நிகழலாம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவர், என்னை பல கேள்விகள் கேட்டு ஞாபக மறதி இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டபின் ஒரு ஆலோசனை கூறினார். மறதி வராமலிருக்க தனித்திருக்கும் சமயங்களில் சிறிய வயது சம்பவங்கள், வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கச் சொன்னார். "டாக்டர், அதெல்லாம் சரியாகத்தான் உள்ளது. என்னுடைய திருமண ஆல்பத்தை எடுத்துப் பார்த்தாலே அன்றைக்கு வைத்த உருளைக் கிழங்கு வறுவலின் வாசம்கூட நினைவு வருகிறது" என்றேன். "சம்பவங்களைத்தான் நினைவுகூற சொன்னேன், தண்டனைகளையல்ல" என்று பெரிதாக சிரித்துக் கொண்டார். பாவம், அங்கேயும் என்னவோ நடந்திருக்கிறது!

இப்போது நடப்பிற்கு வருவோம். தலைப்பிலிருந்தே நான் நினைத்துப் பார்க்கப் போகும் சம்பவம் எது என்று புரிந்திருக்கும். பவானி சாகர் அணை உடைந்த விசயம்தான். எப்போது உடைந்தது என்று யோசிக்கிறீர்கள்தானே. அதுதான் சொல்லுவோம்ல.

அது கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நாற்பதைக் கடந்த திருச்சிவாசிகள் எளிதாக நினைவுகூறமுடியும். ஐப்பசி மாதம் அடைமழை என்ற பழமொழி 'வரலாறு காணாத மழை'யை பெய்வித்து அப்போது வேலை செய்து கொண்டுதான் இருந்தது. சரியாக தீபாவளியுடன் வரும் மழை எங்களை வெடிவெடிக்க விடாமல் தடுத்து என் தந்தையின் பணப்பையினை பாதுகாத்துவிடும் -"மழைல வெடிபோட முடியாது. அடுத்த வருசம் வாங்கலாம்" என்று தப்பித்துவிடுவார்.

எங்களுடைய திட்டும், தந்தைமார்களின் வாழ்த்தும் போட்டிபோட ஒரு வருடம் மழைக்கு வெகு உற்சாகம் கிளம்பி விட்டது. தீபாவளியன்று தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து காவிரியில் வெள்ளத்தை வரவழைத்தது. சாப்பிட முடியாது மீந்து போனதை பிச்சைக்காரனுக்கு தாராளமாக இடுவது போல் காவிரியின் அளப்பரிய காட்டாற்று வெள்ளம் கிளை வாய்க்கால்களுக்கு வாரி வழங்கப்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்தது.

பார்வதி பரமேஸ்வரன் திருமணத்தின்போது தாழ்ந்துபோன பூமிபோல திருச்சிக்கே உறையூர்தான் தாழ்வான பகுதி. வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் காகிதக் கப்பல்விடும் மகிழ்வை தந்தாலும் அதில் நீச்சல் இட்டு செல்லும் ஊர்வன வகைகள் திகில் கிளப்பும்.  ஒரு சமயம் வான்வழியே உணவுப் பொட்டலம் வழங்கியதும் நடந்தேறியது. இப்படி எங்களுடைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் வருடாவருடம் குறையில்லாமல் நடந்தது.

அந்த வருடமும் மழையையும், வெள்ளத்தையும் விருந்திற்கு வந்த மாப்பிள்ளையை சமாளிப்பதுபோல் சமாளிக்க முயற்சித்தோம். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் நிலமை மோசமானது. ஒரு மதிய வேளையில், எங்கள் சினேகிதன் 'அறிவு' எனப்படும் அறிவழகன் கலவரமிக்க பார்வையுடன் ஓடி வந்தான். "டேய், பவானி அணக்கட்டு உடைஞ்சிடுத்தாம்டா. இரண்டு பனமர அளவுக்கு தண்ணி வருமாம்டா. இங்கிருந்து வேற எங்கியாவது போப்போறோம்டா" 
                                                                      தொடரும்.

சஸ்பென்ஸ் வைப்பது, திடுக்கிடும் திருப்பங்கள் இவற்றில் செய்யும் திறமை எனக்கு இல்லை என்று நான் நம்புகின்ற  காரணத்தால் அடுத்த பகுதியை உடனடியாக தொடர இந்த இணைப்பை கிளிக்கவும்.    

பவானி சாகர் உடைந்த கதை part-2
இது அந்த அணை அல்ல. இதைவிட பெரியதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
                                  
09:23 | Author: சாகம்பரி
    பொருளீட்டும் முயற்சியில் மும்பை, பெங்களூர், பூனே என்று வெவ்வேறு திசைக்கு பிரிந்து தொலை தூரத்தில் இருந்தாலும் , வருடம் ஒரு முறை ஒன்றாக சகோதர சகோதரிகள் சில நாட்கள் சேர்வது வழக்கம். இது மூத்தவர்களுக்கு சிறிய வயதின் நினைவுகளின் மறுபதிப்பாக இருந்தாலும், அதே பிணைப்பு இளையவர்களுக்கிடையிலும் இருக்கவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கொருமுறையாவது கண்டிப்பாக சந்திப்போம். வழக்கமான விருப்பம் கொடைக்கானல்தான். ஆனால் சென்றமுறை  விடுமுறைக்கு அங்கு சென்று தங்குமிடம், உணவிற்காக சிரமப்பட்டது நினைவிற்கு வந்ததால் இந்த முறை எங்கள் விருப்பம் முன்னார் எனப்படும் மூணார் ஆனது.

சுற்றுலா திட்டமிடும்போது ரொம்பவும் திட்டமிட மாட்டோம். எங்களுடைய  பயண அமைப்பாளர் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவருடைய நண்பர் மூணாறில் தங்கும் விடுதி வைத்திருப்பதாக தெரியவுமே கிளம்பிவிட்டோம். மலையாள உச்சரிப்புடன் பேசிய நண்பரின் குரலில் ஏதோ தயக்கம். தங்கும் விடுதியின் வாடகை அதிகமிருக்குமோ என்றுகூட தோன்றியது. அதன் உண்மையான காரணம் பிறகுதான் புரிந்தது. இரண்டு சுமோவை கேட்டவர்களை மறுத்து ரைனோவை தருவித்ததில் எங்களுக்கு சற்று வருத்தம்தான். சுமோவில் இருக்கும் சுதந்திரம் ரைனோவில் இல்லை. சுமோவின் பின்பக்கம் குட்டீஸ்கள் ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.  கட்டிவைக்கப்பட்ட உணர்வுடன் மலை ஏறிய பின்னர்தான் புரிந்தது. மிகவும் நெருக்கடியான மலைவளைவுகள் (கொடைக்கானலைவிட அதிகம்) ஒரு படகைப்போல எங்கள் வாகனத்தை ஆட்டியெடுக்க உள்ளேயே குலுங்கிக்கொண்டதோடு சிரமம் முடிந்துவிட்டது. சுமோ எனில் எண்ணிலடங்கா வண்ணம் வாகனத்திற்குள்ளேயே உருண்டிருப்போம். கடவுளுக்கு நன்றி!

போடி தாண்டியதுமே, மலையேற்றம் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் மலையேறியதுமே சில்லிட்ட காற்று நெற்றியில் இரத்தத்தை உறைய வைத்தது. மூனாரில் சாரல் மழையாம். இப்போது புரிகிறதா மலையாள நண்பரின் தயக்கத்தின் காரணம். பச்சை போர்வை விரித்ததுபோல ஆரம்பித்த மலைச்சாலையை பார்த்து  இளையவர்கள் ( 5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள்) போட்ட கூச்சலில் எங்களுக்கு முகம் மலர்ந்தது.   " ஹேய் , இது ஏலக்காய் செடி." " இதிலேருந்துதான் டீ தாயாரிக்கிறார்களாம்" என்று கண்ணில் பட்ட செடிகளை சுட்டியபடி உற்சாகக்குரல்கள். ஏலக்காய் செடியில் இப்போது காய் எதுவும் விட்டிருக்கவில்லை. ஒரு முறை மேகமலை சென்றபோது பார்த்த நினைவு வந்தது. இன்னும் சில பழ மரங்கள். அந்த மண்ணிற்கே உரியது. பாதி மலையேறவுமே  வாகனத்தை நிறுத்தி சோதனை. கேரள எல்லையாம். எங்கள் அலைப்பேசியில் வரவேற்பு செய்திகள் வர ஆரம்பித்தன. ரோமிங் கட்டணத்தை நினைவுபடுத்துகிறார்களாம். மலை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள். கலைந்த போர்வை போல தோற்றமளித்து எடுத்து உதறி மீண்டும் சரியாக போர்த்தத் தூண்டுகிறது.

மீதிருந்த மலை வளைவுகளில் குலுங்கி குலுங்கி - 24 என்று பார்த்த நினைவு- வழியில் தென்பட்ட கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டங்களை கடந்து மூணாறை அடைந்தோம். பழைய மூணார் , புது மூணார் என்று பிரிக்கின்றார்கள். நிறைய உணவுவிடுதிகள் பழைய மூணாரில்தான் உள்ளன. நாங்கள் புது மூணாரில் தங்கினோம். நிறைய பேர் தங்கும் வசதியுடன் ரிசார்ட்ஸ் கிடைக்கின்றது. நாங்கள் தங்கியது உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி. சிறிய குழந்தைகள் இருக்கும்போது இதைத்தான் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சமயத்தில் பசிக்கும்.  ஆனாலும், மிக அழகாக உடுத்திக் கொண்டு கிளம்புவதில் சமர்த்தர்கள். சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலே இருந்தது. எங்களுக்கிருந்த விடுமுறையை கணக்கிட்டு சிலவற்றை நாங்கள் தேர்வு செய்ய, மழையால் திகில் கிளப்பிய வனாந்தரப்பகுதிகள் எங்களை சில இடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.
   
  எரவிக்குளம் தேசிய பூங்கா- சிறப்பு மிக்க வரையாடுகள் பார்க்கலாம். நாங்கள் சென்றபோது மழையினால் மண் சரிவு ஏற்பட்டு பூங்கா மூடப்பட்டுவிட்டது. 

   
  மாட்டுபட்டி அணை - பெரிய நீர் தேக்கம். சுற்றுலா பயணிகள்  ஷாப்பிங்               
                          இடமாகவும் இருக்கிறது.   
ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி - மலையேறுபவர்களுக்கு சொர்க்கம். எங்களைப் போன்றவர்களுக்கு வழுக்குப் பாறைகள் நிறைந்த திகில் பூமி.

 எக்கோ பாயிண்ட் - மலை முகடு. மூணாறைவிட அதிக உயரத்தில் உள்ள இடம். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகரித்து காது அடைத்துக் கொண்டு பேசுவது புரியாமல் தவித்தோம். சூடான தேநீர் மட்டுமே அதிக விருப்பமாக இருந்தது. 

 ஹைடெல் பார்க் - பூக்களின் தோட்டம். புகைப்பட பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

 குறிஞ்சி பூங்கா - இது போடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. . குதிரை சவாரி அருமை.



சுற்றிப்பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளன. கொடைக்கானல் போல கூட்டம் இல்லை. நமக்கே நமக்கான குளுமை. சமயத்தில் தலை வலித்தால் இருக்கவே இருக்கிறது மசாலா தேநீர். காடை முட்டை, வேக வைத்த சோளக்கதிர், சீமை இலந்தை போன்றவை கிட்டுகின்றன.  ஒரு உற்சாகமான மன நிலையில் இவற்றை அனைத்து தரப்பினரும் உண்ணுகிறார்கள்.

அதிக பட்ச குளுமையை தந்த காட்டுப்பகுதிகள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் உள்ள தேயிலைத் தோட்டங்கள். பெரும்பாலும் வட இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகள். இட்லிக்காக இரவில் பழைய மூணாரை தேடி யாத்திரை. இரவின் அமைதியில் இன்னும் கூடிப்போன உறைய வைக்கும் குளிர் - சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமோ?. மழையுடன் மலைப்பாதையில் திகிலூட்டும் பயணம் - காரோட்டி கடவுளாக தோன்றினார்.. விலை மலிவாக கிட்டிய நல்ல தரமான மசாலா பொருட்கள், டாடாவின் தேயிலை விற்பனை அங்காடிகள். இவைதான் எங்கள் பயணத்தின் கொசுறுச்செய்திகள்.

என்னுடைய அறிவுரை: சரியான நேரம் பார்த்து மூனார் செல்லுங்கள். மூனார் குளிரை அலட்சியமாக நினைக்காமல் கம்பளி உடைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது.  கொடைக்கானல் போல் இல்லாமல் சில சுற்றுலா இடங்கள் தனியார் ஏற்படுத்தியதாக உள்ளன. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கிடு கிடு பள்ளங்கள், தொலைவில் தெரியும் மலை முகடுகள், பச்சை பசேலென்ற காட்சிகள், அழகாக பூத்துக் கொலுங்கும் மலர்கள்- நீங்கள் இயற்கை விரும்பிகள் எனில் மூனார் ஒரு சொர்க்கம்தான்.

மலை இறங்கி குளிரிடம் விடைபெற்று போடியின் வெயிலை  உணர்ந்தபோது,  வந்த பாதையை திரும்பிப் பார்த்தபடி குட்டிம்மா கூறியது " ஹம் ஃபிர் சே ஆயேகா" - ( திரும்பவும் வரலாமா?)  அதுதான் எங்களின் விருப்பமும்.