00:09 |
Author: அன்னைபூமி
(கணவனையிழந்த தாயொருத்தி தன் குழந்தையிடம் தான் பட்ட கஷ்டங்களைத் தாலாட்டாகக் கூருவது)
நான் பெத்த செல்வமே. . .
நாடாளும் ராசாவே
ஓந்தாயி பட்டதெல்லாம்
ஒழுங்காகக் கேட்டிடடா. . .
பாடாதிக் குடும்பத்தில
வேண்டாக்குறையா நான்பொறந்தேன்
பாதிக்கஞ்சி குடிச்சுத்தான்
படுபாவி நான்வளர்ந்தேன். . .
எங்கெங்கோ கடன்பட்டு
எத்தனையோ தொல்லபட்டு
ஏதோ ஒரு ஒப்புக்கு
கல்யாணம் நான் முடிச்சேன். . .
புருசங்காரன் வந்தபின்னே
பொலம்பல் கொஞ்சம் தீருமுன்னே
மஞ்சள்வாசன மாறுமுன்ன
மண்ணுக்குள்ள போயிட்டாரே. . .
கல்சுமக்கும் வேளையில
தலைசுத்தி நன்விழுந்தேன்
வயித்துக்குள்ள நீ இருக்குறத
அப்பத்தான் நான் அறிஞ்சேன். . .
உன்னப்பெத்து வளத்தெடுக்க
என்னத்தவிர யாருமில்ல - அதனால
கருத்தரிச்ச சேதிகூட - எனக்கு
கள்ளிப்பாலா கசந்திருச்சே. . .
உயிரெல்லாம் ஊணாக்கி
உன்னத்தான் நான்சுமந்தேன்
வயிறெல்லாம் உதபட்டும்
வாடாம உன்ன வளத்தேன். . .
ஒன்னத்தான் பெத்தெடுக்க
ஓராயிரம் கஷ்ட்டப்பட்டேன்
ஒரு நாதிகூட இல்லாம
ஒன்ன நான் பெத்தெடுத்தேன். . .
பகல் ராத்திரி பாராம
பலவேலை நான் செஞ்சேன்
ஒருவாய் சோறூட்டத்தான்
அப்படியெல்லாம் நான் உழச்சேன். . .
கடல்போல சுமையெல்லாம்
வாழ்வுமுழுசும் வந்தாலும்
உன்முகத்தப் பாத்தாக்கா
எல்லாமே சுகந்தானடா. . .
Category:
சகாவின் கவிதைகள்
|
0 comments: