00:17 | Author: அன்னைபூமி
இதுக்குத்தான் பொறந்தோமா. . . ?
இத்தனைநாள் வளர்ந்தோமா. . . ?
பொனத்தைஎல்லாம் கொத்துகொத்தா
பொதைக்கத்தான் இருந்தோமா. . . ?

வீடுவாசல் துணிமணின்னு
சேத்துவச்ச உசுரயெல்லாம்
தாயாமதிச்ச கடலுக்குள்ள
தாரைவார்க்கத்தான் நின்னோமா. . . ?

ஏழையா இருந்தாலும் பரவாயில்ல
எப்படியும் வாழ்ந்தது விடுவோம்னு
இதயங்கள் கண்ட கனவெல்லாம்
குழிக்குள் மொத்தமா அடங்கிருச்சே. . . ?

முத்துப்போல சிரிக்கும் பிஞ்செல்லாம்
பெத்துவளர்த்த அம்மாவோட
மடியில்படுத்தது போதாதுன்னு
மண்ணுக்குள் படுக்கவும் போயிருச்சே. . .

சூரிய உதயத்த எதிர்பார்த்து
கடற்கரையில காத்துகிடக்க - அந்த
சூரியன் உதிக்கும் முன்னால
சாவு வந்து உதிச்சுடுச்சே. . .

கடற்கரையெல்லாம் உருமாறி
மயானக்கரையா மாறிடுச்சே
காலைப் பூக்களாய் மலர்வதுஎல்லாம்
காகிதப் பூக்களாய் மிதந்திடுச்சே. . .

மீன்பிடிக்க கடலுக்குள்ள
தெனந்தெனமும் நாங்க போவோம்
மீண்டும் போவோம் கடலுக்குள்ள

மாண்டு போனவுங்க அஸ்த்தியக்கரைக்க

ஒத்தாளு செத்தா நாலுபேரு
ஊரே செத்தா தூக்கயாறு  
அத்தன பேரையும் இழந்துவிட்டு
அநாதையா நிக்குது பல ஊரு

ஆறுல சாவு நூறுல சாவு
ஆன்றோர்கள் சொல்லிவச்ச பழமொழி
ஆயிரமாயிரம் சாவு அறைநொடிச்சாவு - இது
ஆழ்கடல் சொல்லிப்போன புதுமொழி. . .






  
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: